வக்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள்: விரைவில் ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் குழு நியமனம்
அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவும் அமைச்சர் ஹலீம் முஸ்தீபு
36 வருட காலமாக எவ்வித மாற்றங்களுக்கோ திருத்தங்களுக்கோ உட்படுத்தப்படாத வக்பு சட்டத்தில் காலத்துக்கேற்ற நவீன சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அடுத்தவாரம் அமைச்சரவைப் பத்திரமொன்றினை அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவுள்ளார்.
வக்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை வரைபு செய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.
வக்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கும் முன்னாள் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் பிரதிச் செயலாளர் எம்.எச். மொய்னுதீன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
1956 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த வக்பு சட்டம் 1962 ஆம் ஆண்டிலும் 1982 ஆம் ஆண்டிலும் இரு தடவைகள் திருத்தங்களுக்கு உள்ளாகியது. அதன் பின்பு கடந்த 36 வருடங்களாக மாற்றங்களுக்குள்ளாகவில்லை.
வக்பு சட்டத்தில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் தேவை.
பள்ளிவாசல் நிர்வாகங்களை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கும் வக்பு சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் தேவைப்படுகிறது. தற்போதுள்ள வக்பு சட்டம் காலத்துக்கேற்றதாக இல்லை.
ஓர் ஊரில் இன்று 10 , 15 பள்ளிவாசல்கள் இயங்கினால் பள்ளிவாசல்கள் இணைந்து சம்மேளனமொன்றினை அமைத்துக்கொண்டு செயற்படுகிறார்கள்.
இவ்வாறு பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்து சமமேளனம் உருவாக்கிக்கொள்வது தொடர்பாக தற்போதுள்ள சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
சில இடங்களில் வக்பு சொத்துக்கள் அத்துமீறி கையேற்கப்பட்டுள்ளன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சட்டத்தை அமுல்படுத்துவதில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
வக்பு சட்டத்தின் கீழ் வக்பு சபையும் வக்பு ட்ரிபியுனலும் இயங்கி வருகின்றன. வக்பு ட்ரிபியுனலில் விசாரணைகளின் பின்பு வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யமுடியும். பள்ளிவாசல் நிர்வாக சபை தெரிவுகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் பழைய நிர்வாகம் தொடர்ந்தும் பதவியில் இருக்கும் நிலை இன்று நிலவுகிறது.
பழைய நிர்வாகம் மேன்முறையீடு செய்வதால் அதைத் தடை செய்வதற்கு வக்பு ட்ரிபியுனலுக்கு அதிகாரமில்லை.
வக்பு சொத்துகளைப் பாதுகாப்பதற்கும் பள்ளிவாசல்களில் முறையான நிர்வாகக் கட்டமைப்பினை நிலை நிறுத்துவதற்கும் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் அவசியமாகும்.
இச் சட்டத்தில் திருத்தங்கள் இவ் வருடத்துக்குள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக் கப்படுகின்றன என்றார்.
-Vidivelli