- ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கருமலையூற்று, திருகோணமலை கொட்டியாரக்குடாவில் உள்ள இந்தக் கரையோரக் கிராமம் இப்போது மட்டுமல்ல இரண்டாம் உலகப்போர் நடந்த காலந்தொட்டே போர் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றது.
பிரிட்டிஷார் அமைத்த சுடுமுனை அரண்கள் இன்னமும் அங்கு இருக்கின்றன.
இயற்கைத் துறைமுகம், போர்க் கப்பல்களை பத்திரமாக மறைத்து வைக்கக் கூடிய வசதி எல்லாம் இங்கிருப்பதால் இந்த இடம் இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேச நாடுகளின் கண்களையும் கருத்தையும் ஈர்த்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் திகழ்கின்றது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் குடாக்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள திருக்கைக்குடா பிரதேசத்திலிருந்து பலர் கிண்ணியா, கந்தளாய், முள்ளிப்பொத்தானை பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
திருக்கைக்குடா என்பது, திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை அண்டிய ஒரு கடற்கரைப் பிரதேசம். இது ஒரு மீன்பிடிக் கிராமமாகவும், முன்னொரு காலத்தில் வர்த்தகத்திற்குப் பெயர்பெற்ற இடமாகவும் இருந்து வந்துள்ளது.
இக்கிராமத்தில் குடியிருந்த மக்களே, இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, இடம் பெயர்ந்து, நாச்சிக்குடா, வேப்பன்குடா, மகிழூற்று, வெள்ளைமணல், கருமலையூற்று, நீரோட்டுமுனை, சின்னம்பிள்ளைச்சேனை, கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, கந்தளாய் பிரதேசங்களில் குடியேறினர்.
திருக்கைக்குடாப் பகுதியில் குடியிருப்புக்கள் இருந்தமைக்கு ஆதாரமாக இடிபாடுகளுடன் கூடிய பள்ளிவாசல்களை Clapan Burg பகுதியில் இன்றும் காணலாம்.
கருமலையூற்றுப் பிரதேசத்திலும் ஜும்ஆப் பள்ளியுடன் அமைந்த குடியிருப்புக்கள் காணப்பட்டன.
இப்பொழுது இந்தக் கிராமம் இலங்கை முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் முடங்கிப் போயிருக்கின்றது.
கடற்படை, விமானப்படை, தரைப்படை என எல்லோருமே இந்தக் கிராமத்தை ஆக்கிரமித்திருப்பதால் அங்கு வாழும் மக்கள் தமது இயல்பு நிலையை இழந்திருக்கின்றார்கள்.
உலக கவனத்தை இந்தக் கிராமம் ஈர்த்திருந்தாலும் உள்ளூர் மக்களின் ஓலங்களை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை என்று அந்த மக்கள் துயரம் வெளியிடுகின்றனர்.
யுத்தம் மூர்க்கமடைந்திருந்த கால கட்டத்தில் முதலில் அந்த மக்களின் நடமாடும் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது.
பின்னர் வாழ்விடங்களைப் படையினர் கைப்பற்றினார்கள். வணக்க வழிபாடுகளைச் செய்ய விடாது தடுத்தார்கள். கருமலையூற்றிலுள்ள பழம்பெரும் பள்ளிவாசலுக்குச் சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாது அந்த மக்கள் தடுக்கப்பட்டிருந்தார்கள். இப்பொழுது அந்தப் பள்ளிவாசலை இருந்த இடம் தெரியாமலேயே அத்திபாரத்தோடு அழித்தும் விட்டார்கள்.
எங்களது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடிக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாம் வாழ்வதற்கு என்னதான் வழி என்று தெரியாமல் தவித்தோம் எவரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
கடைசியாக கருமலையூற்றிலிருந்த பழம்பெருமை வாய்ந்த பள்ளிவாசல் 2014 ஓகஸ்ட் 16 ஆம் திகதியன்று மாயமாய் மறைந்து விட்டிருந்தது. இதன் பின்னர் அவ்வூர் மக்கள் தமது நசுக்கப்பட்ட குரலால் மெல்லப் பேச ஆரம்பித்தார்கள். தொடர்ச்சியாக தமக்கு இழைக்கப்பட்டு வரும் துயரங்களை அவர்கள் மெல்லிய குரலில் பகிர்ந்து கொண்டார்கள்.
எமது வாழ்வாதாரம் முதலில் முடக்கப்பட்டது. கடலில் ஆழமான பகுதிக்குச் சென்று மீன் பிடிக்க முடியாது என்று கடற்படையினர் தடை விதித்தார்கள்.
மீன்பிடிக்கச் செல்வதாயின் படையினரிடம் “பாஸ்” பெற்றிருக்க வேண்டும் என்பது மற்றொரு கட்டுப்பாடு.
“யுத்தம் நடந்த காலத்தில் நாம் எங்கும் செல்லக் கூடியதாக இருந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது பள்ளி வாசலுக்குச் சென்று தொழுவதற்குக் கூட அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை. எட்டிப் பார்க்கவும் முடிந்திருக்கவில்லை.”
“நாம் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடித் திரிந்த எமது கடற்கரைக்குச் சென்று கடல் நீரில் கால் நனைக்க எமக்குச் சுதந்திரம் இருந்திருக்கவில்லை.”
1836 ஆம் ஆண்டில் கட்டப்பட்டு கம்பீரமாய் நின்றிருந்த வரலாறு சொல்லும் கருமலையூற்று பள்ளிவாசல் 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 15 ஆம் திகதி அதன் கம்பீரம் சிதைக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது.
பள்ளிவாசல் உடைக்கப்பட்டது சம்பந்தமாக சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் சி.ஐ.பி. 398/73 இலக்கத்தில் 16.08.2014 அன்று முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தோம்.
பள்ளி வாசல் அமைந்திருந்த பகுதியில் ஜே.சி.பீ. (JCB) வாகனச் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டே இருந்தது.
இந்தப்பள்ளி வாசல் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. குறிப்பிட்ட பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டு வெளியார் எவரும் உள் நுழைய முடியாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது.
முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பகுதியில் இருந்த சுமார் 400 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த எமது வழிபாட்டிடம் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இது பூர்வீகமாக அங்கு வாழ்ந்த எமது மக்களின் பரம்பரைச் சொத்து. இந்தப் பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கி அழித்தவர்கள் அதனை மீண்டும் புதுப்பித்துக் கட்டித் தரவேண்டும்.” என்று பள்ளி வாசல் நிர்வாகத்தினர் முறைப்பாட்டில் தெரிவித்துமிருந்தனர்.
இந்த விடயம் பற்றி பலரும் கரிசனை வெளியிட்டிருந்தனர்.
கிழக்கு மாகாணத்திலேயே நீண்ட வரலாற்றைக் கொண்டது கருமலையூற்றுக் கிராமம். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றிலே அங்குள்ள பள்ளிவாசல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
இது இலங்கையின் தொன்மை வாய்ந்த வரலாற்றைக் கொண்டது என்பதால் அதனைப் பாதுகாப்புப் படையினர் பாதுகாத்திருக்க வேண்டும். இது அவர்களது கடப்பாடாக இருக்கின்றது.
வரலாற்றைப் பாதுகாக்க வேண்டிய இராணுவத்தினர் வரலாற்றை அழித்து ஒரு வரலாற்றுத் தவறிழைத்திருக்கின்றார்கள் என்று சொன்னால் அது தவறல்ல.
வரலாற்றுத் தொன்மை வாய்ந்த இடங்களை அழித்தொழிப்பதென்பது சட்ட ரீதியாகவே தடுக்கப்பட்ட விடயம்.
எனவே, சட்டத்தை அமுல்படுத்துவதற்குத் துணை நிற்க வேண்டிய இராணுவத்தினர் சட்டத்தினால் தடுக்கப்பட்ட விடயங்களைச் செய்திருப்பார்களேயானால் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எந்த மத கலாசாரத்துக்குரிய அம்சங்களாக இருந்தாலும் தொல் பொருட்களையோ பழமைக் கட்டிடங்களையோ எவரும் நினைத்த மாத்திரத்தில் அழித்தொழிக்க முடியாது. அவ்வாறு அழிப்பது சட்ட விரோதமாகும்.
இந்தக் கருமலையூற்று மலைத் தொடர்களைச் சுற்றி இறைநேசர்கள் என்று கூறப்படும் “அவ்லியாக்களின்” அடக்கஸ்தலங்கள் பல உள்ளன.
பிரிட்டிஷாரின் வரைபடத்தில் “Dead man’s Cave” என்றுதான் இந்தக் குடா குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப் படையினரும் இங்கே முகாம் அமைத்திருந்தார்கள்.
அப்பொழுதும் மக்கள் வெளியேற வேண்டியேற்பட்டுவிட்டது. இந்தியப் படையினர் இங்கே நிலை கொண்டிருந்த போது எங்களை மீன்பிடித் தொழில் செய்ய அனுமதித்தார்கள்.
43 குடும்பங்கள் பள்ளிவாசலைச் சூழ வாழ்ந்து வந்தோம்.
1998 ஆம் ஆண்டு முதல் எமது பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுது கடற்படையினரின் அனுமதியில்லாமல் கடற்தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைமை வந்தது.
அப்பொழுதிருந்த அனுமதி முறை என்பது ஒரு பட்டியலில் எமது மீனவர்களின் பெயரைக் கொடுத்திருந்தோம். அந்தப்பட்டியலில் உள்ளவர்களை கடற்படையினர் பரிசோதித்து கடலுக்குச் செல்ல அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.
2003 ஆம் ஆண்டு கடற்படையினர் இந்த கொட்டியாரக்குடாவின் முழுக் கரையோரத்தையும் தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர்.
உங்களுக்குப் பாதுகாப்புத் தருவதற்காகவே நாம் இங்கு வந்திருக்கின்றோம் என்று அவர்கள் அப்போது கூறியிருந்தனர்.
2004 இல் சுனாமி கடற்பேரலைத் தாக்கம் ஏற்பட்டபொழுது எங்களில் 25 குடும்பங்கள் அங்கிருந்த மைதானத்தில் முகாம் அமைத்து தங்கியிருந்தோம்.
அதனைத் தொடர்ந்து இராணுவம் எமது வாழ்விடங்களைக் கைப்பற்றி விட்டார்கள்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு கடற்கரையிலிருந்து 500 மீற்றருக்கு அப்பால் ரி.டி.ரி.ஏ என்ற நிறுவனத்தினர் வீடு கட்டித் தந்தார்கள்.
2005 ஆம் ஆண்டிலிருந்து எமது மீனவர்களுக்கு கடற்படையினர் முற்று முழுவதுமாக பாஸ் நடைமுறையை அறிமுகப்படுத்தினர்.
அதன்படி ஒவ்வொரு மீனவரும் தனித்தனிப் “பாஸ்” வைத்திருக்க வேண்டும். 2014வரை 210 பேருக்கு தனித்தனிப் பாஸ் அனுமதியிருந்தது.
யுத்தம் முழுவதுமாக முடிவடைந்திருந்த, 2009 ஆம் ஆண்டு இந்தப் பகுதியிலிருந்து கடற்படையினர் விலகியதும் இராணுவத்தினர் தமது கவச வாகனங்களைக் கொண்டு வந்து எங்களது இடத்தைக் கைப்பற்றி விட்டார்கள்.
பள்ளிவாசல் உட்பட இன்னும் அநேகமான பொது மக்களின் இடங்களையும் அவர்கள் கையகப்படுத்திக் கொண்டனர்.
கருமலை அதிசய நீரூற்று
கடற் கரையிலிருந்து சுமார் 5 அல்லது 6 மீற்றர் தூரத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 150 அடி உயரத்தில் அமைந்திருக்கின்ற கருமலையூற்றுப் பள்ளிவாசலின் அடியிலிருந்து வற்றாத, சுவையான நன்னீர் ஊற்று பீறிட்டு வருகின்றது.
கருமலையூற்றுப் பள்ளிவாசலில் ஊறும் அதிசய நீரூற்றிலிருந்துதான் சூழவுள்ள படை முகாம்களுக்கெல்லாம் சுத்தமான குடி தண்ணீர் இப்பொழுதும் விநியோகிக்கப்படுகின்றது.
எமது மக்கள் அங்கு குடியிருந்த போது அந்த நீரூற்றிலிருந்துதான் தங்களுக்குத் தேவையான அளவு நீரைப் பெற்றுக் கொண்டார்கள்.
இப்பொழுது எமது வாழ்விடங்கள் மட்டுமல்ல வழிபாட்டிடங்களும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
எங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள 1975 ஆம் ஆண்டிலிருந்து நாம் 4 கரை வலைப்பாடுகளை வைத்திருந்தோம்.
ஒரு கரை வலைப்பாட்டில் 40 குடும்பங்கள் ஜீவனோபாயம் நடத்தினோம். எனினும் அதில் 2 கரை வலைப்பாடுகளை 2011 ஆம் ஆண்டு படையினர் தடை செய்து விட்டிருந்தார்கள்.
தடுக்கப்பட்டவர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புக் கொடுக்க வேண்டும் எனும் நோக்கில் நாங்கள் சுழற்சி முறையில் மாறி மாறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்தோம்.
ஒரு நாள் Golf Burg எனப்படுகின்ற விளையாட்டு அரங்கு அமைப்பதைப் பார்வையிட இந்த இடத்திற்கு வந்த அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக் ஷ எமது கரைவலை வாடிகளை இருந்த இடம் தெரியாமல் அகற்றுமாறு படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி மறுநாள் எங்களது கரைவலை ஓலைக் கொட்டில்களை இரவோடு இரவாக இருந்த இடம் தெரியாமல் செய்து விட்டார்கள்.
உல்லாசப் பயணிகளைக் கவரும் இடத்தில் ஏழைகளாகிய எங்களின் ஓலைக் கொட்டில் கரை வலை வாடிகள் கண்ணில் படக் கூடாது, அது அசிங்கம் என்று கருதியே அவர் மீனவர்களின் ஓலை வாடிகளை உடனே அகற்றி விடுமாறு உத்தரவிட்டாராம்.
கடைசியாக அனுமதித்திருந்த இரண்டு கரை வலைப்பாடுகளில் ஒன்றை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் தடை செய்து விட்டிருந்தார்கள்.
இந்தப் பள்ளிவாசல் உடைக்கப்பட்ட விடயத்தை நாங்கள் தூக்கிப் பிடித்தால் மீதியாக உள்ள எமது வாழ்வாதாரத்தையும் வாழ்விடங்களையும் விட்டு எம்மைத் துரத்தி விடுவார்கள் என்ற அச்சத்தில் நாம் உறைந்து போயிருந்தோம்.
இந்தப் பகுதியிலே இயற்கையாக இலந்தைப் பழங்கள், விளாம்பழங்கள், நாவல் பழங்கள் விளைகின்றன. வறுமையான குடும்பங்கள் இவற்றைக் கொண்டே தமது ஜீவனோபாயத்தைக் கழித்தும் வந்துள்ளார்கள்.
ஆனால், இப்பொழுது காட்டுப் பக்கமே நாம் செல்ல முடியாது. குறைந்தபட்சம் எமக்குச் சொந்தமான கடற்கரைக்குப் போய் நாம் எமது கால்களை கடல் நீரில் நனைக்க முடியாது.
எமது கிராமத்தோடு அண்டியதாக உள்ள மாபிள் பீச் (Mable Beach) எனப்படுகின்ற பிரதேசம் இயற்கை எழில் கொஞ்சும் மனோரம்யமான பகுதி, சிறு வயதில் நாம் ஓடித்திரிந்து இயற்கையோடு ஒட்டி உறவாடிய பகுதி. இலங்கையில் எந்தவொரு கடற்கரையையும் இந்தளவு இயற்கை எழிலோடு நாம் கண்டதில்லை.
அப்பகுதியைக் கைப்பற்றிய படையினர் நாம் ஓடித் திரிந்து விளையாடிய பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு 20 ரூபாய் ரிக்கட் அறவிடுகின்றனர்.
ஆனால் அதிலும் மிக அழகான பகுதிக்குள் நாம் உட்செல்ல முடியாது. அது வி.ஐ.பி.க்களுக்கு அதாவது மிக முக்கிய பிரஜைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
சின்னம்பிள்ளைச்சேனை (மாபிள் பீச்), இது தனியே முஸ்லிம் கிராமம். இங்கும் காணிகளை படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் பயங்கரவாதம் நிலவிய போதும் இந்தப் பகுதியில் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருக்கவே இல்லை.
தற்போதைய சமாதானச் சூழலிலும் இலங்கையில் குற்றச் செயல்கள் குறைந்த இடமாக எமது பிரதேசம்தான் உள்ளது. அப்படியிருந்தும் ஏன் கெடுபிடிகள் இன்னமும் தொடர்கின்றன என்று எமக்குப் புரியவில்லை.
நீரோட்டுமுனை, கருமலையூற்று, ஹிஜ்ரா நகர், அறபாத் நகர் ஆகிய எட்டுக் கிராமங்கள் இங்கு உள்ளன.
2009 ஆம் ஆண்டிலிருந்து அதியுயர் பாதுகாப்பு வலயம் என்ற கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டு முஸ்லிம்கள் எவரும் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு தடை செய்யப்பட்டிருந்த கருமலையூற்று ஜும்ஆப் பள்ளியில் கடந்த 19.12.2014 அன்று முதன் முறையாக ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றது.
பிரதேச முஸ்லிம்களும் அயற்கிராம முஸ்லிம்களும் என சுமார் 300 பேருக்கு மேற்பட்டோர் இந்தத் தொழுகையில் கலந்து கொண்டனர்.
கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயதுல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஜும்ஆ தொழுகையில் கருமலையூற்று ஜும்ஆப் பள்ளி நிருவாகத்தில் அப்போதிருந்த அதன் தலைவர் எம்.எச்.அப்துல் கரீம், உப தலைவர் ஏ.ஏ.எம். றமீஸ், செயலாளர் எம்.ஐ.சுபைர், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.பஷீர், கிண்ணியா நகரசபை தலைவர் வைத்தியர் எம்.ஹில்மி, சுமையா அறபுக் கல்லூரியின் விரிவுரையாளர் எம்.ரீ. மஹ்மூத் உட்பட பெரும் எண்ணிக்கையான ஊர்ப் பிரமுகர்கள் அன்றைய ஜும்ஆத் தொழுகையில் கலந்து கொண்டனர்.
ஜும்ஆப் பிரசங்கத்தை நிகழ்த்திய கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹிதாயதுல்லாஹ், இந்தப் பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை இடம்பெறுவதற்கும் பள்ளிவாசலில் சிறப்பான முறையில் கட்டட நிர்மாணங்களை மேற்கொள்வதற்கும் கருமலையூற்றுப் பள்ளிவாசலைச் சூழ வாழ்ந்து இப்பொழுது வேறிடங்களில் வெளியேற்றப்பட்டிருக்கும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும். இதற்காக சகலரும் பேதங்களை மறந்து முயற்சிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
-Vidivelli