எகிப்திய தலைநகர் கெய்ரோவில் அமைந்துள்ள அல்-அஸ்ஹர் பள்ளிவாசலின் பின்னால் கடந்த திங்கட்கிழமையன்று நபரொருவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றை மேற்கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
அல்–தார்ப் அல்–-அஹ்மருக்கு அருகே இடம்பெற்ற குறித்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இரண்டு பொலிஸார் உயிரிழந்ததோடு மேலும் இருவர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை துரத்திச்சென்ற பொலிஸார் அவரைச் சுற்றி வளைத்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலை நடத்திய நபர் அதே பிராந்தியத்தில் வசித்த 37 வயதான அல்–ஹஸன் அப்துல்லாஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்தி இணையத்தளமான எகிப்து டுடே செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை ஜிஸா ஆளுநர் பிரதேசத்தில் அல் – -இஸ்திகாமாஹ் பள்ளிவாசலுக்கு அருகில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனத்தைப் பொருத்தி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடனும் தொடர்புபட்டவரென அமைச்சு தெரிவித்துள்ளது. சுன்னி இஸ்லாமிய கற்கையில் உலகில் பெரும் ஆதரவினைப் பெற்ற அல்–அஸ்ஹர் பல்கலைக்கழகம் கடந்த செவ்வாயன்று இத் தாக்குதலைக் கண்டித்து அறிக்கையொன்றை வெளியிட்டது.
சந்தேக நபருடன் மோதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் பாரிய அனர்த்தமொன்றைத் தவிர்த்துள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையுடன் பயங்கரவாத அமைப்புக்களால் ஈடுகொடுக்க முடியவில்லை எனத் தெரிவித்து எகிப்தின் முப்தி அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரு நிறுவனங்களும் மரணித்தவர்களுக்கு இறைவனின் கருணை கிடைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளதோடு மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளது. எகிப்தின் சட்டமா அதிபர் ஜெனரல் நாபில் சாடெக் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்
-Vidivelli