கடந்த திங்கட்கிழமையன்று இஸ்தான்பூலில் உலங்கு வானூர்தியொன்று அவசரமாகத் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் குறைந்தது நான்கு இராணுவ வீரர்கள் பலியானதாக மாகாண ஆளுநர் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் செக்மெகோயி மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிக்கருகில் இந்த உலங்கு வானூர்தி விபத்து நிகழ்ந்துள்ளதாக அலி எர்லிகாயா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இறந்தோரின் எண்ணிக்கையினை டுவிட்டர் மூலம் உறுதிப்படுத்திய தேசிய பாதுகாப்பு அமைச்சு விபத்து தொடர்பில் விசாரைணகளை ஆரம்பித்துள்ளது. விரிவான விசாரணைகளின் பின்னர் முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தைய்யிப் அாதுர்கான் விபத்து தொடர்பில் தனது அனுதாபத்தினை வெளியிட்டுள்ளார். எமக்கு ஏற்பட்டுள்ள இழப்பின் வலியினை தேசத்துடன் இணைந்து அனுபவிக்கின்றோம் என அவர் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற சபாநாயகர் பினாலி இல்ட்ரிம் தனது கவலையினையும் அனுதாபத்தினையும் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் தலைவரான கெமால் கிலிக்டாரோக்லுவும் தனது அனுதாபத்தை வெளியிட்டுள்ளார்.
-Vidivelli