- ஏ.ஆர்.ஏ.பரீல்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி ஒரு கரி நாளாகும். அன்று கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களில் அநேகர் அந்த அதிர்ச்சியிலிருந்தும் இன்றும் மீளாதவர்களாகவே இருக்கிறார்கள்.
அன்று தங்கள் வீடுகளும், கடைகளும், வர்த்தக நிலையங்களும், பள்ளிவாசல்களும் தீயினால் கருகிய காட்சிகள் இன்றும் அம்மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன.
தங்களது சொத்துக்களுக்கும், தீயினால் எரியுண்ட வீடுகளுக்கும், கடைகளுக்கும் நஷ்டஈடு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இன்றுடன் 368 நாட்களை அவர்கள் கடத்தி விட்டார்கள்.
ஆனால் முஸ்லிம்களின் சொத்துக்களை எரித்தவர்கள், இரு உயிர்களைப் பறித்தவர்கள் சுதந்திரமாக உலாவ விடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் விளக்கமறியல் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டு தற்போது வெளியில் விடப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வழக்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
வன்முறை சம்பவங்களின் பாதிப்புகள்
2018 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களினால் கண்டி மாவட்டத்தில் 527 முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இக்குடும்பங்களைச் சேர்ந்த 2635 பேர் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதால் அவர்கள் மாதக்கணக்கில் உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்களின் தயவிலும் வாழ வேண்டியேற்பட்டது.
259 வீடுகள் பகுதியளவிலும் 30 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களின் 37 கடைகள் முற்றாக எரிக்கப்பட்டன. 180 கடைகள் பகுதியளவில் சேதங்களுக்குள்ளாகின. 80 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டன. இவற்றில் அரைவாசிக்கும் மேல் முற்றாக எரிக்கப்பட்டன.
அன்றைய வன்செயல்களின் போது இனவாதிகள் பள்ளிவாசல்களிலும் கை வைத்தனர். 17 பள்ளிவாசல்கள் தாக்கி சேதமாக்கப்பட்டன. இவற்றில் ஒரு பள்ளிவாசல் முழுமையாக சேதமாக்கப்பட்டது. அன்றைய தினம் திகன பிரதேசம் முழுமையான யுத்த பிரதேசம் போன்றே காட்சியளித்தது.
வன்முறைகளுக்கான காரணம்
முஸ்லிம்களுக்கெதிராக இந்த வன்செயல்களுக்கு காரணம் எமது முஸ்லிம் இளைஞர்கள் நால்வரின் செயற்பாடுகளே யாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. சிறியதோர் வாகன விபத்து தொடர்பாக இடம்பெற்ற வாக்குவாதமே பலகோடி ரூபா இழப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இருவரின் உயிர்களைக் காவு கொண்டிருக்கிறது. அத்தோடு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சாரதி தாக்கப்பட்டு பின்பு வைத்தியசாலையில் உயிரிழந்திருக்கிறார்.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நான்கு முஸ்லிம் இளைஞர்கள் பயணித்த முச்சக்கர வண்டியுடன் பெரும்பான்மை இனத்தவர் ஒருவர் செலுத்திய லொறி மோதியதனால் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த அழிவுகளுக்குக் காரணமாய் அமைந்துள்ளது.
2018 பெப்ரவரி 22 ஆம் திகதி இரவு தெல்தெனிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பு ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தின் போது முஸ்லிம் இளைஞர்களால் லொறி சாரதியான தெல்தெனிய அம்பால கிராமத்தைச் சேர்ந்த எச். குமாரசிறி (48) தாக்கப்பட்டார்.
காயங்களுக்குள்ளான அவர் முதலில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்பு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். நான்கு முஸ்லிம் இளைஞர்களும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பெரும்பான்மை இன சாரதியின் மரணத்துக்கு முஸ்லிம் இளைஞர்களே காரணமாக இருந்ததால் அப்பகுதி பெரும்பான்மை இனத்தவர்கள் திகன பகுதியில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டனர். இரகசியமான முறையில் தாக்குதல் திட்டமிடப்பட்டது. முஸ்லிம்களைத் தாக்குவதற்காக இனவாதக் கருத்துக்கள் ஒரு சிலரால், பெரும்பான்மை இன அமைப்புகளால் பொது மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இதுவே வன்முறை சம்பவங்களுக்கு காரணமாய் அமைந்தன.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி, சாரதியின் பிரேத அடக்கம் நடைபெறவிருந்தது. அன்றைய தினத்துக்கு முன்பு 4 ஆம் திகதி இரவு இறந்த சாரதியின் கிராமமான அம்பால சந்தியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பாரிய வர்த்தக நிலையம் தாக்கப்பட்டு தீயிடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 24 பேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சாரதியின் பிரேதம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவதற்கு மேற்கொண்ட முயற்சி பொலிஸாரால் தடை செய்யப்பட்டது. அவரது சொந்த ஊரிலே பிரதம் அடக்கம் செய்யப்பட்டது. என்றாலும் அன்றைய தினம் மார்ச் 5 ஆம் திகதி பெரும்பான்மை இனத்தவர்கள் வெற்றுப் பிரேத பெட்டியுடன் ஊர்வலம் வந்தபோது தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.
தாக்குதல் இடம்பெறப்போவதை அறிந்து கொண்ட முஸ்லிம்களில் அநேகர் தங்கள் வீடுகளையும், கடைகளையும் கைவிட்டு வேறு பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர். இதனாலேயே ஒரு உயிரிழப்புடன் பாதுகாத்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது.
தனது எரியும் வீட்டில் சிக்கிக் கொண்ட சம்சுதீன் அப்துல் பாசித் (24) மூச்சுத்திணறி உயிரிழந்தார்.
கண்டி ஹீரஸ்ஸகலயைச் சேர்ந்த மௌலவி சதகத்துல்லா அக்குறணைக்குச் சென்று பஸ் வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தபோது மார்ச் 7 ஆம் திகதி இனவாதிகளால் தாக்கப்பட்டு சில மாதங்கள் சுயநினைவற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி காலமானார்.
நஷ்டஈட்டுக் கோரிக்கை
கண்டி, திகன பகுதிகளில் இடம் பெற்ற வன்செயல்களை அடுத்து 546 சொத்துக்களுக்கு நஷ்டஈடு கோரி விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் 372 சொத்துக்களுக்கே இதுவரை நஷ்டஈடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வன்செயல்களினால் மக்களும் மக்களது சொத்துக்களும் பாதிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகியும் 174 சொத்துக்களுக்கு இதுவரை நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை.
நஷ்டஈடுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் புனர்வாழ்வு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டாலும் அதற்கான அங்கீகாரத்தை இதுவரை அமைச்சரவை வழங்காமை கவலைதரும் விடயமாகும். சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலம் வாய்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் இவ்விடயத்தில் மௌனமாக இருப்பது ஏனென்று தெரியவில்லை. நஷ்டஈடுகள் துரிதப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தாலும் செயற்பாடுகள் மந்தகதியிலே இருக்கின்றன. அதிகாரம் மிக்க பிரதமர் பதவியை வகிக்கும் ரணில் விக்கிரமசிங்கவே புனர்வாழ்வுக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கிறார். என்றாலும் உறுதிமொழிகள் வார்த்தைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கிறது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி கண்டி, திகன பகுதிகளில் இடம் பெற்ற வன்செயல்களால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு கோரி 546 விண்ணப்பங்கள் புனர்வாழ்வு அதிகாரசபைக்கு கிடைத்துள்ளன. அவற்றில் 372 சொத்துக்களுக்கு நஷ்ஈடு வழங்கப்பட்டு விட்டன.
174 சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியுள்ளது. அதன் விபரங்கள் அருகிலுள்ள அட்டவணையில்.
கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை 372 சொத்துக்களுக்கு 19 கோடி 8 இலட்சத்து 45 ஆயிரத்து 392 ரூபா நஷ்டஈடு புனர்வாழ்வு அதிகாரசபையினால் வழங்கப்பட்டுள்ளது.
எஞ்சிய 174 சொத்துக்களுக்கு 17 கோடி 56 இலட்சத்து 7 ஆயிரத்து 64 ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட வேண்டியுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையே வழங்க வேண்டும். முஸ்லிம் அமைச்சர்களுக்கு இந்த விபரங்களை நாம் முன்வைக்கிறோம். அவர்கள் செயற்றிறன் மிக்கவர்களாக சமூக நலனில் அக்கறையுள்ளவர்களாக மாறுவார்களா-?
தலா ஒரு இலட்சத்துக்குட்பட்ட நஷ்டஈடுகளைக் கொண்ட 372 சொத்துகளுக்கு முழுமையான நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 174 சொத்துகளின் இழப்பீடுகள் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவையாகும். இவற்றுள் 145 சொத்துகளுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் பகுதியளவு நஷ்ட ஈடுவழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு 14 கோடியே ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 900 ரூபாவரை நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த 145 சொத்துகளும் பிரதேச செயலாளர் பிரிவுகள் ரீதியில் பின்வருமாறு அமைத்துள்ளன. அக்குறனை11 பூஜாபிட்டிய 21, குண்டசாலை 60, பாத்ததும்பற14, ஹாரிஸ்பத்துவ 28, யடிநுவர 3, கண்டி நகரமும் கங்கவட்ட கோறளையும் 5, மினிப்பே 1, மெதமஹநுவர 2.
வன்செயல்கள்; சந்தேக நபர்கள்
கண்டி திகன வன்செயல்களுடன் தொடர்புபட்டதாக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டவர்களில் 34 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கெதிரான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இவர்களில் இருவர் பிரதான சந்தேக நபர்களாவர். அவர்கள் மஹாசோன் பலகாயவின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் கும்புரேகம சோபித தேரர் என்போர்களாவர். முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களில் பௌத்த மத குரு ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளமையை இது உறுதி செய்கிறது. பாதிக்கப்பட்ட திகன முஸ்லிம்கள் தரப்பில் ஆலோசனை மற்றும் நல்லிணக்கப்பேரவை (ARC) யின் சட்டத்தரணிகள் வழக்கில் ஆஜராகி வருகின்றனர். ஏனைய பிரதேச வன்செயல் களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பில் கண்டி சட்டத்தரணிகள் ஆஜராகி வருகின்றனர்.
சமூக அமைப்புகள் உதவி
வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கண்டி நிவாரண மத்திய நிலையம் (KRCC) நிதியுதவிகளை வழங்கி அவர்களது வாழ்வாதாரத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை பாராட்டத்தக்கது. அரசாங்கம் நஷ்டஈடுகளை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களை தமது சொந்தவீடுகளில் மீளக் குடியமர்த்தவும், வர்த்தகங்களை ஆரம்பிக்கவும் 90 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளதாக கண்டி மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக் தெரிவித்தார். இந்த 90 மில்லியன் ரூபா நிதியுதவியில் 55 மில்லியின் ரூபா திகன பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
கண்டி மாவட்ட உலமா சபை, கண்டி மஸ்ஜித் சம்மேளனம், கண்டி முஸ்லிம் வர்த்தகர்கள் சங்கம், யங்பிரண்ட்ஸ் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்த நிதியுதவியினை வழங்கியிருந்தன.
இராணுவம் சுத்திகரிப்புப் பணிகளையே மேற்கொண்டது
கண்டி, திகன வன்செயல்கள் இடம்பெற்று இரு தினங்களில் பின்பு அன்றைய இராணுவ தளபதி உயர் இராணுவ அதிகாரிகளுடன் கண்டிக்கு வந்து, கண்டி லைன் பள்ளிவாசலில் வன்செயல் நிலைமை குறித்து முஸ்லிம் பிரநிதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்றை நடத்தினார். கண்டி மஸ்ஜித் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்தனர்.
கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தபோது இராணுவத்தளபதி – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கையடக்கத் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டார். பின்பு வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் இராணுவத்தினால் புனர்நிர்மாணம் செய்து தருவதாக உறுதியளித்தார். ஆனால் இராணுவம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. துப்புரவு நடவடிக்கைகள் மாத்திரமே இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டது என்கிறார் கண்டி மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்தீக்.
அளுத்கமயில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் இராணுவத்தினர் புனர்நிர்மாணம் செய்துவழங்கினர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் இது நடைபெறவில்லை. வெறும் உறுதிமொழிகளே வழங்கப்பட்டன. முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு வழங்குவோம் என்று ஆட்சிபீடமேறியவர்கள் கண்டி, திகன சம்பவங்களை உடன் தடுத்து நிறுத்தத் தவறிவிட்டார்கள்.
பின்னணி என்ன?
தெல்தெனிய அம்பால கிராமத்தைச் சேர்ந்த லொறி சாரதி கண்டி வைத்தியசாலையில் காலமாகியதையடுத்து அம்பால பன்சலைக்கு பொறுப்பான பேரகெட்டிய தேரர் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்குமிடையில் பிரச்சினைகள் உருவாகாதிருப் பதற்காக ஏற்பாடுகளை மேற்கொண்டார். அவர் அம்பகஹலந்த ஜும்ஆ பள்ளிவாசலில் திகன பிரதேசத்து ஊர்ப்பிரமுகர்களைச் சந்தித்தித்தார். கண்டி மஸ்ஜித் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
காலமான லொறி சாரதியின் குடும்பத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் சுமார் ஒரு மில்லியன் ரூபா வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக இறுதிக்கிரியை செலவுகளுக்கு 2 இலட்சம் ரூபா வழங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டு அப்பணம் ஏற்பாடு செய்யப்பட்டாலும் சாரதியின் குடும்பத்தினால் இது நிராகரிக்கப்பட்டது.
கண்டி திகன வன்செயல்களின் பின்னணியில் மஹசோன் பலகாய உட்பட பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டுள்ளன. ஒரு சில அரசியல் வாதிகளும் இதனுடன் தொடர்புபட்டுள்ளனர். முஸ்லிம்களின் சொத்துக்களைக் கொள்ளையிட்டு அழிக்கவேண்டும் என ஒரு தரப்பு களமிறங்கியிருக்கிறது.
இனவாதக்கருத்துகள் பெரும்பான்மை மக்கள் மீது திணிக்கப்பட்டமையே இந்த வன் செயல்கள் உருவாகக் காரணமாகும். முஸ்லிம் இளைஞர்களின் செயலே இந்த வன் செயலுக்கு அடித்தளம் இட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் இவ்வாறான செயல்கள் உருவாகாமலிருக்க பிரதேசங்கள் தோறும் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்காக ஒவ்வோர் பிரதேசங்களின் மதகுருமார்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
2018 ஆம் ஆண்டு 5ஆம் திகதி வன் செயல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரும் மரணவீட்டுக்குச் சென்று வீட்டாருக்கு ஆறுதல் தெரிவித்தார். கவலையை வெளியிட்டார். இவ்வாறான அமைப்புகளைச் சேர்ந்த இனவாதம் கொண்டோர் மக்களை வன்செயல்களுக்காகத் தூண்டியிருக்கலாம்.
கடுமையான தண்டனை வேண்டும்
வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் அவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இவ்வன்முறைகளுக்கு காரணமாக இருந்த லொறிசாரதியைத் தாக்கி அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த நான்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அத்தோடு மஹசோன் பலகாயவின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்க, கும்புரேகம சோபித்ததேரர் உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி கண்டி மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளாகவுள்ளது. இவர்களே வன்முறையின் சூத்திரதாரிகளாவர்.
நல்லிணக்கம் உறுதிசெய்யப்பட வேண்டும்
வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சொத்துகளுக்கும் நஷ்டஈடு வழங்குவதுடன் மாத்திரம் அரசாங்கம் மௌனித்துவிடக்கூடாது. அப்பிரதேசங்களில் இன நல்லுறவும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். ஏனென்றால் முஸ்லிம்கள் தம்மைத் தாக்கிய, சொத்துகளை அழித்த பெரும்பான்மை இனத்தவர்களுடைய சுற்றாடலில் தொடர்ந்தும் வாழவேண்டியுள்ளது. எனவே நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இப்பணியில் அரசுடன் சேர்ந்து சிவில், சமூக இயக்கங்கள் கைகோர்க்கவேண்டும்.
-Vidivelli