எம்.எப்.எம்.பஸீர், தம்புள்ளை நிருபர்
தலை நகர் கொழும்பு உட்பட நாட்டில் நேற்று முன் தினம் இடம்பெற்ற 8 தொடர் குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளது. இதில் மேலும் காயமடைந்த 500 பேர் வரையில் 6 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ரனர்.
இந் நிலையில் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த 290 பேரில் நேற்று வரை 204 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசலையில் உள்ள 140 சடலங்களில் 89 சடலங்களும், நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள 104 சடலங்களில் 92 சடலங்களும், மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள 29 சடலங்களில் 23 சடலங்களும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
இதனைவிட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத 35 சடலங்களும் வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையில் 6 சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படாது இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
vidivelli