ஜெரூசலத்திலுள்ள அமெரிக்காவின் துணைத் தூதரகத்தினை தனது தூதரகத்தோடு ஒன்றிணைக்கும் தீர்மானத்திற்கு மலேஷியா கடந்த திங்கட்கிழமை கடுமையான கண்டனத்தை வெளியிட்டது.
அமெரிக்காவின் இந்த செயற்பாடு பலஸ்தீன – இஸ்ரேலிய முரண்பாட்டில் இணைப்பாளராக செயற்படுவதன் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகத்தினை தோற்றுவிப்பதோடு மத்தியகிழக்கின் ஒட்டுமொத்த எதிர்ப்பினையும் ஏற்படுத்துமெனத் தெரிவித்துள்ள மலேஷியா இந்த நகர்வு பலஸ்தீனத்திற்கும் அதன் மக்களுக்கும் எதிராக எடுக்கப்பட்ட துரதிஷ்டமான நடவடிக்கை எனவும் வர்ணித்துள்ளது.
பலஸ்தீனத்துடனான பிரதான இராஜதந்திர தொடர்புகளைக் குறைக்கும் வகையில் ஜெரூசலத்திலுள்ள தனது துணைத் தூதரகத்தை மூடிவிட்டு அதனை தூதரகத்துடன் இணைப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா அறிவித்தது.
கடந்த திங்கட்கிழமை இந்த செயற்பாடு அமுலுக்கு வந்துள்ள நிலையில் 175 வருடகால வரலாறு முடிவுக்கு வந்துள்ளது. பலஸ்தீனத்துடனான அமெரிக்க உறவுகளைக் கையாளும் பொறுப்பு வொஷிங்டனின் இஸ்ரேலுக்கான தூதுவர் டேவிட் பிரைட்மேனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவின் கபட நாடகமெனத் தெரிவித்துள்ள மலேஷியா, சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள இரு நாடுகள் என்ற தீர்வுக்கு சாவுமணியடிக்கும் செயற்பாடாகும் எனவும் தெரிவித்துள்ளது.
1967 ஆம் ஆண்டு இருந்த எல்லைகளுடன் இரு நாடுகள் என்ற தீர்வுக்கு மலேஷியா ஆதரவாக இருப்பதாகவும், சமாதான முன்னெடுப்புக்களை குலைப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.
-Vidivelli