மத்திய கிழக்கில் சமாதானமும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் அமெரிக்கா தலைமையில் மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக ‘கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன தேசம்’ என்பதில் சவூதி அரேபியா உறுதியாக இருப்பதாக சவூதி அரேபிய மன்னர் சல்மான் தெரிவித்தார்.
சவூதி அரேபியத் தலைநகர் றியாதிற்கு விஜயம் செய்துள்ள பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸை நேற்று முன்தினம் சந்தித்து சவூதி அரேபிய மன்னர் அவருடன் பேசினார். ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர தேசத்திற்கான பலஸ்தீனத்தினதும் அதன் மக்களினதும் உரிமைக்காக தனது நாடு நிரந்தரமாக ஆதரவுடன் இருக்கும் எனவும் மன்னர் சல்மான் தெரிவித்தார்.
போலந்தின் தலைநகர் வோர்சோலில் நடைபெறும் மாநாட்டில் இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையேயான சமாதானத்திற்கான முன்மொழிவினை அமெரிக்கா பிரஸ்தாபிக்க எதிர்பார்த்திருக்கும் நிலையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இம் மாநாடு தொடர்பில் அறிவித்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, உலக நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் பங்குபற்றும் குறித்த மாநாட்டில் மத்திய கிழக்கில் பலவீனத்தை ஏற்படுத்துவதற்கான ஈரானின் செல்வாக்கு தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
முக்கியமான ஐரோப்பிய நாடுகள் குறைந்தளவே கரிசனை காட்டியதைத் தொடர்ந்து அமெரிக்காவும் போலந்தும் தமது நிகழ்ச்சி நிரலிலிருந்து பின்வாங்கி இந்த ஒன்று கூடலில் ஈரான் தொடர்பில் மாத்திரம் கருத்தில் கொள்ளாது மத்திய கிழக்கு என்ற அடிப்படையில் விரிவாகக் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவித்தன.
அப்பாஸ், சவூதி மன்னருக்கு பலஸ்தீன ஆள்புலப் பிரதேசங்களில் தற்போது காணப்படும் நிலைமைகள் பற்றி விளக்கிக் கூறியதோடு, பலஸ்தீன மக்கள், நிலங்கள் மற்றும் புனித நகரங்களுக்கு எதிராக இஸ்ரேலினால் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வன்முறைகளின் பின்புலத்தில் அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் நூற்றாண்டு ஒப்பந்தம் என அழைக்கப்படும் ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள அமெரிக்கா எடுக்கும் பிரயத்தனங்கள் குறித்தும் கலந்துரையாடியதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி முகவரகமான வபா தெரிவித்துள்ளது.
-Vidivelli