கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார்.
நேற்று மாலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது, புனித ஈஸ்டர் தினத்தை கரி நாளாக்கிய இந்த சம்பவத்தை நாங்கள் சிறியதாக எடுத்துக்கொள்ள முடியாது. அதே போன்று இதனை வைத்து யாரும் அரசியல் செய்வார்களாயின் அதை விட கேவலமான ஒன்றாக இருக்க முடியாது.
புலிகள் இயக்கத்தில் தற்கொலைத் தாக்குதலை நடாத்திய கரும்புலிகளுக்கு இதனை செயற்படுத்த சுமார் 20 வருடங்கள் எடுத்தன. ஆனால் இந்த மோசமான கயவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறான ஒரு ஈனச்செயலை மேற்கொண்டு ஒரே நாளில் இத்தனை அழிவுகளை உண்டு பண்ணியிருக்கின்றனர். இதன் மூலம் உயிர்களைப் பலி கொண்டது மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரின் வாழ்வை சீரழித்துள்ளனர்.
இவ்வாறான செயலை நினைத்து நினைத்து சுமார் 20 இலட்சம் முஸ்லிம்களும் அவர்களின் வழிகாட்டல் இயக்கமான ஜம்இய்யதுல் உலமாவும் பெரும் கவலை கொண்டிருப்பதுடன் தினமும் வேதனையால் வாடிக்கொண்டிருக்கின்றன.
அது மாத்திரமன்றி இந்த சமூகம் பகிரங்கமாக இந்த செயலை கண்டித்திருக்கின்றது. அது மாத்திரமன்றி இந்த சம்பவத்தின் சூத்திரதாரியான சஹ்ரான் என்பவரினதும் புகைப்படத்தையும் ஆவணங்களையும் பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பித்தும் பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுக்காதது குறித்து இன்றும் ஜம்இய்யதுல் உலமாவும், முஸ்லிம் சமூகமும் வேதனையுடன் இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து எங்களிடமும் கேள்வி கேட்கின்றனர்.
இந்த நாட்டிலே மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படக்கூடாது என்பதில் முஸ்லிம் சமூகம் மிக விழிப்பாக இருக்கின்றது. அது மாத்திரமின்றி இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறிய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டுமென சிந்திக்கின்ற செயற்படுகின்ற, தயாராக இருக்கின்ற எங்களைப்போன்ற அரசியல்வாதிகளை இந்த பயங்கரவாதிகளுடன் சம்பந்தப்படுத்தி அவர்களுக்கு உற்சாகப்படுத்த வேண்டாமெனவும், உதவி செய்ய வேண்டாமெனவும் நான் விநயமாகவும் கேட்கின்றேன். ஏனைய பயங்கரவாதிகள் போன்று இவர்களை சாதாரணமானவர்களாக நினத்து எங்களுடன் முடிச்சுப் போட வேண்டாமெனவும், நாட்டை குட்டிச்சுவராக்க வேண்டாமெனவும் பணிவாகக் கேட்கின்றேன்.
வணாத்தவில்லுவில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன, அதனுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்ட போதும் அவர்களை விடுவிக்க செய்ய அரசியல்வாதிகள் பேசியதாகச் சொல்லப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடம் நான் பகிரங்கமாகக் கோரிக்கை விடுக்கின்றேன். இது தொடர்பில் இந்த சபையில் நீங்கள் உறுதி செய்ய வேண்டும். வணாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவரை விடுவியுங்கள் என்று பொலிசாருக்கோ, அரசியல் தலைமைகளுக்கோ எந்த அரசியல்வாதி பேசியது என்று இந்த சபையில் தெரியப்படுத்த வேண்டும். அல்லது அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும். யாராவது பேசியிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை விடுத்து இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி இந்த சபையையும் நாட்டு மக்களையும் திசை திருப்ப வேண்டாமென கேட்கின்றேன்.
அது மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுடன் இணைந்து பேராயர் மெல்கம் ரஞ்ஜித்தை சந்தித்து எமது வேதனையை வெளிப்படுத்தினோம், ஜம்இய்யதுல் உலமா பல ஊடக சந்திப்புக்களை நடத்தியது. எனினும் ஊடகங்கள் அவற்றை சரிவர வெளிப்படுத்தவில்லை. சில ஊடகங்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றன எனவும் தெரிவித்தார்.
vidivelli