எமது நாட்டில் தற்போது 1951 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமே அமுலில் உள்ளது. இச்சட்டத்தில் காலத்துக்கேற்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதனையடுத்து 2009 ஆம் ஆண்டு அப்போதைய நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் இச்சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. குழுவின் தலைவராக முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் நியமிக்கப்பட்டார்.
சுமார் பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் தற்போதே முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இறுதி முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவிடம் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவாக, விவாகரத்துச்சட்ட திருத்த சிபாரிசுகள் அடங்கிய அறிக்கை இறுதி தீர்மானத்துக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தலதா அத்துகோரள இந்தப் பொறுப்பினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கியுள்ளார்.
சலீம் மர்சூப் தலைமையிலான சட்ட திருத்த சிபாரிசு குழு கடந்த 9 வருடங்களாக பல அமர்வுகளை நடாத்தி சிவில் சமூக அமைப்புகள், புத்திஜீவிகள் உட்பட பொதுமக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி அறிக்கையை தயாரித்த அறிக்கை தயாரிக்கப்பட்ட போது சில விடயங்களில் குழு அங்கத்தவர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள் உருவானதையடுத்து குழு இரண்டாக பிளவுப்பட்டமை தவிர்க்க முடியாமல் போனது.
குழுவின் அங்கத்தவர்கள் சலீம் மர்சூப் தலைமையிலும், ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையிலும் பிளவுபட்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை பிரதிநிதித்துவப்படுத்திய அதன் தலைவரும், செயலாளரும் பாயிஸ் முஸ்தபாவின் குழுவைச் சார்ந்தனர். இதனால் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் 10 விடயங்களில் இவர்கள் முரண்பட்டனர். பாயிஸ் முஸ்தபா தலைமையிலான குழு தங்களது கருத்துகளை உள்ளடக்கி தனியான அறிக்கையை தயாரித்து குழுவின் தலைவர் சலீம் மர்சூப்பிடம் வழங்கியது. இந்த அறிக்கைகளே நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டன. அறிக்கையைப் பெற்றுக் கொண்டதும் நீதியமைச்சர் பிளவுபட்டிருந்த குழுவினரை அழைத்து சட்ட திருத்தங்களில் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தார். ஆனால் அம்முயற்சி தோல்வியிலே முடிந்தது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஷரீஆவுக்கு உட்பட்டே திருத்தங்கள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்தியது. பெண்கள் காதிநீதிபதிகளாக நியமிப்பது உட்பட தலாக், பலதார மணம், வொலி, மார்க்க பிரிவு போன்ற விடயங்களில் சலீம் மர்சூப் தலைமையிலான குழுவின் சிபாரிசுகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென உலமா சபை வாதிட்டது.
இந்தச் சூழ்நிலையில் இறுதித் தீர்மானம் ஒன்றினை எட்ட முடியாத நிலையிலே இப்பொறுப்பினை அமைச்சர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வழங்கியுள்ளார். முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய சமூகம் சார்ந்த விடயங்களில் அசிரத்தையாக இருப்பது போன்று இவ்விடயத்திலும் இருக்கக்கூடாது. இது எமது சட்டத்தில் திருத்தங்களுக்கான சந்தர்ப்பம், உடனடியாக செயலில் இறங்க வேண்டும். காலதாமதங்கள் ஏற்பட்டால் அரசியல் மாற்றங்கள் எமது சட்டத்தில் திருத்தங்களை ஸ்தம்பிக்கச் செய்து விடலாம்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் சட்டத்தரணிகளும் இருக்கிறார்கள். நாம் விரைவில் ஒன்றுகூடி தீர்மானங்களை மேற்கொள்வோம் என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது காதிநீதிமன்ற கட்டமைப்பு சீர் செய்யப்படவேண்டும். காதிநீதிபதிகளுக்கு நாளாந்தம் சில நூறு ரூபாய்களே தற்போது கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. நீதிமன்ற கட்டட வசதிகள் வழங்கப்படவில்லை. போக்குவரத்து கொடுப்பனவுகள், காரியாலய வசதி, காரியாலய உதவியாளர் வசதி எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை. அதனால் நிர்வாகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட்டாலே சட்டத்தில் திருத்தங்களை அமுல்படுத்துவதில் உச்ச நிலையினை எய்த முடியும்.
-Vidivelli