நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்தாரி மீது 50 கொலைக் குற்றச்சாட்டுக்கள்
மேலதிகமாக 36 கொலை முயற்சி வழக்குகள்
நியூசிலாந்தில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தாக்குதல்தாரி பிரெண்டன் டொரன்ட் 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவிருப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொலிஸ் கூறுகையில், நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் தாக்குதல் நடத்திய குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுக்களை எதிர் கொள்ளவிருக்கிறார். மேலும் 36 பேரை கொலை செய்ய முயன்றதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை” என்றும் தெரிவித்துள்ளனர்.
நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் பள்ளிவாசல் மற்றும் லின்வூட் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கடந்த மாதம் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றார்.
இதில் 50 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் முக்கிய குற்றவாளியான பிரெண்டன் டொரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. உலகையே இந்த சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து தானியக்க துப்பாக்கி மற்றும் ரைபில் ரக துப்பாக்கிகளை கடுமையான துப்பாக்கிகளுக்கான விதிகளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக நியூஸிலாந்து அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli