- ஸீனியா முஸாதிக்
ஒருவர் திடீரெனப் பணம் படைத்தவராக மாறிவிட்டால் அவர் போதைப்பொருள் வியாபாரம் செய்கின்றாரோ என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. ஏனெனில், குறுகிய காலப்பகுதியில் கோடிக்கணக்கான ரூபாக்களை உழைக்கக்கூடிய ஒரு வர்த்தகம் என்றால் அது போதைபொருள் வியாபாரம்தான்.
2018 இன் இறுதிதினத்தில் அனைவரும் புத்தாண்டை வரவேற்க காத்துநிற்கும் தறுவாயில் பொலிஸ் போதைத்தடுப்பு பணியகம் (PNB) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினூடாக இலங்கை வரலாற்றிலே அதிகூடிய ஹெரோயின் 278 கிலோகிராம் மற்றும் 3336 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இக்குற்றம்தொடர்பாக பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த இரு நபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ‘இந்த ஹெரோயின் கேக் பெட்டிகளில் அடைக்கப்பட்டு பயணப்பைகளில் நிரப்பப்பட்டநிலையில் கண்டெடுக்கப்பட்டது. மற்றும் இப்போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்ட வீடானது மிகவும் பாதுகாப்பானதாகவும் முழு இலங்கைக்கும் விநியோகிக்கப்படும் இடமாகும்’ என அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இலங்கையில் அதிகூடிய ஹெரோயின் தொகையாக 2003ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட 261 கிலோகிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருட்கள் கடத்தலில் இலங்கை ஒரு முக்கிய கேந்திர நிலையமாக விளங்குகிறதுடன், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து கடத்தல் மூலம் கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் கொழும்பு துறைமுகம் மற்றும் விமான நிலையத்தின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன.
2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 வரை 383 வெளிநாட்டு நபர்கள் போதைப்பொருட்கள் கடத்த முயற்சிக்கையில் இலங்கையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டில் அதிகமாக பாகிஸ்தானிலிருந்து கடல் மற்றும் ஆகாய மார்க்கமாகவும் கடத்தல் நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன.
குறிப்பிட்டளவு ஹெரோயின் போதைப்பொருளை நன்கு கடத்தலில் தேர்ச்சிபெற்ற ஒருவரின் மூலம் உடலில் மறைத்தோ அல்லது வயிற்றில் மறைத்து வைத்து கடத்த முயன்றுள்ளனர். பெரியளவிலான ஹெரோயின் போதைப்பொருள் இலங்கைக்கு மீனவர்கள் மூலம் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டுள்ளது. 2017 இல் சிலாபம் பொலிஸாரினால் அதிகூடிய தொகையைக் கொண்ட 211kg 815g ஹெரோயின் கைப்பற்றப்பட்டதென பொலிஸ் 2017 ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலொன்றிலிருந்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 928 கிலோகிராம் கொகெய்ன் போதைப்பொருளின் மதிப்பு இலங்கை ரூபாயில் 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க முதலீட்டு அபிவிருத்தி சபை வளாகத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு முன்பாக 2018.01.15 ஆம் திகதி இந்த கொகெய்ன் போதைப்பொருள் அழிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பெருந்தொகை மதிப்புள்ள போதைப்பொருள் பகிரங்கமாக அழிக்கப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உலகின் மிக மோசமான பயங்கரவாத அமைப்புக்களின் போதைபொருள் வர்த்தகம் இலங்கையின் ஊடாகவே நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
இலங்கைக்குள் வெளிநாடுகளிலிருந்தே போதைப் பொருட்கள் குறிப்பாக ஹெரோயின், பிரவுண் சுகர் போன்றவை கொண்டு வரப்படுகின்றன. இவற்றை கடல் அல்லது ஆகாய மார்க்கமாகவே கொண்டுவர வேண்டும். அதற்கு கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்புத் துறைமுகமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையைச் சுற்றிய கடற்பகுதிகள் கடற்படையினரின் தீவிர கண்காணிப்பில் இருப்பதால் படகுகள் மூலம் கொண்டுவருவது சாத்தியமில்லை. எனவே கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது கொழும்புத்துறைமுகம் ஊடாகவே போதைப் பொருட்கள் இலங்கையை வந்தடைகின்றன.
போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனையை உலகிலுள்ள நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இவற்றில் இலங்கையும் உள்ளடங்கும். இலங்கையிலும் 2008 ஆம் ஆண்டு முதல் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பிலான கைதுகள் அதிகரித்து வந்திருக்கின்றன.
இதனடிப்படையில் நச்சு போதைப்பொருள் தொடர்பாக உயர் நீதி மன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டவர்கள் தொடர்பான புள்ளிவிபர அறிக்கையின்படி, ஆண், பெண் வேறுபாடின்றி போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்னிக்கை 275, வேறு தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3119 ஆகும்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்தின்படி, போதையின் பிடியிலிருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலில் விரிவான வேலைத்திட்டங்கள் பலவும் தற்போது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, அச்செயற்றிட்டங்கள் ஜனாதிபதியால் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு சிறிதும் இடமளிக்காது அதனை முற்றாக ஒழிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஜனாதிபதி எதிர்பார்ப்பதுடன், இதன்போது சட்டத்தினை வினைத்திறனாகவும் கடுமையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்குவதற்குத் தேவையான சட்ட வரைவும் தற்போது ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய துரிதமாக இடம்பெற்று வருகின்றது.
2017 ஆம் ஆண்டில் போதை பழக்கத்திற்கு அடிமையான 2706 நபர்களுக்கும் புனர்வாழ்வு சேவைகள் வழங்கப்பட்டன. இவர்களில் 1280 (47%) பேர் அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை மூலமும், 295 (11%) பேர் சிறைச்சாலை திணைக்கள புனர்வாழ்வு திட்டங்கள் ஊடாகவும், 608 பேர் (23%) அரச சார்பற்ற அமைப் புக்களின் முன்னெ டுப்புக்கள் மூலமாகவும், 523 பேர் (19%) புனர்வாழ்வு அலுவலகத்தின் கீழ் புனர்வாழ்வு அளிக்கப்பட்டன.
கொழும்பு மாவட்டத்தை (43%) சேர்ந்தவர்களே புனர்வாழ்வு மையத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். 30 தொடக்கம் 54 வயதுக்குட்பட்டவர்களே அங்கு சிகிச்சை பெறுகின்றனர். 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் வீதம் 15% ஆக அதிகரித்துள்ளது.
-Vidivelli