ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்
முஸ்லிம் மக்களுக்கும் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அனைவரையும் இணைத்துக்கொண்டு நாம் இந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், அவசரகால சட்டத்தினூடாக இங்கு பரவியுள்ள பயங்கரவாத குழுக்களை கைதுசெய்யும் அதிகாரம் இராணுவத்திற்கும், தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரம் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேடுதலில் மிகமுக்கியமான ஒருசிலர் கைதுசெய்யப்பட்டு அவர்களினூடாக முக்கியமான தகவல்கள் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது. இந்த பயங்கரவாத குழுவில் ஆயுதங்களை கொண்டுவரும் நபர்கள், தற்கொலை குண்டுதாரிகள் உள்ளனர். பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மட்டுமே நாம் கட்டுப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார் .
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய அவசர பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு நான் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்று பாராளுமன்றம் கூடியுள்ளது, இதன்போது எதிர்க்கட்சி தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர், ஜே.வி.பி தலைவர் ஆகியோருடன் பேசி இந்த தீர்மானம் எடுத்தேன். கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்து எமது அனுதாபங்களை நாம் வெளிப்படுத்துகின்றோம். இன்று நாம் உலகளாவிய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்ற பயங்கரவாத நகர்வின் பின்னும் உலகளாவிய பயங்கரவாத இணைப்புகள் உள்ளமையே உண்மையாகும். இதற்கு முன்னரும் நாம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு முகங்கொடுத்தோம். இதன்போதும் நாம் கீழ்மட்டம் வரையில் அவதானம் செலுத்திய காரணத்தினால் தான் யுத்தத்தை வெற்றிகொண்டோம். 2009 ஆம் ஆண்டுடன் அனைத்துமே முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இன்று இருப்பது விடுதலைப்புலிகளின் அரசியல் பயங்கரவாதம் அல்ல. இது உலகளாவிய பயங்கரவாதம். சர்வதேச நாடுகள் இதில் பாரிய அளவில் முகங்கொடுத்து வருகின்றனர். லண்டன் நகர் இதற்கு பாரிய அளவில் முகங்கொடுத்து வருகின்றது.
உலகளாவிய பயங்கரவாத சுட்டெண் பிரகாரம் மதரீதியிலான பயங்கரவாதம் பலமடைந்துள்ளது. சர்வதேசம் இதனை சுட்டிக்காட்டி வருகின்றது. மதவாத ஜிஹாதி யுத்தம் என்று கூறினாலும் கூட இது பயங்கரவாத செயற்பாடுகளின் கீழ்தான் வருகின்றது. இன்றுள்ள பயங்கரவாதம் திட்டமிடப்பட்ட நீண்டகால இலக்கை கொண்ட பயங்கரவாதம். இதில் ஒரு சிலர் இங்கு இருந்தாலும் கூட இதன் பின்னணி பாரிய திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இவர்களுக்கு பயிற்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மட்டுமே நாம் கட்டுப்படுத்தியுள்ளோம்.
தேபோல் இந்த குழுவின் இரகசிய தன்மை வெளிவந்துள்ளது. இதனை திட்டமிடும் நபர்கள் ஆயுதங்களை கொண்டுவரும் நபர்கள், தற்கொலை குண்டுதாரிகள் உள்ளனர். அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் புலனாய்வு உதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போது அவசரகால சட்டம் மூலமாக இவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இவர்களை கைதுசெய்யும் அதிகாரம் இராணுவத்துக்கும், தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரம் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒருசிலர் இப்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர். முக்கியமான தகவல்கள் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களுக்கும் இந்த செயற்பாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அனைவரையும் இணைத்துக்கொண்டு நாம் இந்த சவால்களை வெற்றிகொள்ள வேண்டும். எமது பொருளாதாரத்தை வீழ்த்தும் நோக்கமும் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தது. எமது சுற்றுலாத்துறையை இவர்கள் இலக்கு வைத்துள்ளனர். இப்போது நாம் நன்றாக வளர்ச்சிகண்டு வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் ஏற்பட்டது. எவ்வாறு இருப்பினும் மீண்டும் 30 ஆண்டுகால யுத்தம் ஒன்றினை நடத்த நாம் தயாரில்லை அதற்கு இடமளிக்கப்போவதுமில்லை. இந்த பயங்கரவாத செயற்பாடுகளுக்கு சகல சர்வதேச நாடுகளினதும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் பிரதான நாடுகளின் தலைவர்கள் அனைவருமே எமக்கு ஒத்துழைப்பு வழங்கி இலங்கையை மீட்க கைகொடுப்பதாக தெரிவித்துள்ளனர். எமது பக்கம் குறைபாடுகள் உள்ளது, எனினும் இந்த பயங்கரவாதத்தை அழிக்க சர்வதேச ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த சவாலுக்கு நாம் முகங்கொடுக்க முடியும், இதைவிட மோசமான சூழலில் நாம் செயற்பட்டுள்ளோம். இந்த விடயத்தில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். மக்கள் இப்போதே நாம் அனைவரும் அரசியல் இலாபம் பெறுகின்றோம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். 1983 ஆம் ஆண்டு ஒரு சிறிய அளவினால் பயங்கரவாத அமைப்பு உருவாகியது. அதனை இனரீதியில் கருதியதன் காரணத்தினால் தான் பாரிய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. இந்த செயற்பாடுகளையும் அவ்வாறு கருதக் கூடாது. ஆகவே அதனை தவிர்த்துக்கொள்ளும் விதமாக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
vidivelli