உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று முன்தினம் நாட்டில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து தொடர்ந்தும் முழுநாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. நேற்று திங்கட்கிழமை வரை 290 பேர் பலியாகியுள்ளதுடன் 450 க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
இதேவேளை நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்கா விமானநிலைய வீதியில் பிளாஸ்டிக் குழாயில் பொருத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட 6 அடி நீளமான வெடிகுண்டொன்றும் விமானப்படை வீரர்களினால் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்த அமைப்பொன்று திட்டமிட்டிருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவு விசேட பாதுகாப்பு பிரிவுக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பித்திருந்தது. இதனையடுத்து பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி விசேட பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியலால் தசநாயக்க பாதுகாப்பு பிரிவினரையும், பொலிஸ்மா அதிபரையும் வேண்டியிருந்தார். அவர் இது தொடர்பாக அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவு, நீதிச் சேவை பாதுகாப்பு பிரிவு, ஓய்வு பெற்ற ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு, தூதுவர்கள் பாதுகாப்பு பிரிவு என்பனவற்றுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தார். பிரபல கத்தோலிக்க தேவாலயங்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்த எச்சரிக்கையை இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர் பாரதூரமானதொன்றாக கருதாமையே தற்கொலை குண்டுதாரிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது எனலாம். பாதுகாப்பு பிரிவினர் அரச புலனாய்வு பிரிவினரின் அறிக்கைக்கு அமைவாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இத்தாக்குதல்களைத் திட்டமிட்டிருந்த நபர்களை அல்லது குழுவினரைக் கைது செய்திருக்கலாம். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.
‘இந்தத் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்தும் பாதுகாப்பு பிரிவினர் உரிய நடவடிக்கை எடுக்காமையும், கவனத்திற்கொள்ளாமையும் பாரதூரமான விடயமாகும்’ என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூறியிருக்கிறார்.
பாதுகாப்பு பிரிவினருக்கு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் இது தொடர்பில் தான் உட்பட அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்படாமை, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாமை தொடர்பில் ஆராயவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் எந்தத்தராதரங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் விசாரணையின் பின்பு அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக பாதுகாப்பு பிரிவினருக்கு தேவையான அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தத் தாக்குதல்களின் பின்னணியுள்ள சூழ்ச்சிகளை வெளிக்கொணர்வதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தாக்குதல் சூத்திரதாரிகளை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அதியுச்ச தண்டனை வழங்கப்படுவது அவசியமாகும். அதேவேளை தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எச்சரிக்கையாக இருக்கும்படியும் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் ஏன் அவர்கள் அசிரத்தையாக இருந்தார்கள்? ஏன் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சூத்திரதாரிகள் கைது செய்யப்படவில்லை? என்ற வினாக்கள் மக்கள் மத்தியில் தற்போது பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.
இதன் பிறகாவது அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவினரும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்காது ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்காது செயலில் இறங்க வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
இச்சம்பவங்களை முன்வைத்து நாட்டில் இனங்களுக்கிடையில் கலவரங்கள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்யவேண்டும். நாட்டில் பயங்கரவாதம் இல்லாது ஒழிக்கப்பட வேண்டும்.
vidivelli