மாவனெல்லை சம்பவம்: சூத்திரதாரிகளை பாதுகாக்கும் முஸ்லிம் அரசியல்வாதியை உடன் கைது செய்க
சிங்கள ராவய கோரிக்கை
மாவனெல்லையில் மற்றும் அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை உட்பட வணாத்தவில்லுவில் பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட மையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகி இருக்கிறார்கள். இவர்கள் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையவர்கள் என அறிகிறோம். இவர்களைக் கைது செய்ய வேண்டாம் நாம் ஆஜர்படுத்துகிறோம் என முஸ்லிம் அரசியல்வாதியொருவர் பிரதி பொலிஸ் மா அதிபரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அந்த அரசியல்வாதி கைதுசெய்யப்பட வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.
மாவனெல்லை மற்றும் வணாத்தவில்லு சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்;
‘மாவனெல்லை சிலை உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாலும் பிரதான சந்தேக நபர்கள் இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு குறிப்பிட்ட அரசியல்வாதியின் ஆதரவு இருப்பதாகவே அறிகிறோம். எனவே பொலிஸார் முதலில் அரசியல்வாதியை கைதுசெய்ய வேண்டும். அவ்வாறு கைது செய்தால் பிரதான சந்தேக நபர்கள் இருவரையும் அவர் மூலமாகக் கைதுசெய்யலாம்.
இலங்கையில் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என பொதுபலசேனா உட்பட நாமும் மேலும் பல அமைப்புகளும் தெரிவித்து வந்தன. ஆனால் அரசாங்கம் அதனைப் பொருட்படுத்தவில்லை. தற்போது இது உறுதியாகியுள்ளது. இந்த வலையமைப்பைக் கண்டறிவதற்கு பிரதான சந்தேக நபர்கள் தாமதமில்லாமல் கைது செய்யப்படவேண்டும் என்றார்.
-Vidivelli