மிஹிந்தலை பிரதேசத்தில் பௌத்த புராதன சின்னங்கள் மீது ஏறி படம்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூதூரைச் சேர்ந்த இரு மாணவர்கள் தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த மாணவர்களுக்கு எதிரான குற்றவியல் அறிக்கையை பொலிசார் இன்றைய தினம் நீதிமன்றில் தாக்கல் செய்வார்கள் என்றும் குறித்த அறிக்கையில் பாரிய குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை என்றும் தொல்பொருளியல் திணைக்கள அதிகாரி ஒருவர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
இம் மாணவர்கள் இருவரும் கடந்த புதன் கிழமை மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தொல்பொருள் திணைக்களத்தின் மதிப்பீட்டு அறிக்கை மற்றும் பொலிசாரின் குற்றவியல் அறிக்கை ஆகியவற்றை வெள்ளிக்கிழமை (இன்று) தாக்கல் செய்யுமாறு நீதிவான் அறிவுறுத்தினார். இதற்கமைய இன்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இம்மாணவர்கள் சிறு அபராதத்துடன் விடுவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நேற்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் உறவினர்கள் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரைச் சந்தித்து மாணவர்களின் விடுதலைக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli