மிஹிந்தலை ரஜமஹா விகாரை வளாகத்திலுள்ள பிரபல சைத்தியம் ஒன்றுக்கு அருகில் உள்ள புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாதுகோபுரம் ஒன்றின் மேல் ஏறி புகைப்படம் எடுத்ததாக கூறப்படும் இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 18,20 வயதுகளை உடைய – திஹாரிய பகுதியிலுள்ள இஸ்லாமிய கல்வி நிலையம் ஒன்றில் கற்கும் மூதூர் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு மிஹிந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூதூர் அப்துல் லதீப் வீதியைச் சேர்ந்த 20 வயதான ரஷீத் மொஹம்மட் ஜிப்ரியும், நெய்தல் நகர், மூதூர் – 1 பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஜலால்தீன் ரிப்தி அஹமட் எனும் மாணவனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இவ்விருவரும் தொல் பொருள் அதிகாரிகளால் நேற்று காலை புகைப்படம் எடுக்கும் போது பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்களைக் கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
குறித்த இரு மாணவர்களும் தனிப்பட்ட தேவை ஒன்றின் நிமித்தம் மிஹிந்தலைக்கு வந்துள்ளமையும், அவர்களில் ஒருவர் அந்த தாதுகோபுரம் மீது ஏறியுள்ளமையும் மற்றைய மாணவன் அவரை புகைப்படம் எடுத்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் புகைப்படம் எடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசியும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் தாது கோபுரத்தில் பிடிக்கப்பட்ட மூன்று புகைப்படங்கள் இருந்துள்ளன. சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை தொல் பொருள் சட்டத்தின் கீழ் இன்று அனுராதபுரம் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-Vidivelli