ஹஜ் சட்டமூலத்திற்கான நகர்வுகள்

0 946

ஹஜ் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றாகும். அது இறு­தி­யான கட­மையும் கூட. முஸ்­லிம்­களின் ஐம்­பெரும் கட­மை­களில் ஒன்­றான ஹஜ் கட­மையை தனது வாழ்­நாளில் ஒரு தட­வை­யேனும் நிறை­வேற்றிக் கொள்­வ­தையே முஸ்­லிம்கள் இலட்­சி­ய­மாகக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

எமது நாட்டின் ஹஜ் ஏற்­பா­டுகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் அரச ஹஜ் குழுவின் மேற்­பார்­வையின் மற்றும் வழி நடத்­தல்­களின் கீழ் தனியார் துறை­யி­ன­ரான ஹஜ் முகவர் நிலை­யங்கள் மூலமே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள் வரு­டாந்தம் பல சவால்­க­ளுக்கு உள்­ளாகி வரு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

எமது நாட்டில் இது­வரை காலம் ஹஜ் மற்றும் உம்ரா ஏற்­பா­டு­களை சட்ட ரீதி­யாக ஒருங்­க­மைத்துக் கொள்­வ­தற்கு சட்ட ஏற்­பா­டுகள் இல்­லா­ம­லி­ருப்­ப­தே­ இவ்­வா­றான பல சவால்கள் மற்றும் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­வ­தற்­கான கார­ணங்­க­ளாகும். ஹஜ் உம்ரா ஏற்­பா­டு­களை ஒரு சட்ட வரை­ய­றைக்குள் உள்­ள­டக்கிக் கொள்­வதன் அவ­சி­யத்தை உணர்ந்து அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஹஜ் சட்ட மூலத்தை தயா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுத்­துள்­ளமை ஒரு வர­லாற்றுப் பதி­வா­கவே கொள்­ளப்­ப­டு­கி­றது.

‘எந்­த­வொரு மனி­தனும் பாவ­மான காரி­யங்­களைத் தவிர்த்து நன்­மையை எதிர்­பார்த்து சிறந்த முறையில் இறை­யச்­சத்­துடன் ஹஜ்ஜை நிறை­வேற்­று­கி­றானோ அவன் அன்று பிறந்த பால­க­னைப்­போன்று ஆகி விடு­கிறான்’ என்றே ஹதீஸ் தெரி­விக்­கி­றது.

‘உடல் ஆரோக்­கியம் மற்றும் வசதி வாய்ப்­புகள் உள்­ள­வர்­க­ளுக்கே ஹஜ் கட­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது’ என அல்லாஹ் குர்­ஆனில் கூறி­யுள்ளான் என்­றாலும் அனை­வரும் தனது வாழ்­நாளில் ஹஜ்ஜை நிறை­வேற்­றிக்­கொள்­ளவே விரும்­பு­கி­றார்கள்.

ஹஜ் சட்­டத்­துக்­கான அவ­சியம்

பல தசாப்த கால­மாக காலத்­துக்கு காலம் ஹஜ் விவ­கா­ரங்­க­ளுக்கும் பொறுப்­பாக இருந்த அமைச்­சர்கள் ஹஜ் குழு­வொன்­றினை நிய­மித்து முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் ஊடாக ஹஜ் ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. சில சந்­தர்ப்­பங்­களில் ஹஜ் விவ­கா­ரங்கள் இரண்டு அர­சியல் தலை­மை­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­தன. இதனால் ஹஜ் கோட்டா பகிர்வில் பல்­வேறு மோச­டிகள் இடம்­பெற்­றன.

இவ்­வா­றான நிலையில் ஹஜ் கோட்டா பகிர்வில் அர­சியல் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டதால் ஹஜ் முக­வர்கள் தங்­க­ளது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் நீதி­மன்று இவ்­வி­ட­யத்தில் தலை­யிட்டு நியாயம் பெற்றுத் தர வேண்­டு­மெ­னவும் 2012 ஆம் ஆண்டு உயர்­நீ­தி­மன்றில் வழக்­கொன்­றினைத் தொடர்ந்­தனர்.

ஹஜ் முக­வர்­களின் மனு­வினை விசா­ரித்த உயர்­நீ­தி­மன்றம் 2013 ஆம் ஆண்டு இலங்­கையின் ஹஜ் ஏற்­பா­டுகள் எவ்­வாறு அமைய வேண்­டு­மென வழி­மு­றை­யொன்­றினை (Guide Lines) வழங்­கி­யது. அந்த வழி­மு­றையில் ஹஜ் முக­வர்கள் நேர்­முகப் பரீட்­சை­யின்­போது பெற்­றுக்­கொள்ளும் புள்­ளி­களின் அடிப்­ப­டையில் ஹஜ் கோட்டா பகி­ரப்­பட வேண்­டு­மெனத் தெரி­வித்­தி­ருந்­தது.

இதே­வேளை, 2014 ஆம் ஆண்டு ஹஜ் கோட்டா பகிர்வின் போது உயர்­நீ­தி­மன்றம் வழங்­கிய ஹஜ் வழி­முறை மீறப்­பட்­டது என ஹஜ் முக­வர்கள் சிலரால் அடிப்­படை உரிமை மீறல் மனு­வொன்­றினை உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­தது. அந்த வழக்கு தொடர்ந்தும் விசா­ர­ணையின் கீழ் உள்­ளது.

2015 ஆம் ஆண்­டிலும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்­பாளர் மற்றும் அரச ஹஜ் குழு­வுக்கு எதி­ராக ஹஜ் முக­வர்கள் சிலர் ஹஜ் வழி­முறை (Guide Lines) மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் நீதி­மன்றின் தீர்ப்­பினை அவ­ம­தித்­துள்­ள­தா­கவும் உயர் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. அவ்­வ­ழக்கில் ஹஜ் முக­வர்கள் வெற்றி பெற­வில்லை. 2017 ஆம் ஆண்டும் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டாலும் நீதி­மன்று அவ்­வ­ழக்­கினைத் தள்­ளு­படி செய்­தது.

கடந்த காலங்­களில் இவ்­வாறு பல தட­வைகள் ஹஜ் முக­வர்கள் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றப்­ப­டி­களை ஏறி­யுள்­ளார்கள். பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரி­டமும் ஹஜ் முக­வர்கள் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் முறை­யிட்டு பொது­ப­ல­சேனா அமைப்பு இவ்­வி­வ­கா­ரத்தில் தலை­யிட வேண்­டு­மெனக் கேட்­டுக்­கொண்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வா­றான நிலையில் ஹஜ் ஏற்­பா­டுகள் ஒரு சட்­டத்தின் மூலம் நெறி­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டாலே ஹஜ் ஏற்­பா­டு­களை எதிர்­கா­லத்தில் சவால்­க­ளின்றி பிரச்­சி­னை­க­ளின்றி முன்­னெ­டுக்க முடியும் என்­ப­தனை உணர்ந்த முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்­கென தனி­யான சட்­ட­மொன்­றினை இயற்றிக் கொள்ள வேண்­டு­மெனத் தீர்­மா­னித்தார்.

அமைச்சர் ஹலீம் ஹஜ் சட்ட மூலத்தை தயா­ரித்துக் கொள்­வ­தற்­கான அனு­ம­தியை அமைச்­ச­ர­வை­யிடம் கோரினார். அமைச்­ச­ரினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ரவைப் பத்­திரம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. ஹஜ் சட்ட மூலத்தை தயா­ரிக்கும் பணிகள் தற்­போது துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. ஹஜ் சட்ட மூல­ நகல் வரை­பொன்று தயா­ரிக்­கப்­பட்டு பல்­வேறு தரப்­பி­ன­ரதும் கலந்­து­ரை­யா­ட­லுக்கும் ஆலோ­ச­னை­க­ளுக்கும் விடப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் எம்.பி. க்களின் அக்­க­றை­யின்மை

அரச ஹஜ் குழுவே ஆரம்­பத்தில் ஹஜ் சட்ட மூலத்தை வரைவு செய்­தது. இவ்­வ­ரை­புக்கு சட்­ட­வல்­லு­நர்­களின் ஆலோ­ச­னையும் பெற்றுக் கொள்­ளப்­பட்­டது. அதன்­பின்பு ஹஜ் சட்டமூல­ நகல் வரைபு சிவில் சமூக பிர­தி­நி­திகள், அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா­சபை, தேசிய சூரா­சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் புத்­தி­ஜீ­வி­களின் பார்­வைக்கு வழங்­கப்­பட்டு அவர்­களின் கருத்­து­களும் உள்­வாங்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­னது கவ­னத்­திற்கு இந்த சட்­ட­வ­ரை­பினை முன்­வைப்­ப­தற்கு சிவில் சமூக அமைப்­புகள் கலந்­து­கொண்ட கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. கடந்த பெப்­ர­வரி மாதம் 23 ஆம் திகதி கொழும்பு தபால் தலை­மை­யக கேட்போர் கூட அரங்கில் இந்­தக்­கூட்டம் நடை­பெற்­றது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரிகள் மற்றும் அரச ஹஜ் குழுவின் அதி­கா­ரி­களும் கலந்­து­கொண்ட கூட்­டத்தில் ஹஜ் சட்ட வரைபு விரி­வாக ஆரா­யப்­பட்­டது. இதன் பின்னே முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்­றுக்­கொள்­வ­தெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

ஆனால் கடந்த 21 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்ற இக்­கூட்­டத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே கலந்­து­கொண்­டமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். முஸ்­லிம்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தில் 21 முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இருக்­கி­றார்கள். இவர்­களில் 8 பேர் மாத்­திரம் கலந்­து­கொண்­டார்கள் என்றால் சமூ­கத்தின் மீது அவர்கள் எவ்­வ­ளவு தூரம் அக்கறையின்றி இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அன்றைய தினம் பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற தினமாகும். பாராளுமன்ற கட்டடத் தொகுதியிலேயே இந்தக் கூட்டமும் நடைபெற்றது. என்றாலும் எமது பிரதிநிதிகள் இக்கூட்டத்தை ஹஜ் சட்ட மூலத்தை முக்கியமாகக் கொள்ளவில்லை.

கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அலிசாஹிர் மௌலானா, பைசல்காசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பௌஸி, முஜிபுர் ரஹ்மான், நஸீர், இம்ரான் மஹ்ரூப், மன்சூர் ஆகியோரே கலந்துகொண்டிருந்தனர். தாம் சமூகத்தின் காவலர்கள், சமூகத்துக்காகவே அரசியல் செய்பவர்கள் என்று வீரவசனம் பேசும் எமது சிரேஷ்ட அமைச்சர்களில் எவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இரா­ஜாங்க அமைச்சர் அமீர் அலியின் சிபா­ரிசு

பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்ற முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக், முஸ்லிம் சமய விவ­கார அமைச்சின் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப், அமைச்சின் செய­லாளர் திரு­மதி எம்.எஸ். மொஹமட், அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் ஆகி­யோரும் பங்­கு­கொண்­டி­ருந்­தனர்.

இரா­ஜாங்க அமைச்சர் கலந்­து­ரை­யா­டலில் சில முக்­கிய சிபா­ரி­சு­களை முன்­வைத்தார். அவ­ரது சிபா­ரிசுகள் முக்­கி­ய­மா­னவை. ஹஜ் சட்ட மூல வரைபில் ஹஜ் குழு­வுக்கு தெரிவு செய்­யப்­படும் 9 பேரில் 7 பேர் அமைச்­ச­ரி­னாலே தெரிவு செய்­யப்­ப­டுவர் என குறிப்­பிட்­டி­ருந்­தது. இவ்­வாறு தெரிவு செய்­யப்­ப­டு­வது ஹஜ் அர­சியல் மயப்­ப­டுத்­த­லாகும் எனத் தெரி­வித்த அவர் ஹஜ் குழு­வுக்கு 7 பேரே நிய­மிக்­கப்­பட வேண்டும் என்றார். 7 பேரில் இரு­வரே அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட வேண்டும். ஏனைய ஐவரும் உலமா சபையின் தலைவர், வக்பு சபையின் தலைவர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஒருவர் அல்­லது நிர்­வாக சேவை அதி­காரி ஒருவர் மற்றும் அமைச்சின் செய­லாளர் ஆகி­யோ­ராக அமைய வேண்டும் என்றார்.

எதிர்­கா­லத்தில் முஸ்லிம் சமய விவ­கா­ரங்­க­ளுக்கு மாற்று மத அமைச்சர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்டால் ஹஜ் குழு நிய­ம­னத்தில் பாத­கங்கள் ஏற்­படும் என்­பதைக் கருத்­திற்­கொண்டே இத்­தி­ருத்தம் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்றார். எதிர்­கா­லத்தில் ஹஜ் ஏற்­பா­டுகள் அர­சியல் மய­மாக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­தையே மக்­களும் எதிர்­பார்க்­கி­றார்கள்.

சிவில் சமூக பிர­தி­நி­திகள், ஹஜ் முக­வர்கள் கூட்டம்

ஹஜ் சட்ட மூல நகல் வரைபு தொடர்­பாக இறுதிக் கலந்­து­ரை­யா­ட­லொன்று கடந்த 26 ஆம் திகதி தபால் தலை­மை­யக கேட்போர் கூட அரங்கில் இடம்­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் சிவில் சமூக அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், ஹஜ் முகவர் நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்கள் கலந்து கொண்­டனர். வை.எம்.எம்.ஏ. யின் பிர­தி­நி­திகள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் பிர­தி­நி­திகள், தேசிய சூரா கவுன்­ஸிலின் பிர­தி­நி­திகள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­திகள், சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள் என பலர் கலந்து கொண்­டனர். ஹஜ் சட்ட மூல நகல் வரை­பினை அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் சட்­டத்­த­ரணி இல்யாஸ் சமர்ப்­பித்தார்.

கலந்­து­ரை­யா­டலில் கலந்­து­கொண்ட சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள், ஹஜ் முக­வர்கள் ஹஜ் சட்ட மூல நகல் வரை­பினை ஆராய்ந்து தங்கள் கருத்­து­களை முன்­வைப்­ப­தற்கு இரு­வார கால­அ­வ­காசம் கோரி­ய­தை­ய­டுத்து இரு­வார கால­அ­வ­காசம் வழங்­கப்­பட்­டது. இரு­வா­ரத்தின் பின்பு அவர்­களின் கருத்­து­க­ளையும் உள்­வாங்கி ஹஜ் சட்ட மூல நகல் வரைபு பூர­ணப்­ப­டுத்­தப்­பட்டு சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஹஜ் முகவர் நிலைய உரி­மை­யாளர்

புதிய ஹஜ் சட்ட மூலம் தொடர்பில் கரீம் லங்கா முகவர் நிலைய உரி­மை­யாளர் ஏ.சி.பி.எம். கரீம் கருத்து தெரி­விக்­கையில்;

‘அரச ஹஜ் குழு­வுக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் செய்ய முடி­யாது என சட்­ட­மூல வரைபில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அரச ஹஜ் குழு ஏதும் ஊழல்­களில் ஈடு­பட்டால் ஹஜ் முக­வர்கள் முறைப்­பாடு செய்யும் வகையில் வரைபில் திருத்­தங்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும்.

அத்­தோடு புதி­தாக ஹஜ் முக­வர்கள் நிய­மிக்­கப்­ப­டும்­போது தேவை­யான தகை­மை­களை உடை­ய­வர்­களே நிய­மனம் பெற­வேண்டும் என்றார்.

ஹஜ் குழு உறுப்­பினர் எம்.எஸ்.எம். தாஸிம்

அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் எம்.எஸ்.எம். தாஸிம் மௌலவி கருத்து தெரி­விக்­கையில்;

‘ஹஜ் சட்ட மூல வரைபு ஹஜ் ஏற்­பா­டு­களில் அர­சியல் அழுத்­தங்கள் இடம்­பெ­றாத வகையின் அனை­வ­ரதும் கருத்­துகள் உள்­வாங்­கப்­பட்டே பூர­ணப்­ப­டுத்­தப்­படும். இன்று பதிவு செய்­யப்­ப­டாத உப­மு­க­வர்கள், பொது மக்­க­ளி­ட­மி­ருந்து பணம் அற­விட்டுக் கொண்டு பதிவு செய்­யப்­பட்ட முக­வர்கள் ஊடாக ஹஜ் மற்றும் உம்ரா பயண ஏற்­பா­டு­களைச் செய்­வதால் ஊழல் மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன. இவற்றைத் தடை­செய்­வ­தற்கு ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு தனி­யான சட்டம் அவ­சி­ய­மாகும் என்றார்.

அரச ஹஜ் குழுத் தலைவர்

அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் கருத்து தெரி­விக்­கையில்; ஏப்ரல் மாதத்தில் ஹஜ்­சட்ட மூல நகல்­வ­ரைபு பூர­ணப்­ப­டுத்­தப்­படும். இந்த சட்­டத்தின் மூலம் மக்கள் உச்ச பயனைப் பெற்­றுக்­கொள்­வார்கள். அடுத்த வரு­டத்­தி­லி­ருந்து ஹஜ் ஏற்­பா­டுகள் புதிய ஹஜ் சட்­டத்தின் மூலமே முன்­னெ­டுக்­கப்­படும். பல­த­ரப்­பி­ன­ரதும் கருத்­துகள் உள்­வாங்­கப்­பட்டே ஹஜ் சட்­ட­மூல வரைபு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.

அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்

அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் கருத்துத் தெரி­விக்­கையில்; தற்­போ­தைய ஹஜ் ஏற்­பா­டுகள் உயர்­நீ­தி­மன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்­கிய ஹஜ் வழி­மு­றையின் (Guide Lines) படியே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. ஹஜ் முக­வர்கள் தொடர்ந்து அரச ஹஜ் குழு­வு­டனும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­து­டனும் அமைச்­சர்­க­ளு­டனும் முரண்­பட்­டுக்­கொள்­கி­றார்கள்.

முக­வர்கள் தொடர்­பாக வரு­டாந்தம் முறைப்­பா­டு­களும் கிடைக்­கப்­பெற்று வரு­கின்­றன. இவற்­றுக்குத் தீர்வு காணப்­பட வேண்­டு­மென்றால் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு ஒரு தனி­யான சட்டம் தேவை என்று உண­ரப்­பட்­ட­த­னாலே அதற்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.

எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து சட்ட ரீதி­யான வழி­மு­றை­களின் பின்பு ஹஜ் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்றிக் கொள்­ளப்­படும். அடுத்த வருடம் முதல் ஹஜ் ஏற்­பா­டுகள் ஹஜ் சட்­டத்தின் கீழேயே முன்­னெ­டுக்­கப்­படும் என்றார்.

யாத்­தி­ரி­கர்­களின் நலன்கள்

ஹஜ் சட்­ட­மூலம் முக்­கி­ய­மாக ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவே அமை­ய­வேண்டும். தற்­போ­தைய ஹஜ் ஏற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ள ஹஜ் முக­வர்கள் ஹஜ் ஏற்­பா­டு­களை புனித சேவை­யாகக் கரு­தாது இலாப மீட்­டு­வதை மாத்­தி­ரமே இலக்­காகக் கொண்டு செயற்­ப­டு­வதை எவ­ராலும் மறுக்க முடி­யாது.

வரு­டாந்தம் ஹஜ் அனு­ம­திப்­பத்­தி­ரங்­களைப் பெற்றுக்கொள்ளும் 90 இற்கும் மேற்பட்ட ஹஜ் முகவர்கள் ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான ரூபாய்களை இலாபமாகப் பெற்றுக்கொள்கிறார்கள். அத்தோடு ஒரு சில முகவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். ஹஜ் ஏற்பாடுகளுடன் கடத்தல் நடவடிக்கைகளிலும் சிலர் ஈடுபடுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறானவர்களால் மொத்த ஹஜ் முகவர்களும் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்படுகிறார்கள். ஊழல், மோசடிகளில் ஈடுபடும் ஹஜ் முகவர்களுக்கு அதியுச்ச தண்டனை பெற்றுக் கொடுக்கும் வகையில் ஹஜ் சட்டமூல வரைபு பூரணப்படுத்தப்படவேண்டும். இதுவே சமூகத்திற்கும் நாட்டுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.