சூடானில்இளைஞர்கள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டங்கள் நியாயமான குறிக்கோளின் அடிப்படையிலேயே நடத்தப்படுகின்றதென கடந்த திங்கட்கிழமையன்று சூடான் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கடந்த மூன்று நாட்களில் வெளியிட்ட இரண்டாவது வெளிப்படையான நல்லெண்ண சமிக்ஞையாக இது பார்க்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து சூடானில் தினமும் பொருளாதார நெருக்கடியினால் விரக்தியுற்ற மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏனையோரால் மூன்று தசாப்த காலமாகப் பதவியிலிருக்கும் ஜனாதிபதி ஒமர் அல்-பஷீரைப் பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பு அமைச்சர் அவாட் மொஹமட் அஹமட் இப்ன் அவ்ப் ஆர்ப்பாட்டக் காரர்களின் கரிசனை தொடர்பில் நேரடியாக எதனையும் தெரிவிக்காத போதிலும், நாட்டில் தற்போதுள்ள நிலைமை இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையேயான இடைவெளியைக் காட்டுவதாகத் தெரிவித்தார்.
இதன் மூலம் தலைமுறைகளுக்கிடையிலான தொடர்பாடல் மற்றும் இளைஞர்களின் இலட்சியங்களை அறிந்து அவர்களது பிரச்சினைக்கான நியாயமான தீர்வு தேவை என்பதை அது விளக்குகின்றது எனவும் தெரிவித்தார்.
அண்மைக்கால நிகழ்வுகள் அரசியல் அலகுகள், கட்சிகள் மற்றும் முன்னரை விட வேறுபட்ட சிந்தனைப் போக்குடனான ஆயுத இயக்கங்கள் என்பன மீள வடிவமைக்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன என இராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாக அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன வகையான மீளமைப்பு தேவை என்பதை அமைச்சர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அத்துடன் ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னணியிலிருந்து செயற்படும் எதிர்க்கட்சிகள் உடனடியாக எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
-Vidivelli