பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு கடந்த தேசிய சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்காமைக்கு அரசியல் அழுத்தங்களே காரணமாகும். என்றாலும் அவரது விடுதலைக்காக பொதுபலசேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புகள் தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் வகையிலான போராட்டங்களை நடத்தும் என பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலன்த விதானகே தெரிவித்தார்.
ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘கொடிய யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த இராணுவ வீரர்களுக்காகவும், தாய்நாட்டுக்காகவும், பௌத்தத்துக்காகவும் குரல் கொடுத்த ஞானசார தேரரை விடுவிக்கும்படி மகாநாயக்க தேரர்கள், சிவில் சமூக அமைப்புகள், இந்து சம்மேளனம், முஸ்லிம்கள் என பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்தும் இதுவரை ஜனாதிபதி அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவில்லை.
சுதந்திர தினத்தன்று அவர் விடுதலை செய்யப்படுவார் என முழு நாடும் எதிர்பார்த்திருந்து ஏமாற்றப்பட்டு விட்டது. ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டங்களை நாம் கைவிடப்போவதில்லை.
இது தொடர்பில் மீண்டும் பொது மக்களையும், மகாநாயக்க தேரர்களையும் தெளிவுபடுத்தவுள்ளோம். அவருக்கு விடுதலை கிடைக்கும்வரை எமது போராட்டங்கள் தொடரும் என்றார்.
இதேவேளை சிங்கள ராவய, ராவணாபலய மற்றும் சிங்களே அபி ஆகிய அமைப்புகளும் ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
-Vidivelli