அண்மையில் பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15 இலட்சம் ரூபா நிதியை இலங்கையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பைரஹா தனியார் நிறுவனம் அன்பளிப்பு செய்துள்ளது.
இதில் 10 இலட்சம் ரூபா நிதிக்கான காசோலையை கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நேற்று முன்தினம் கர்தினால் இல்லத்தில் வைத்து சீனன் கோட்டை பள்ளிச் சங்க பிரதித் தலைவரும் பைரஹா நிறுவன முகாமைத்துவ பணிப்பாளருமான யாகூத் நளீம் கையளித்தார்.
பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான மனிதாபிமானமற்ற இந்த தாக்குதலை யாகூத் நளீம் வன்மையாக கண்டித்ததோடு சம்பவத்தில் பலியானவர்களுக்காக அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவ மக்களுக்கும் இடையில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒற்றுமை குறித்தும் இதன்போது அவர் சுட்டிக் காட்டினார். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பைரஹா நிறுவனம் இந்த நிதியுதவியை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முன்வந்த பைரஹா தனியார் நிறுவனத்திற்கு நன்றி தெரிவிப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பைரஹா நிறுவன ஸ்தாபகரான காலம் சென்ற எம்.ஐ.எம் நளீம் ஹாஜியாருடன் தனக்கிருந்த நீண்ட கால மிகநெருங்கிய தொடர்பினை ஞாபகப்படுத்திய கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, தான் பேருவளை பகுதியை சேர்ந்தவர் என்பதையும் நளீம் ஹாஜியாரின் இன, மத பேதமற்ற நற்சேவைகளையும் இதன்போது நினைவு கூர்ந்தார்.
இதேவேளை நீர்கொழும்பு, கட்டானை கத்தோலிக்க தேவாலய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 5 இலட்சம் ரூபா நிதியை ஏலவே மற்றொரு நிகழ்வில் பைரஹா நிறுவனத்தின் சார்பில் அதன் தலைவர் யாகூத் நளீம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேலதிகமாக தாக்குதல் சம்பவத்தில் தாய் தந்தைகளை இழந்த கட்டான பகுதியைச் சேர்ந்த 5 பாடசாலை சிறார்களுக்கு அவர்களது கல்விப் பணி முடியும்வரை புலமைப்பரிசில் பெற்றுக் கொடுக்கவும் பைரஹா தனியார் நிறுவனம் முன்வந்துள்ளது.
இந் நிதியை கையளிக்கும் நிகழ்வில் பைரஹா நிறைவேற்று பணிப்பாளர் ரியால் யாகூப், விற்பனை சேவை பொது முகாமையாளர் கிளவர் பெர்னாந்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.
vidivelli