மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து நாளை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்
சகல கட்சிகளுடனும் உடனடியாக கலந்துரையாடுமாறு பிரதமர் பணிப்பு
மாகாணசபை தேர்தல் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்க நாளை கூடும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சகல கட்சிகளையும் அழைத்து உடனடியாகத் தீர்வுகாண பிரதமர் பணித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாணசபை தேர்தல் மற்றும் அரசியலமைப்பு பேரவை முரண்பாடுகள் குறித்து அவர் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மாகாணசபை தேர்தலை ஐக்கிய தேசிய கட்சியே தடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் நாம் ஆரம்பத்திலிருந்தே தேர்தலை பழைய முறைமையில் நடத்துவோம் என கூறினோம். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே தேர்தலை புதிய முறைமையில் நடத்த வேண்டும் என கூறியதுடன் அவர்களே தேர்தலை பிற்போடவும் காரணமாக இருந்தனர். அவர்களின் அமைச்சரே எல்லை நிர்ணய அறிக்கையை தயாரித்து இறுதியில் வாக்கெடுப்பில் அவரே எதிராக வாக்களித்தார். எவ்வாறு இருப்பினும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை உடனடியாகப் பெறவேண்டும். ஆகவே அடுத்த பாராளுமன்ற அமர்வுகளின் போது சகல கட்சிகளையும் அழைத்து மாகாணசபை தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பிரதமர் அறிவுரை வழங்கியுள்ளார். ஆகவே அடுத்த கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். நாளை மறுதினம் (நாளை) கூடும் கட்சி தலைவர் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும். அதேபோல் அரசியலமைப்பு பேரவை குறித்து இன்று முரண்பாடான கருத்துக்களை முன்வைத்தபோதிலும் அன்று இந்த யோசனை முன்வைக்கப்பட்டபோது பாராளுமன்றத்தில் அனைவரும் இதனை அங்கீகரித்தனர். அவ்வாறு அனைவருமே அங்கீகரித்த ஒரு விடயத்தில் இன்று எவ்வாறு தவறென வாதாடுவது? மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். ஆகவே அவர்களே இதனை விமர்சிக்க முடியாது. கடந்த நான்கு ஆண்டுகளில் எமது அமைச்சரவையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. முக்கியமான தருணங்களில் எம்மை தடுக்கும் சூழ்ச்சிகளே இடம்பெற்றன. அதனையும் மீறியே நாம் மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
-Vidivelli