சாய்ந்தமருது வீட்டில் உயிரிழந்தவர்கள் ஸஹ்ரானின் தாய், தந்தை, சகோதரர்கள்
மனைவியும் குழந்தையும் காயங்களுடன் உயிர் தப்பினர்
சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத் திட்ட கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவரும், நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான காத்தான்குடியைச் சேர்ந்த ஸஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் என தெரிய வந்துள்ளது.
இதேவேளை இச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இருவரும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியும் அவரது குழந்தையுமே என்றும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது உயிரிழந்த 15 பேரில் ஸஹ்ரான் ஹாஷிமின் தந்தை மொஹமட் ஹாஷிம், சகோதரர்களான மௌலவி ஸைனி ஹாஷிம் மற்றும் ரிழ்வான் ஹாஷிம் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் ஸஹ்ரான் ஹாஷிமின் தாயார், மௌலவி ஸைனியின் மனைவி மற்றும் இரு குழந்தைகள், ரிழ்வான் ஹாஷிமின் மனைவி மற்றும் இரு குழந்தைகள், ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரி, அவரது கணவர் மற்றும் அவர்களது ஒரு குழந்தை ஆகியோரும் இதில் உயிரிழந்துள்ளனர்.
இக் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு சற்று முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தோன்றுவோர் ஸஹ்ரான் ஹாஷிமின் தந்தை மொஹமட் ஹாஷிம், சகோதரர்களான மௌலவி ஸைனி ஹாஷிம் மற்றும் ரிழ்வான் ஹாஷிம் ஆகியோர் ஆவர். ரிழ்வான் ஹாஷிமின் உடலில் தற்கொலைக் குண்டு அங்கி பொருத்தப்பட்டுள்ளது. முன்னராக நீண்ட தாடியைக் கொண்டிருந்த மௌலவி ஸைனி, இவ் வீடியோவில் முழுமையாக முகச் சவரம் செய்த நிலையில் தோன்றுகிறார். அவர் தனது ஒரு கையில் ஏகே47 துப்பாக்கியையும் மறு கையில் தனது மகனையும் வைத்திருந்தவாறு குறித்த வீடியோவில் தோன்றி பேசுவதையும் அவதானிக்க முடிகிறது.
ஏலவே குண்டுப் பரிசோதனை ஒன்றின் போது தற்செயலாக குண்டு வெடித்ததில் ரிழ்வான் ஹாஷிம் படுகாயமைந்ததில் அவரது கை விரல்கள் மற்றும் கண், காது ஆகியவை பாதிக்கப்பட்டிருந்ததாக பொலிசார் கூறியிருந்தனர். இந் நிலையில் அவர் தோன்றிய வீடியோவிலும் அவரது இரு கைகளினதும் பல விரல்கள் அகற்றப்பட்டிருப்பதும் கண் பாதிக்கப்பட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.
இதேவேளை இவ்வீட்டினுள் இடம்பெற்ற மூன்று குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தோரில் பலரின் உடல்கள் முற்றாகக் கருகி அடையாளம் காண முடியாதவாறு பாதிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் இவ்வுடல்களை அடையாளம் காண்பதற்கான மருத்துவ பரிசோதனைகள் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்றன.
இதற்கிடையில் இச் சம்பவத்தின்போது குறித்த வீட்டிலிருந்து இருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியான ஹாதியா மற்றும் மகளான பாத்திமா ருஸைனா( வயது 4 ) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி படுகாயமடைந்த நிலையில் அம்பாறை மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தை சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிலிருந்து இக் குழந்தையை இராணுவத்தினர் மீட்டு வருகையில் ”வாப்பா… வாப்பா…” என அழும் காட்சி பலரது உள்ளங்களையும் உறைய வைத்துள்ளது.
காயமடைந்த குறித்த இருவரும் ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி மற்றும் குழந்தைதான் என்பதை அவரது சகோதரியான மதனியா ஹாஷிம் நேற்று உறுதிப்படுத்தினார்.
ஸஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தவர்கள் 16 பேரடங்கிய குழுவினர் கடந்த 18 ஆம் திகதி முதல் காத்தான்குடி பிரதேசத்திலிருந்து வெளியேறி மறைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்திலுள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பலர் தங்கியிருப்பதாக பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து படையினர் அங்கு மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இவர்கள் தம்மிடமிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தம்மைத்தாமே மாய்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவத்தில் ஸஹ்ரானின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு ஆண்கள், நான்கு பெண்கள் மற்றும் ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில் படையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட சமயம் உயிரிழந்த ஆணின் சடலம் யாருடையது எனும் தகவல் நேற்று மாலை வரை உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையில் குருநாகல் மாவட்டத்தின் கெகுணகொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியின் வீட்டில் நேற்றைய தினம் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் அவரது குடும்பத்தினரும் பொலிசாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.
vidivelli