முஸ்லிம் சமய விவகார அமைச்சர் 400 க்கும் மேற்பட்ட தௌஹீத் பள்ளிவாசல்களைப் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருப்பது அபாண்டமான பொய்யாகும். அரசியல்வாதிகள் இவ்வாறான பொய்களைக் கூறி நாட்டைத் தீயிட முயற்சிக்கக்கூடாது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாசீன் தெரிவித்தார்.
2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை முஸ்லிம் சமய விவகார அமைச்சர் 400 க்கும் மேற்பட்ட தௌஹீத் பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். கண்டி மாவட்டத்தில் மாத்திரம் இவ்வாறான 50 பள்ளிவாசல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘2015 ஆம் ஆண்டின் பின்பு சட்ட ரீதியற்ற முறையில் பதிவு செய்யப்படாது இயங்கிய பள்ளிவாசல்கள் தேவையான ஆவணங்களைப் பெற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்கள் தௌஹீத் பள்ளிவாசல்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவினால் எவ்வாறு கூற முடியும். பள்ளிவாசல்கள் அனைத்தையும் பதிவு செய்து அவற்றை நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டு வருவதையே வக்பு சபையும் முஸ்லிம் சமய விவகார அமைச்சும் செய்துள்ளது. தயாசிறி ஜயசேகர படித்தவர். எனது நெருங்கிய நண்பர். அவர் இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொள்ள முன்பு என்னிடம் தெளிவுகளைப் பெற்றுக் கொண்டிருக்கலாம்.
பள்ளிவாசல்கள் மற்றும் அரபு மத்ரஸாக்களின் பதிவுகளில் மேலும் சட்ட ரீதியான விடயங்களை உட்புகுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளன. அதற்கான கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன. புத்திஜீவிகளின் ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
பள்ளிவாசல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஒரு சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும். பள்ளிவாசல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஏதும் சந்தேகங்கள் ஏற்படும் போது பள்ளிவாசல் நிர்வாகத்தையும் பொறுப்பாளர்களையும் விசாரணைக்குட்படுத்த முடியும்.
தீவிரவாத செயல்களைப் புரிந்துள்ளவர்கள் அரபு மத்ரஸாக்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் என குற்றம் சுமத்த முடியாது. தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் அரபுக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவரல்ல. அவர் அரபுக் கல்லூரியிலிருந்து இடை நடுவில் விலக்கப்பட்டவர்’ என்றார்.
vidivelli