மதூஷ் போன்று மகேந்திரன், உதயங்கவையும் கைது செய்ய சர்வதேசத்தை நாடியுள்ளோம்
சபையில் பிரதமர் ரணில் தெரிவிப்பு
இலங்கையின் ஒற்றர் தகவல் மூலமாக மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட போதைபொருள் கடத்தல் கும்பலை பிடித்ததை போலவே அர்ஜுன் மகேந்திரன், உதயங்க வீரதுங்க விடயத்திலும் சர்வதேச பொலிஸ் உதவியை கோரியுள்ளோம் என சபையில் தெரிவித்த பிரதமர், மாகந்துரே மதூஷ் கைதுசெய்யப்பட்டாலும் கூட அவர் விடயத்தில் துபாய் நீதிமன்றே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட கும்பலை எமது ஒற்றர் தகவலுடன் துபாய் பொலிஸ் கைதுசெய்துள்ளது, அதேபோல் அர்ஜுன் மகேந்திரன், உதயங்க வீரதுங்க ஆகியோரை ஏன் கைதுசெய்ய முடியாதுள்ளது என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பிரதமர்,
பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் மறைந்து வாழ்கின்ற நிலையில் அவர்களை கைது செய்ய வழமையாக நாம் சர்வதேச பொலிஸ் மூலமாக சிவப்பு எச்சரிக்கை விடுத்து அவர்களின் உதவிகளை பெற்று கைது செய்வோம். சில நாடுகளுடன் இலங்கை செய்துள்ள இருநாட்டு ஒப்பந்தங்கள் இருப்பின் அதனை அடிப்படையாக வைத்து வெளிவிவகார அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தை நடத்தி கைதிகளை கொண்டுவருவோம்.
பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புபட்ட மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குற்றவாளிகள் துபாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். எமது புலனாய்வு ஒற்றர் தகவல்கள் மூலமாக அவர்களை துபாயில் கைது செய்துள்ளனர். அதேபோல் தான் அர்ஜுன் மகேந்திரன், உதயங்க வீரதுங்க ஆகியோர் குறித்தும் நாம் அறிவித்துள்ளோம். நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எவ்வாறு இருப்பினும் சர்வதேச நாடுகளில் கைது செய்யும் நபர்கள் குறித்து அங்குள்ள நீதிமன்றமே தீர்மானம் எடுக்கும். மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குற்றவாளிகள் தொடர்பில் துபாய் நீதிமன்றமே தீர்மானம் எடுக்கும் எனக் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் குறித்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில:- மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட கும்பலை கைது செய்துள்ள நிலையில் இலங்கையின் இராஜதந்திர கடவுசீட்டு வைத்துள்ள அரச அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அவர் யார் என கூற முடியுமா என சபையில் கேள்வி எழுப்பினார்.
-Vidivelli