உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களையும், நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற பாரிய குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. அதேவேளை இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இந்தத் தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றது. அதேவேளை இத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப்போவதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட, அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மிகுந்த கவலையடைவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம். பாரிய சேதம் நிகழ்ந்து முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுப்போம் என்பதுடன், அரசாங்கத்தின் சார்பில் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சுகாதாரம், போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அலரி மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்போது கருத்து வெளியிட்ட சுகாதாரம், போசணைகள் மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அரசாங்கம் முழுப்பொறுப்பேற்றுக் கொள்வதுடன், அந்தப் பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து ஒருபோதும் விலக மாட்டோம் என்று அறிவித்தார். அத்தோடு இந்தத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான எச்சரிக்கை முன்னரேயே கிடைக்கப்பெற்றிருந்தும் கூட, உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையாலேயே இத்தகைய பாரிய அழிவு ஏற்பட்டிருக்கின்றது என்பதனையும் ஏற்றுக்கொண்டார்.
நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு,
பொறுப்பேற்றலும், மன்னிப்புக்கோரலும்
இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு சற்று நேரத்திற்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவ்விடயம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தவகையில் நாட்டில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் சம்பவம் குறித்து அரசாங்கம் கவலையடைகின்றது. அதேவேளை இவ்விடயம் தொடர்பான பொறுப்புக்கூறலில் இருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகப் போவதில்லை. இந்தத் தொடர் குண்டுத்தாக்குதல் சம்பவம் மற்றும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் குறித்து அரசாங்கம் முழுமையாகப் பொறுப்பேற்றுக் கொள்கின்றது. அதேவேளை இத்தகைய தாக்குதல் சம்பவம் இடம்பெறப்போவதாக முன்னரே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் கூட, அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை குறித்து மிகுந்த கவலையடைவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகின்றோம். பாரிய சேதம் நிகழ்ந்து முடிவடைந்துள்ள நிலையில், இது தொடர்பில் விரைவான விசாரணைகளை முன்னெடுப்போம் என்பதுடன், அரசாங்கத்தின் சார்பில் இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றோம்.
அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி
தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை சிலர் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். ‘நாங்கள் இருந்திருந்தால் இத்தகைய சம்பவம் நடந்திருக்காது” என்று கூறுகின்றார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். இவ்வாறு கூறுகின்றவர்கள் ஆளுந்தரப்பில் இருந்தபோது நானும் அதில் அங்கம் வகித்திருக்கின்றேன். அவர்களின் ஆட்சியில் பல்வேறுமட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும் கூட இதுபோன்ற மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே இச்சம்பவத்தை அரசியல் சுய இலாபங்களுக்காகப் பயன்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தாக்குதல் குறித்து முன்னரே எச்சரிக்கை அனுப்பப்பட்டது
நாட்டில் பாரிய தொடர் குண்டுத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் முன்னரேயே எச்சரிக்கை அனுப்பட்டுள்ளதாக தற்போது நாங்கள் அறிந்திருக்கின்றோம். அத்தகவல்கள் எவற்றையும் மறைக்காமல் பகிரங்கப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். அந்தவகையில் நாட்டில் இத்தகைய பாரிய தாக்குதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடந்த 4 ஆம் திகதி சர்வதேச புலனாய்வுப்பிரிவு அறிவுறுத்தியிருக்கின்றது.
அதனைத்தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல்கள் நடைபெறும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டு, ‘தேசிய தௌஹீத் ஜமாத்” என்ற அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்களின் பெயர்களையும் உள்ளடக்கி பாதுகாப்புச் செயலாளருக்குப் பதிலாக தேசிய புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி பிரதிப் பொலிஸ்மாஅதிபர் இவ்விடயம் குறித்து அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், நீதியரசர்கள் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்புப் பிரிவில் மேலதிக பணிப்பாளர், இராஜதந்திரிகள் பாதுகாப்புப் பிரிவின் மேலதிக பணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
இதில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும், பிரதமர் பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும் பாதுகாப்பு அமைச்சிற்கு ஜனாதிபதியே பொறுப்பானவர் என்பதால் அவரது பெயர் குறிப்பிடப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இது தொடர்பில் எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை. அத்தோடு இவ்விடயம் குறித்து எத்தகைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது.
தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்திற்கு பிரதமர் அழைக்கப்படுவதில்லை
நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தீர்க்கப்பட்டு, டிசம்பர் மாதமளவில் நாங்கள் மீண்டும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் இதுவரை நடைபெற்ற எந்தவொரு தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டத்திற்கும் பிரதமர் அழைக்கப்படவில்லை. இந்த நாட்டில் ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டதில் இருந்து ஜனாதிபதிக்கு கீழான தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் பிரதமர் கலந்துகொள்வது தான் வழமை. கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்குப் பின்னர் பொய்யாகப் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷவும் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்.
எனினும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதியிலிருந்து தான் பிரதமர் அழைக்கப்படாத நிலையொன்று ஏற்பட்டது. அதனால் தேசிய பாதுகாப்புச்சபையில் என்ன நடைபெறுகின்றது என்பது தொடர்பில் பிரதமருக்கு எவ்வித தெளிவும் இல்லை. அதேபோன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் அழைக்கப்படுவதில்லை.
தேசிய பாதுகாப்புச்சபை அதிகாரிகள் வரவில்லை
இவ்வாறிருக்க நாட்டில் பாரிய குண்டுத்தாக்குதல் சம்பவம் நடைபெறுகையில் ஜனாதிபதி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவர் தான் பாதுகாப்பு அமைச்சராவார். ஆனால் அவர் நாட்டில் இல்லாதபோது பாதுகாப்பு விடயங்களைப் பொறுப்பேற்றுச் செயற்படுத்துவதற்கு பதில் பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படவில்லை. அதனால் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பின்னரேயே தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்பதை பிரதமர் அறிந்துகொண்டார். அவரைப் போன்றே இங்கிருக்கின்ற பெரும்பான்மையான அமைச்சர்கள் இவ்விடயம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை.
ஆனால் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் பிரதமர் தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டத்தைக் கூட்டினார். எனினும் தேசிய பாதுகாப்புச்சபை அதிகாரிகள் பிரதமரின் பணிப்புரையை ஏற்று அலரிமாளிகைக்கு வருகை தரவில்லை. எனவே உடனடி அபாயகர நிலையைக் கருத்திற்கொண்டு பிரதமர் பாதுகாப்பு அமைச்சிற்கு விஜயம் செய்து தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பலவருட காலமாக தேசிய பாதுகாப்புச்சபையின் கூட்டங்களில் பங்குபற்றி வருபவர் என்பதுடன், இவ்விடயத்தில் அவரைப் போன்ற அனுபவமுடைய வேறெவரும் இருக்கமுடியாது. நேற்று முன்தினம் தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கிய பிரதமர் மீண்டும் நண்பகல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.
ஜனாதிபதி நேற்றைய தினம் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் தேசிய பாதுகாப்புச்சபைக் கூட்டத்தை ஏற்பாடு செய்து, அரசியல் நெருக்கடிக்குப் பின்னர் முதன்முறையாக அதில் கலந்துகொள்வதற்கு பிரதமருக்கு அழைப்பு விடுத்ததுடன், பிரதமரும் மறுக்காமல் கலந்துகொண்டார்.
முன்னெச்சரிக்கையை கருத்திற்கொள்ளாமை குறித்து ஆராய வேண்டும்
இந்நிலையில் தாக்குதல் குறித்து முன்னரேயே எமக்கு அனைத்து விபரங்களும் கிடைக்கப்பெற்றிருந்தும் கூட, அதனைத் தடுக்க முடியாமல் போயுள்ளது. முதலில் இது தொடர்பிலேயே விசாரிக்க வேண்டும். அதற்கென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு இவ்விடயம் பற்றி முழுமையாக ஆராய வேண்டும். தாக்குதல் இடம்பெறப் போவதாக யாருக்கு முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றது? அவை பிரதமருக்கு நேற்று முன்தினம் வரை அறிவிக்கப்படாதது ஏன்? பாதுகாப்பு அமைச்சினால் இவ்விடயம் குறித்து முன்னெடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களில் இந்த முன்னெச்சரிக்கை வெளிவந்த பின்னரும் கூட நாங்கள் அது குறித்து அறியவில்லை என்பது ஆச்சரியமளிக்கின்றது. ஆனால் நேற்று முன்தினம் இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றதிலிருந்து எம்மாலான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
உள்நாட்டு குழுவால் மாத்திரம் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது
தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை உள்நாட்டைச் சேர்ந்த குழுவொன்றினால் மாத்திரம் நடத்தியிருக்க முடியாது. இத்தாக்குதலில் பின்னணியில் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட, மிகப்பாரியதொரு தீவிரவாத வலைப்பின்னல் இருக்குமென்று கருதுகின்றோம். அவ்வாறில்லாமல் இவ்வாறான தொடர் தாக்குதலை நடத்துவதென்பது அத்தனை இலகுவான காரியமல்ல. எனவே இவ்விடயம் குறித்து முறையானதும், விரைவானதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
பொலிஸ்மாஅதிபர் பதவி விலக வேண்டும்
நாட்டின் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு பொலிஸ்மாஅதிபர் பொறுப்பானவர் என்ற அடிப்படையில், ஏற்கனவே முன்னறிவித்தல் கிடைக்கப்பெற்றிருந்தும் இத்தகைய பாரிய தாக்குதலைத் தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறிருக்கையில் உண்மையிலேயே பொலிஸ்மாஅதிபர் பதவி விலகியிருக்க வேண்டும். பொலிஸ்மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவை பதவியிலிருந்து நீக்கி, வேறொருவரை நியமிக்கும்படி நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.
vidivelli