பயங்கரவாத ஊடுருவல் நகர்வுகள் குறித்து ஆராய கோத்தா தலைமையில் பாதுகாப்பு படையணி
முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள், முன்னாள் புலனாய்வு அதிகாரிகள் இணைவு
பயங்கரவாத ஊடுருவல் நகர்வுகள் குறித்து ஆராயவும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆராயவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தலைமையில் முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளையும் மற்றும் புலனாய்வு அதிகாரிகளையும் ஒன்றிணைத்த குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு நாட்களில் அறிக்கையொன்றை ஜனாதிபதிக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதுள்ள நிலைமைகள் குறித்தும் பாதுகாப்பு பலவீனத்தன்மை மற்றும் எவ்வாறான நகர்வுகளை கையாண்டு பாதுகாப்பை பலப்படுத்துவது என்ற காரணிகளை ஆராயும் வகையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தலைமையில் முன்னாள் பாதுகாப்பு உயர் பிரதானிகள் குழுவுடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று முன்தினம் இரவு விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள தனது இல்லத்தில் எதிர்க்கட்சி தலைவர் இந்த சந்திப்பை நடத்தியிருந்தார். முன்னாள் பாதுகாப்பு தளபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் ஆகியோரின் அனுபவங்களை பயன்படுத்தி தற்போதுள்ள நிலைமைகளை ஆராய இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் நிலைமைகளை உடனடியாக அறியத்தர எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ பணித்துள்ளார்.
இதில் பாதுகாப்பு பிரதானி ஜகத் ஜயசூரிய, முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்நாயக, முன்னாள் விமானப்படை தளபதி ரொஹான் குணதிலக, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, அட்மிரல் ஜகத் கொலம்பகே, முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய, சந்திரா பெர்னாண்டோ, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வாகிஷ்ட, முன்னாள் ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் உள்ளடங்கிய வகையிலே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் புலனாய்வுத்துறை உயர் அதிகார்கள் சிலரும் உள்ளடங்குகின்றனர். இவர்களும் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் குழு நிலைமைகளை ஆராய்வதுடன் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த அறிக்கையில், இவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றும் இலங்கைக்குள் இனியும் செயற்பட முயற்சிக்கலாம் என சந்தேகிக்கப்படும் குழுக்கள், மதவாத அமைப்புகள் குறித்தும் முழுமையான அறிக்கை ஒன்றினை தயாரிக்கவுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த குழு நாட்டின் சகல பகுதிகளிலும் தமது இரகசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. தேசிய பாதுகாப்பை முதன்மைப்படுத்திய வேலைத்திட்டமாக இது முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இது குறித்த அறிக்கையை ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு பிரதானிகளுக்கும் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருவரும் ஜனாதிபதியை சந்தித்து அடுத்த இரண்டு நாட்களில் இந்த வேலைத்திட்டம் குறித்த முழுமையான தெளிவுபடுத்தலை முன்னெடுக்கவுள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்பு தரப்பின் செயற்பாடுகளுடன் இணைந்து செயற்படாத வகையிலும் எனினும் புலனாய்வுத்துறை உதவிகளையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்ள அரசாங்கத்தின் ஒத்துழைப்பை கோரவுள்ளதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் புலனாய்வு சேவையில் ஈடுபட்ட நபர்களை இதன்போது பயன்படுத்திக் கொள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தீர்மானம் எடுத்துள்ளார் என்பதும் அறிந்துகொள்ள முடிகின்றது.
-Vidivelli