நீதிமன்ற சுயாதீனம் கேள்விக்குறிதான்
கடற்படை தளபதியின் வழக்குகளில் இது உறுதியாகின்றது என்கிறார் சுமந்திரன் எம்.பி.
இலங்கையின் நீதிமன்ற சுயாதீனம் கேள்விக்குறியாகியுள்ளது என்பது கடற்படை தளபதி கரன்னாகொடவின் வழக்குகளில் உறுதியாகின்றது. 11 மாணவர்கள் கொலைக் குற்றசாட்டில் அவரை காப்பாற்ற சட்டத்துறையே செயற்படுகின்றது. சாதாரண இளைஞர்களின் கொலைகளுக்கே இந்த நிலைமை என்றால் விடுதலைப்புலிகள் மீதான குற்றங்களுக்கு என்னவாகுமென சபையில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன், கடற்படை தளபதி விவகாரத்தை உதாரணமாக கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச விசாரணை தலையீடுகளை ஏற்படுத்த வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலகங்கள் மீதான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
உயர் நீதிமன்ற செலவினத்தை பொறுத்தவரையில் கடந்த மாதம் ஒரு விவாதத்தில் ஈடுபட்டபோது இரண்டு தரப்பில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உயர்நீதிமன்றம் சுயாதீனமானது என கூறினார்கள். ஆகவே சர்வதேச நீதிபதிகள் தேவையில்லையெனவும் எமது நீதிபதிகள் சுயாதீனமானவர்கள் அவர்கள் மூலமாக விசாரணைகளை கையாள முடியும் என கூறினார்கள். எனினும் சில விடயங்களில் குறிப்பாக அண்மைக்கால அரசியல் சம்பவங்களில் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் நீதித்துறையின் செயற்பாடுகளில் உள்நாட்டு நீதித்துறை சுயாதீனமானது அல்ல என்பதை நான் அப்போதும் கூறினேன். இது நிரூபிக்கப்பட்டுமுள்ளது. இதற்கு நல்லதொரு உதாரணம் உள்ளது.
குற்றவாளிகள் தம்மை கைது செய்வதை தடுக்க நீதிமன்றம் நாடி பிணை கேட்கின்ற வேடிக்கையான நிலைமை உருவாகியுள்ளது. கடற்படை தளபதி கரன்னாகொட அவரை கைது செய்வதை தடுப்பதற்கான மேன்முறையீடு ஒன்றினை செய்துள்ளார். தான் கைது செய்யப்படுவதை தடுக்க முயற்சித்தும் வருகின்றார். ஆனால் 11 இளைஞர்கள் கொலையுடன் முக்கிய சந்தேக நபராக இவர் உள்ளார். இந்த இளைஞர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் உள்ளனரா இல்லையா என்பது பற்றி நாம் பேசவில்லை. கொல்லப்பட்ட 11 பேரும் விடுதலைப்புலிகளும் அல்லர். இவர்களை கடத்தி பணம் பறிக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளது. இது கடற்படை தளபதிக்கும் தெரிந்துள்ளது, முதலாம் முறைப்பாட்டையும் அவரே செய்துள்ளார். அவர் ஒரு தளபதி என்ற காரணத்தினால் இதனைக் கைவிட முடியுமா? ஆயுதப் படையின் தலைவராக இருந்தால் அவருக்கு கைதில் இருந்து பாதுகாப்பு வழங்க முடியுமா? திருகோணமலை கடற்படை முகாமுக்கு அருகில் இந்த இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழ் இளைஞர்கள்.
மேலும் கரன்னகொடவின் சட்டத்தரணியே இது யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் என்பதை வெளிப்படையாக கூறுகின்றார். யுத்த காலம் என்றதால் எந்த கொலையும் செய்திருக்க முடியும் எனக் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கொல்லப்பட்டவர்கள் யாராகவும் இருக்கலாம். ஆனால் இந்த கொலைகள் நியாயமானது அல்ல. குறித்த இளைஞர்களின் பெற்றோர் அவர்களை தேடி வருகின்றனர். ஆகவே இதில் நீதிமன்றம் உள்ளிட்ட ஆணைக்குழுக்கள் பக்கச்சார்பாக நடந்துள்ளன. இதனை நியாயப்படுத்த முடியாது. இது எதனை வெளிப்படுத்துகின்றது என்றால் நீதித்துறை,சட்டத்துறை என்பன பக்கச்சார்பாக செயற்பட்டு வருகின்றன என்பதையே. புலிகளுடன் தொடர்புபடாத தமிழ் இளைஞர்களுக்கே இந்த நிலைமை என்றால் புலிகளுக்கு என்ன நிலைமை என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
ஆகவே பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச தலையீடு மற்றும் ஒத்துழைப்புடன் மட்டுமே இடம்பெற முடியும். அதேபோல் பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட வேண்டும். கரன்னாகொட விடயத்தில் நீதிச்சேவை சுயாதீனம் இல்லை என்பது நல்லதொரு உதாரணம் . ஆகவே கடற்படை தளபதி விவகாரத்தை உதாரணமாக கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செயற்பட வேண்டும். முழு உலகமும் இதனைக் கருத்தில் கொண்டு சர்வதேச தலையீடுகளை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
-விடிவெள்ளி