பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி தொடர்பான உரைகள் நிகழ்த்தப்படுவதாக பெரும்பான்மை இனத்தவர்கள் பொய் பிரசாரம் செய்து வருவதை நிறுத்துவதற்காக சிங்கள மொழியிலும் ஜும்ஆ பிரசங்கங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல்களை திணைக்களம் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு வழங்கவுள்ளது என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
பெரும்பான்மை இனத்தவர்கள் முஸ்லிம்கள் மீது கொண்டுள்ள தப்பபிப்பிராயங்களை களைவதற்கு அமைச்சு முன்னெடுத்துவரும் செயற்றிட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘பள்ளிவாசல்களில் இடம்பெறும் குத்பா பிரசங்கங்கள் காலத்துக்கேற்ற வகையில் அமைய வேண்டும். போதைப் பொருளினால் ஏற்படும் ஆபத்து, சீரழிவுகள் மற்றும் நல்லிணக்கம், இளைஞர்களை நல்வழிப்படுத்தல் போன்ற தலைப்புகளில் குத்பா பிரசங்கங்கள் அமைவது அவசியமாகும்.
பள்ளிவாசல்களின் நிர்வாகங்கள் இன்றைய கால கட்டத்தில் செயற்றிறன் மிக்க செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். நோன்பு காலத்தில் கஞ்சி பகிர்ந்தளிப்பது போன்ற விடயங்களை விட சமூகத்தை நல்வழிப்படுத்தும் செயற்றிட்டங்கள் இன்று அவசியமாகவுள்ளன. பெரும்பான்மையினத்தவரின் அநேக செயற்பாடுகள் பன்சலைகளை மையப்படுத்தியதாகவே அமைந்துள்ளன. பள்ளிவாசல்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கான தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
-Vidivelli