முகத்தை முழுமையாக மறைக்கவும் தீவிரவாத பிரசாரத்தில் ஈடுபடவும் தடை
வெளிநாட்டவர்களும் மத பிரசாரங்களில் ஈடுபட முடியாது
நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக அவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவது நேற்று முன்தினம் முதல் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் விரிவாக விளக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ள 2120/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி
அறிவித்தலானது முகத்தை மறைத்து ஆடை அணிவதை தடை செய்வது தொடர்பிலும் இலங்கைப் பிரஜைகளோ அல்லது வெளிநாட்டவரோ இலங்கையில் தீவிரவாத சிந்தனைகளை போதிப்பது தொடர்பில் தடைகளை விதிப்பது குறித்தும் விபரிப்பதாக அமைந்துள்ளது.
இதற்கமைய ஒருவரது அடையாளத்தை மறைக்கும் வகையில் முழு முகத்தையும் மூடக் கூடிய எந்தவொரு ஆடையையும் பொது இடங்களில் அணிய முடியாது. முழு முகம் என்பது, ஒருவரது காதுகள் உள்ளிட்ட முழு முகத்தையும் குறிப்பதாக அமையும். பொது இடம் எனக் குறிப்பிடுவது, பொது வீதிகள், கட்டடங்கள், அடைக்கப்பட்ட அல்லது திறந்த வெளிகள், வாகனங்கள் அல்லது ஏனைய போக்குவரத்து சாதனங்களைக் குறிப்பதாக அமையும். பொது வீதிகள் என்பது, பொது வீதிகளுடன் தொடர்புபடும் பொதுப் பாலத்தின் மேலான ஏதேனும் வீதிகள், நடைபாதைகள், வாய்க்கால், -ஏரிக்கரை, சாக்கடை என்பவற்றையும் உள்ளடக்கும். இதேவேளை எந்தவொரு நபரும் மத அல்லது ஏதேனுமொரு தீவிரவாத கருத்தினை போதிப்பது பரப்புவது ஊக்குவிப்பது அல்லது ஏதேனுமொரு தீவிரவாத செயலை ஊக்குவிப்பது மற்றும் அதில் ஈடுபடுபதும் இவ் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இலங்கைப் பிரஜையல்லாத ஒருவர், ஆசிரியராக விரிவுரையாளராக, பயிற்றுவிப்பாளராக இருந்து மத அல்லது ஏதேனுமொரு தீவிரவாத கருத்தினை போதிப்பது,பரப்புவது, ஊக்குவிப்பது அல்லது ஏதேனுமொரு தீவிரவாத செயலை ஊக்குவிப்பது மற்றும் அதில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கைப் பிரஜையல்லாதவர்கள் மத, தீவிரவாத கருத்துக்களுடன் தொடர்புடைய கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் தடை செய்யப்பட்டதாகும். இவ்வாறான மேற்படி செயற்பாடுகளில் எவரேனும் ஈடுபடுவது தொர்பில் அப் பகுதி கிராம சேவகருக்கு தகவல் கிடைக்குமிடத்து அவர் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அது குறித்து தெரியப்படுத்த வேண்டும்.
அத்துடன் மேற்படி செயற்பாடுகளுக்கு உதவியளிப்பதும் மேற்பார்வை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் சிக்கி 253 பேர் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதன் கீழ் மேற்படி தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கிடையில் முறையான விசா அனுமதிப்பத்திரமின்றி நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். முறையான விசா அனுமதிப் பத்திரம் இன்றி நாட்டிலுள்ள மத பாடசாலைகளிலும் சில நிறுவனங்களிலும் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்த்தன, முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
vidivelli