- ஏ.ஜே.எம்.நிழாம்
தமிழரின் உரிமையிலேயே முஸ்லிம்களின் உரிமை தங்கியிருக்கிறது. முஸ்லிம்களின் உரிமையிலே தமிழரின் உரிமை தங்கியிருக்கிறது. தமிழரின் பாதுகாப்பிலே முஸ்லிம்களின் பாதுகாப்பு தங்கியிருக்கிறது. முஸ்லிம்களின் பாதுகாப்பிலே தமிழரின் பாதுகாப்பு தங்கியிருக்கிறது. தமிழரின் வாழ்வாதாரங்களிலேயே முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள் தங்கியிருக்கின்றன. முஸ்லிம்களின் வாழ்வாதாரங்களிலேயே தமிழரின் வாழ்வாதாரங்கள் தங்கியிருக்கின்றன. முழு இலங்கையிலும் கூட இதே நிலைதான் உண்டு. சிங்களவர் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் கூட தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரைத் தவிர்த்துவிட்டு தனித்து வாழமுடியாது. காரணம் இலங்கை ஒரு பல்லின நாடு என்பதேயாகும். அதனால்தான் பல்லின நாட்டை பேரின யாப்பால் ஆளமுடியாது எனக் கூறியிருந்தேன்.
இத்தகைய மல்டிவிஷன் என்னும் பன் முகப்பார்வைக்குட்பட்ட இனங்களும் தேசிய ஒருமைப்பாட்டினூடாகவே எல்லா இனங்களும் தத்தமது தனித்துவங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். சகலரும் இலங்கையரே என்னும் சமத்துவப் பிரஜைக் கோட்பாடு உறுதியாக நிலைநிறுத்தப்படும்வரை இலங்கை போன்ற பல்லின நாட்டில் ஒருபோதும் இனப் பிரச்சினையை அழிக்கவே முடியாது. பல்லினங்கள் வாழும் ஒரு நாட்டில் எல்லோரும் சம பிரஜைகள் என்றால் ஒரு இனத்தினர் முதற்தரப்பிரஜைகளாகவும் மறு இனத்தினர் இரண்டாந்தரப் பிரஜைகளாகவும் இருப்பது எப்படி?
கல்முனை வடக்குத் தமிழர்கள் தனிப்பிரதேச சபையைக் கோரியிருக்கிறார்கள். மூதூரிலும், தோப்பூரிலும் இதே வகையான பிரச்சினைகள் இருப்பதைப் போல் கல்முனையிலும் இருக்கிறது. எனினும் கல்முனையில் மட்டுமே முஸ்லிம்களின் கெடுபிடி காணப்படுகிறதே? இது ஏன்? அதற்கு மட்டும் ஏன் இந்த முக்கியத்துவம் முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றுதான் கரையோர மாவட்டமாகும். சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகியவற்றை உள்ளடக்கி மாவட்டத் தலைநகராக கல்முனையே அமையவேண்டுமெனவும் அது விரும்புகிறது. அது கிழக்கில் உத்தேசித்துள்ள முஸ்லிம் அதிகார அலகுக்கான தலைநகராகவும் கல்முனையே அமைகிறது. அதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரஸ் சனப்பரம்பலிலும் நில ஆளுமையிலும் கல்முனையை வலுப்படுத்த முயல்கிறது. இல்லாவிட்டால் கல்முனை வடக்குப் பிரதேசத்துக்கான தமிழரின் கோரிக்கையை மறுக்க வேறுகாரணமில்லை. சாய்ந்தமருது பிரதேச சபைக்கான பிரதேச கோரிக்கையை மறுப்பதற்கும் கூட இதுவே காரணமாக இருக்கலாம். ஏனெனில் அதற்கு வேறு காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும் சாய்ந்தமருது முஸ்லிம்களினதும் கல்முனை வடக்குப் பிரதேச தமிழர்களினதும் அடிப்படை உரிமைகளை வழங்காமலிருந்து கொண்டு கரையோர மாவட்டத்தையும் முஸ்லிம் அலகையும் பெறவிளைவது சாத்தியமாகப் போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸும் கூட ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் இறப்புக்குப்பின் கரையோர மாவட்ட முஸ்லிம் அலகுக் கோரிக்கைகளைக் காலம் கனியும் வரை பொதியாகக் கிடப்பில் வைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணமாக சரியானதையும் பிழையான நோக்கில் செய்யக்கூடாது என ஸ்தாபகத் தலைவர் கூறியிருந்ததேயாகும்.
கிழக்கில் கரையோர மாவட்டத்தையும் முஸ்லிம் அதிகார அலகையும் முஸ்லிம்கள் பெற்றுக்கொள்வதெனில் தமிழரின் நல்லிணக்கம் முக்கியமானதாகும். சாய்ந்தமருது முஸ்லிம்களின் உரிமைகளையும் மறுத்துக்கொண்டு தனித்துவத் தலைவர் அஷ்ரபின் இலட்சியத்தை அடையவே முடியாது.
சாய்ந்தமருது முஸ்லிம்களை கல்முனை முஸ்லிம்கள் சமமாக மதிக்கவில்லை எனும் கணிப்பீடு இருக்குமாயின் கரையோர மாவட்டத்துக்காக பொத்துவில் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம்கள் கல்முனை முஸ்லிம்களோடு இணைவது எப்படி? மறுபுறத்தில் முஸ்லிம்களே முஸ்லிம்களை சமமாக மதிக்கவில்லை எனக் காரணம் காட்டி கல்முனை வாழ் தமிழர் தனிப்பிரதேச சபைகோருவதற்கு நியாயாதிக்கம் ஏற்பட்டு விடும். இதற்கு கல்முனை வாழ் முஸ்லிம்களின் சார்பாக கருத்துரைத்த ஸ்ரீல.மு.கா. எம்.பி. மன்சூர் என்ன கூறினார் தெரியுமா? கல்முனை வடக்கு கல்முனை தெற்கு என இரு பிரதேச செயலகங்கள் பற்றிய நெருக்கடியே தற்போது காணப்படுகிறது. குறிப்பாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை முழுமையாக்கும் முயற்சியே இப்போது இடம்பெறுகிறது. அன்று அதை உப அலுவலகமாக அமைக்கும் தேவை இருந்தபோதும் தற்போது அதற்கான அவசியம் இல்லை. தற்போது இங்கு தமிழரும் முஸ்லிம்களும் நெருக்கமாக வாழ்வதால் தனிப் பிரதேச அலுவலகம் வேண்டும் என அழுத்தம் கொடுப்பது அறிவு பூர்வமான விடயமல்ல.
கல்முனை பிரதேச செயலகம் என்று ஒன்று மட்டும் இருக்கட்டும். இரு சமூகங்களுக்கும் பதவிகளைப் பகிர்ந்து வழங்கலாம். வடக்கு பிரதேச செயலகம் என்று ஒன்றை வழங்கவேண்டிய அவசியமில்லை. ஒரு சில பிரதேசங்களில் ஓர் இனம் சிறுபான்மையாக இருப்பதால் பிரச்சினை எழப்போவதில்லை. இனப் பிரச்சினையை உருவாக்க வேண்டாம். மேற்படி பிரதேச மக்களின் பிரதிநிதிகள் ஒருகோரிக்கையை முன்வைத்தால் அதை ஆராயலாம் அதற்கு மாறாக அறிவு பூர்வமற்ற செயற்பாடுகளை கையாள எம்மால் இடமளிக்க முடியாது. நிகழ்ந்தவை நிகழ்ந்தவையாகட்டும் அனைத்தையும் மறப்போம். தமிழரைப் பிழையாக வழி நடாத்தும் செயற்பாடுகளைக் கைவிட்டு விடுங்கள் என நான் எச்சரிக்கின்றேன் எனக்கூறினார். இவரது கருத்து இது. தமிழ் தரப்பு என்ன கூறுகிறது பார்ப்போம். கல்முனை– அம்பாறை மாவட்டத்தில் தமிழர் அதிகமாக வாழும் பிரதேசமாயினும் நெடுங்காலமாக எந்த அதிகாரமும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு வழங்கப்படாததால் நிதி மற்றும் காணி அதிகாரங்கள் பற்றிய பிரச்சினைகள் அங்கு உள்ளன. அவற்றை அதற்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இது தீர்க்கக்கூடிய பிரச்சினையாகும் எனவும். இதே பிரச்சினை மூதூரிலும் தோப்பூரிலும் கூட இருக்கவே செய்கிறது இதைப் பேசித் தீர்க்கலாம் அதற்கு சகல இனமக்களினதும் விருப்பங்களைக் கேட்டு செயற்பட வேண்டுமே தவிர குறித்த ஒரு தரப்புக்காக மட்டும் செயற்படக்கூடாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
இது பற்றி அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் குறிப்பிடுகையில் கிழக்கில் 27 பிரதேச செயலகங்கள் தரம் உயர்த்தப்பட்டு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டிருக்கையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகமே தரம் உயர்த்தப்படாததால் அதிகாரங்கள் இன்றி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது பாரதூரமான குற்றம் அல்லவா? கல்முனை வடக்கு தமிழ் பிரதேச மக்களுக்குரிய உரிமையும் நீதியும் மறுக்கப்பட்டுள்ளன அல்லவா? தமிழினம் நிர்வாக ரீதியில் தனது நீதி மற்றும் காணி அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் திட்டமிட்டே தடுக்கப்படுகிறது. இதை ஏற்கமுடியாது. தமிழரின் உரிமையை அவர்கள் பெறக்கூடாதென இந்த நல்லாட்சியில் தடுக்கப்படுவது நியாயம் அல்ல. இந்த நல்லாட்சியில் தமிழரின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கான நிர்வாகத்தை ஒழுங்காகக் கொண்டு செல்லமுடியாதவாறு தடைஏற்படுத்தப்பட்டுள்ளது. நீதி மறுக்கப்பட்டுள்ள இவ்விடயம் மனித உரிமை மீறலேயாகும். ஓர் இனத்துக்கு இழைக்கப்படும் அநீதியுமாகும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நிலத்தொடர்புடையதாகும். கல்முனை தெற்கு பிரதேச முஸ்லிம் செயலகம் நிலத் தொடர்பு அற்றதாகும். எனவே எமக்கு எமது செயலகம் வேண்டும் என்றார். இது தமிழ்த் தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்களாகும். இதில் குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் அம்பாறை மாவட்டம் தமிழர் கூடுதலாக வாழும் பிரதேசமாகும். அதிலிருக்கும் கல்முனை நகரசபை மூன்று பிரதேச சபைப் பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. ஒரு பிரதேச சபையில் தமிழர் அதிகமாகவும் முஸ்லிம்கள் குறைவாகவும் வாழுகையில் மறு பிரதேச சபையில் முஸ்லிம்கள் கூடுதலாகவும் தமிழர் குறைவாகவும் வாழுகின்றனர்.
சாய்ந்தமருது பிரதேசசபை விடயத்தில் நெடுங்காலமாகவே அங்குள்ள முஸ்லிம்கள் தமக்கும் ஒரு பிரதேச சபை வேண்டும் எனக்கோரி வருகின்றனர். அதை வழங்குவதில் எவருக்கும் எந்த பிரச்சினைகளும் இல்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதை ஆதரிக்கிறது. கிழக்கு மாகாண சபையிலும் கூட இதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒருவருடத்துக்கும் மேல் கழிந்துள்ளது. எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை யாவரும் இணங்கிய இவ்விடயத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கமுடியவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது எனக்கூறியதும் அதற்கு பதிலளித்த ஹரீஸ் எம்.பி. பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இது பற்றி அமைச்சரிடம் பேசியுள்ளோம். எதிர்காலத்தில் சாய்ந்தமருது மற்றும் மருதமுனை பள்ளிவாசல்களின் தலைவர்களையும் கல்முனை முஸ்லிம் தலைவர்களையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களையும் அழைத்துப் பேசமுடிவு செய்துள்ளோம் என்றார் ஹரீஸ். எனினும் விஜித ஹேரத் விடவில்லை. இனப்பிரச்சினை, ஏற்பட்டுவிடும் எல்லோரும் இணங்கிய ஒரு விடயத்தில் உங்களுக்கான அரசியல் வாக்குகளுக்காகவே நீங்கள் செயற்படுவதாலேயே பிரச்சினை இழுபடுகிறது இவ்வாறு செய்யாதீர்கள் என்றார்.
அதற்கும் ஹரீஸ் எம்.பி. பதிலளித்தார். ஆரம்பத்தில் 4 பிரதேச சபைகள் இருந்ததைத்தான் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச ஒன்றாக்கினார். இப்போது அதேவகையில் நான்காக்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை. எனினும் அவற்றை ஒரே நேரத்தில் பிரிக்கவேண்டும் என்றார். உடனே விஜித ஹேரத் எம்.பி. இதுவே அதிகாரப் பரவல் எனக்கூறினார். அப்போதும் ஹரீஸ் விடவில்லை. இதில் எல்லைப் பிரச்சினை இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியாது வந்துபாருங்கள் என சீண்டிவிட்டார். அதற்கு வீறுகொண்ட விஜித ஹேரத் எம்.பி.
நான் கல்முனைக்கு வந்திருக்கிறேன் எனக்கு இப்பிரச்சினை தெரியும். என்னிடம் எல்லை நிர்ணய வரைபடமும் இருக்கிறது. நான் நெடுங்காலம் இதைத் தெளிவாக விளங்கியே பேச வந்திருக்கிறேன். தமிழர் கூடுதலாக வாழும் கல்முனைப் பிரதேசத்தில் அவர்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப காணி அதிகாரங்கள் ஒதுக்கப்படவில்லை என்றே தமிழ்த் தரப்பினர் குறிப்பிடுகின்றனர். அவர்களின் கோரிக்கை சரியானதேயாகும் என்றார். அப்போதும் ஹரீஸ் விடவில்லை இதுபற்றி நாமும் பேசுகிறோம். எல்லை நிர்ணயக் குழுவோடும் பேசுகிறோம் இதற்கென ஒரு குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது. காரணம் இதுமிகவும் நெருக்கடியான பிரச்சினையாகும் என்றார்.
முடிவாக விஜித ஹேரத் எம்.பி. ஹரீஸைப் பார்த்துக்கூறுகையில், உங்களிடம் தெளிவாக பதில் இல்லை. நீங்களே பிரச்சினையாக இருக்கிறீர்கள். உங்களாலேயே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எல்லை நிர்ணயப் பிரச்சினை என எதுவும் இல்லை. இதை இப்படியே விட்டால் பாரிய இனமோதல் ஏற்பட்டுவிடும் நான் முன் கூட்டியே எச்சரிக்கிறேன் ஞாபகம் இருக்கட்டும் என்றார்.
இந்த சிக்கலான பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு முன்பதாக தகுந்த தெளிவைப் பெறவேண்டியிருக்கிறது.
* கிழக்கில் 27 பிரதேச சபைகள் இயங்குகையில் கல்முனை வடக்கு பிரதேச சபை மட்டும் ஏன் இல்லை.
* சாய்ந்தமருது பிரதேச சபை இருக்கக் கூடாதா?
* முன்பு போல் 4 பிரதேச சபைகள் இருப்பதே தீர்வு என்பது எப்படி?
* அட்டாளைச்சேனை உள்ளூராட்சி மன்றத்தை தரமுயர்த்தப் போகிறார்களே?
அம்பாறை– மட்டக்களப்பு –திருகோணமலை என்னும் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும் நிலத்தொடர்பற்ற வகையிலேயே முஸ்லிம் அதிகார அலகு வேண்டும் என தனித்துவத் தலைவர் அஷ்ரப் வலியுறுத்தியிருந்தார். தென்கிழக்கு என அதை அடையாளப்படுத்தி தென்னிந்தியாவிலுள்ள நிலத் தொடர்பற்ற பாண்டிச்சேரி என்னும் புதுச்சேரியையும் உவமை காட்டியிருந்தார்.
ஆக கரையோர மாவட்டத்தையும் அதிகார அலகையும் கிழக்கு முஸ்லிம்கள் பெற்றுக்கொள்வதெனில் கிழக்குத் தமிழரின் இணக்கப்பாடும் ஒத்துழைப்பும் கண்டிப்பாகத் தேவையாகும். அதுபோல் வடக்கு, கிழக்கு தமிழர் சமஷ்டியையும், வடக்கு– கிழக்கு இணைப்பையும் ஈட்டிக்கொள்வதெனில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் இணக்கப்பாடும் ஒத்துழைப்பும் கண்டிப்பாகத் தேவையாகும்.
இரு சமூகங்களும் தத்தமது அபிலாஷைகளைப் பற்றி நோடியாகப் பேசி ஒழுங்கான தீர்மானத்துக்கு வராமல் ஒன்றுக்கொன்று ஒளித்து, பேரின அதிகார வர்க்கத்திடமே சரணடைகின்றன. இரு பூனைகளுக்கு ஒரு குரங்கு அப்பம் பங்கிட்ட கதையே நிகழ்கிறது. செக்கச்செவேலென செம்மறி ஆடுகள் சிங்காரமாக நடை நடந்து பாலைவனத்தையே நம்பி வந்து பலிவாங்கும் பூசாரியைத் தேடுதடா என்கிறது ஒருபாடல்…