ஜனாதிபதி தேர்தலை எக்காரணம் கொண்டும் தாமதப்படுத்த பொதுஜன பெரமுன இடமளிக்காது. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பிற்கு சவால் விடுக்கும் வகையில் சட்ட வியாக்கியானத்தின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்க சுதந்திரக் கட்சியினர் முயற்சிக்கின்றமை அரசியலமைப்பினை கடுமையாக மீறும் செயற்பாடாகும் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவிற்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டணி தொடர்பில் நேற்று புதன் கிழமை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதுவரையில் ஆறு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று நள்ளிரவுடன் தென்மாகாண சபையும், இம்மாத இறுதியுடன் மேல்மாகாண சபையும் கலைக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் 8 மாகாணங்கள் நிர்வகிக்கப்படும் நிலை ஏற்படும். மாகாண சபை தேர்தல் பிற்போடுவதற்கு சுதந்திர கட்சியும் முழுமையான பொறுப்புக் கூற வேண்டும். தேசிய அரசாங்கத்தில் இரண்டு பிரதான கட்சிகளும் மக்களின் அடிப்படை உரிமையான தேர்தல் உரிமையினை பகிரங்கமாக பறித்துள்ளன.
அரசியலமைப்பின் பிரகாரம் இவ்வருடத்தில் இடம் பெற வேண்டிய ஜனாதிபதி தேர்தலையும் கட்சியின் சுயநல நோக்கங்களுக்காக பிற்போடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கவனம் செலுத்துகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா என்று உயர் நீதிமன்றில் பொருள் கோடலை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தின் முதலாம் காலாண்டின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலம் ஐந்து வருடமா அல்லது ஆறு வருடமா என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் பொருள் கோடலினை நாடினார். இவ்விடயம் தொடர்பில் 19 ஆவது அரசியலமைப்பு முக்கியத்துவப் படுத்தப்பட்டது. இவரது மனுத்தாக்கலிற்கு உயர்நீதிமன்றத்தின் 5 பிரதம நீதியரசர்கள் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் 129 ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் 5 வருட காலங்களே ஜனாதிபதி பதவி வகிக்க முடியும் என்று ஒருமித்த தீர்ப்பினை வழங்கினார்கள். இத்தீர்ப்பு அப்போது முழுமையாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
உயர் நீதிமன்றில் 5 நீதியரசர்களின் ஒருமித்த தீர்ப்பிற்கும், 19 ஆவது திருத்தத்தின் 129 ஆவது அத்தியாயத்திற்கும் சவால் விடுக்கும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்பட முனைவது அரசியலமைப்பினை மீறும் செயற்பாடாகவே கருதப்படும். புதிய பிரதம நீதியரசர் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்பட வேண்டும். புதிய பிரதம நீதியரசரின் நியமனத்தின் பின்னர் ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர்நீதிமன்றினை நாடுவதாக சுதந்திர கட்சியினர் குறிப்பிடுவது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
பிரதம நீதியரசர்கள் மாற்றமடையும் போது ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் முன்னர் வழங்கிய தீர்ப்பினை மீள் பரிசீலனை செய்வது சாத்தியமான விடயமல்ல. ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆட்சேபனை மனு தொடர்பான நியாயாதிக்கம் தொடர்பில் பிரதம நீதியரசரால் தனித்து செயற்பட முடியாது. குறைந்த பட்சம் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஐவர் அடங்கிய குழுவினால் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பதவிக் காலம் தொடர்பிலான மனுக்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் 129 ஆவது அத்தியாயத்தில் இரண்டாம் பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சுதந்திரக் கட்சியினர் இவ்வாறான விடயங்களை மேற்கொள்ள முனைகின்றார்கள் என்பது சந்தேகமாக உள்ளது. ஐந்து வருட பதவிக்காலம் என்று அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையிலும் அதற்கு சவால் விடும் வகையில் செயற்படுவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு அவமதிப்பினையே ஏற்படுத்தும். மக்களின் அடிப்படை உரிமைகளான தேர்தல் உரிமைகளை பறிக்கும் விடயங்களுக்கு பிரதான இரு கட்சிகளும் தொடர்ந்து துணை போவது அரசியல் கலாசாரத்திற்கு முரணானதாகும்.
சுய நலமான விடயங்களுக்காக சுதந்திரக் கட்சி மக்களின் தேர்தல் உரிமையினை பறிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவது ஐக்கிய தேசிய கட்சியின் குறுகிய நோக்கங்களை நிறைவேற்ற வழி வகுக்கும். இதற்கு பொதுஜன பெரமுன ஒருபோதும் இடமளிக்காது.
மாகாண சபை தேர்தல் பிற்போடுவதற்கான பல காரணிகள் செல்வாக்கு செலுத்தலாம். ஆனால் ஜனாதிபதி தேர்தலை பிற்போட எக்காரணிகளும் கிடையாது. ஜனாதிபதி விரும்பினால் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும். அதனை நாம் தற்போது கோரவில்லை. அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட தினத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும் . இல்லாவிடின் பாரிய எதிர் விளைவுகள் ஏற்படும் என்றார்.
-vidivelli