மேற்கத்தய சமூகத்தைப் பொறுத்தவரையில் பரவலான ஒன்றாக மாறிப்போன விடயங்களில் கருக்கலைப்பும் பிரதான இடத்தை வகிக்கின்றது. மதச் சார்பற்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் ஒரு கருவைக் கொல்வது என்பது சர்வசாதாரண விடயம். இதன் மூலம் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் ஊக்குவிக்கப்படுவதுடன் தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் தவறான நடத்தைகளும் அரங்கேற்றப்படுகின்றன.
கருக்கலைப்பு எனப்படுவது தாயினுடைய கருவறையில் இருந்து கருவை நீக்குவதாகும் என்பதே அதற்கான மொழியியல் ரீதியான கருத்தாகும். பிரசவ காலம் நிறைவடைவதற்கு முன்னர் கருப்பையிலிருந்து கருவை வெளியேற்றுவதே கருக்கலைப்பு என இஸ்லாமிய அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.
இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்துக்கு முரணான அம்சம் என்ற போதிலும் ஒரு நாளைக்கு 750 –1000 வரையான சட்ட விரோத கருக்கலைப்புகள் நடைபெறுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதிலும் வருடாந்தம் ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. பல நாடுகளில் கருக்கலைப்பை அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பூட்டான், இலங்கை போன்ற நாடுகளில் கருக்கலைப்புக்கு எதிராக இறுக்கமான சட்டம் நடைமுறையில் உள்ளது.
இலங்கையில் கருக்கலைப்புச் சட்டம்
தென்னாசியாவை எடுத்துக்கொண்டால் கருக்கலைப்புச் சட்டம் தொடர்பில் கடுமையான வரையறைகளைப் பேணும் நாடு இலங்கை ஆகும். பூட்டானில் பாலியல் வல்லுறவு அல்லது சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களால் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பொருளாதார பிரச்சினை அல்லது சமூக காரணிகளுக்காக வேண்டி கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுகிறது.
இலங்கையில் 1883 இல் அறிமுகம் செய்யப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 303 ஆவது பிரிவில் இலங்கையின் கருக்கலைப்புச் சட்டம் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கருக்கலைப்புச் சட்டத்தின் மூலம் கர்ப்பம் அல்லது குழந்தைப் பிறப்பு தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரம் கருக்கலைப்பு செய்வதற்கு அவகாசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஆணைக்குழுவின் மூலம் நீதிமன்ற நியமங்களை ஆய்வு செய்யும் போது கற்பழிப்பு, தகாத புணர்ச்சி மற்றும் பிறப்பு முதல் இருக்கின்ற இயற்கைக்கு மாறான நிலையில் கர்ப்பம் தரித்தல் தொடர்பில் மருத்துவ ரீதியான கட்டுப்படுத்தல் ஒன்றை நடைமுறைப்படுத்த சட்ட ரீதியான பொறிமுறை ஒன்று வேண்டும் என பல்வேறு அழுத்தக் குழுக்களால் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
இலங்கையில் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 90% ஆனவர்கள் திருமணமான பெண்களாவர். வறுமை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற காரணங்களைக் காட்டி சட்டவிரோதமாக கருக்கலைப்பு மேற்கொள்ளப்படுகிறது. இலங்கையின் கர்ப்பிணிப் பெண்களின் மரண வீதத்தில் 12.5% மரணங்கள் சட்டவிரோத கருக்கலைப்பினால் ஏற்படுகிறது என்று கூறினால் நம்ப முடிகிறதா? மேலும், வருடாந்தம் 18 வயதிற்கு குறைந்த சுமார் 24,000 சிறுமிகள் கருக்கலைப்பு செய்வோருள் அடங்குவதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் இலங்கை வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் கொண்டுவரப்பட்டன. கருக்கலைப்பை அங்கீகரிக்கும் சட்ட மசோதாவை அமைச்சரவை அங்கீகரித்துள்ள போதும் அதனைப் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் திட்டங்கள் தொடர் தோல்வியில் முடிந்துள்ளன.
கருக்கலைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என இலங்கையின் பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் வைத்திய நிபுணர்கள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர். குறைந்தபட்சம் கடுமையான ஊனக்குறைபாடுடைய கருவை சுமக்கும் போதும், பாலியல் வன்புணர்வு காரணமாக ஒரு பெண் கருத்தரித்துள்ள போதுமாவது கருக்கலைப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. கருக்கலைப்பை ஆதரிப்பவர்கள் கருவை சுமப்பதும் சுமக்காமல் இருப்பதும் ‘பெண்ணுரிமை’ என வாதிடுகிறார்கள்.
கடந்த காலங்களில் கருக்கலைப்பு தொடர்பாக பல திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருந்தன. வன்புணர்வினால் ஏற்பட்ட கருவை கலைப்பதற்கு அனுமதி வழங்குவது அதில் முதன்மையானதாகும். பாதுகாப்பான கருக்கலைப்புக்கான தடைகளை இலங்கை நீக்க வேண்டும் என்று ஐ.நா. சபையின் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாரபட்சங்களையும் இல்லாமல் செய்வதற்கான சமவாயம் கோரியிருந்தது. அதனைத் தொடர்ந்து பாலியல் வன்முறையால் தரிக்கும் கர்ப்பம் மற்றும் மரபணு பிறழ்வுக்குள்ளான கருக்களை குறித்த தாய் இணங்கும் பட்சத்தில் கலைக்கலாம் என்ற சட்டம் இலங்கையில் கொண்டுவரப்படவுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போதைய அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட திருத்தத்தில் 3 சந்தர்ப்பங்களில் கருவை கலைக்க சட்ட மசோதா முன்வைப்பட்டது. வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்தல், நெருங்கிய உறவினரால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பம் தரித்தல், கடுமையான ஊனக்குறைபாட்டுடன் கரு வளருதல் ஆகிய சந்தர்ப்பங்களே அவையாகும். எனினும், கத்தோலிக்க திருச்சபை, உலமாக்கள் மற்றும் பல்வேறு சமயங்களுக்குட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் எதிர்ப்புக்கு பின்னர் குறித்த திருத்தம் மேற்கொள்ளப்படாமல் திரும்பப் பெறப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் ஜீ.எல். பீரிஸ் நீதியமைச்சராக இருந்தார். அந்நேரத்தில் பல்வேறு பெண்கள் அமைப்புகள் விடுத்த அழுத்தத்தின் பின்னர் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கான கலந்துரையாடல்களும் அதற்கான சட்ட மசோதாவும் உருவாக்கப்பட்டது. இருந்த போதிலும் சமயத்தலைவர்களின் கடும் எதிர்ப்புக்குப் பின்னர் அந்த முயற்சிகள் அரசாங்கத்தினால் கைவிடப்பட்டன.
பெண்களின் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் குடும்பத்திட்டமிடல் பற்றி பணியாற்றும் மாரி ஸ்டொப்ஸ் எனும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மஹிந்த ராஜபக் ஷவின் காலத்தில் இயங்கி வந்தது. இது பெண்கள் கருக்கலைப்பை மேற்கொள்ள உயர் வைத்திய வசதிகளை வழங்கியது. காலப்போக்கில் இலங்கை சட்ட திட்டங்களுக்கு முரணாக இயங்கிய இந்நிறுவனம் சிராந்தி ராஜபக் ஷவின் ஆலோசனையின் பேரில் முடக்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அரசாங்கத்திலும் கருக்கலைப்புச் சட்டமாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டில் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக் ஷவிடம் இந்தச் சட்டம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக தீர்க்கமான முடிவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் ஒடுக்கப்பட்டதாகவும் அரசாங்கத்துக்கும் சுகாதார அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்படாமல் தடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டவண்ணமுள்ளன. இதற்கான தீர்வுகள் இன்னும் வழங்கப்படவில்லை.
கருக்கலைப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள்
வறுமை மற்றும் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமின்மை காரணமாக தமது கருவை கலைக்கிறார்கள். இதன்போது பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. கருக்கலைப்பு சட்டவிரோதம் என்பதால் நிபுணத்துவம் இல்லாத பொருத்தமற்ற நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன்போது கருவை கலைக்க பொருத்தமில்லாத ஆயுதங்கள் பெண்ணுறுப்பினூடாக செலுத்தப்படுவதுண்டு. இதன்போது அதிக இரத்தப்போக்கு ஏற்படும். இதனால் குறித்த பெண் உயிரிழக்கக்கூடிய நிலை அல்லது மீண்டுமொருமுறை கருத்தரிக்க முடியாத அளவுக்கு கர்ப்பப்பை சேதமடையும் நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு.
கருக்கலைப்பு தொடர்பாக இஸ்லாம்
இஸ்லாத்தை பொறுத்தவரையில் கருவை கலைப்பது தொடர்பாக உலமாக்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. கருக்கலைப்பு என்பது கருவிற்கு ரூஹ் கொடுக்கப்படுவதற்கு முன்னரோ பின்னரோ நடக்கலாம். முஸ்லிம் அறிஞர்களின் ஒருமித்த கருத்தின்படி ரூஹ் (உயிர்) கொடுக்கப்பட்ட பின்பு கருவை கலைப்பது ஹராமாகும்.
குர்ஆன் மற்றும் சுன்னாவிலிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின்படி 120 ஆவது நாளில் கருவுக்கு ரூஹ் கொடுக்கப்படுகிறது.
120 ஆவது நாளில் தான் உயிர் ஊதப்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் –புஹாரி) என்ற ஹதீஸ் இதற்கு ஆதாரமாக உள்ளது.
கருத்தரித்து 40 அல்லது 42 நாட்களுக்குப் பிறகு கரு முதிர்ச்சியாக வளர ஆரம்பிக்கும். கை, கால், நகம் போன்ற உறுப்புக்கள் இதன்போது வளர ஆரம்பிக்கும். இந்தச் சந்தர்ப்பத்தில் கருவை கலைப்பது என்பது மனித உயிருக்கு எதிரான தாக்குதலாகும். இதற்கு இரத்த ஈட்டுத் தொகையாக (குர்ரா) ஆண் அல்லது பெண் அடிமையை வழங்க வேண்டும். இது முழு மனிதனுக்கு கொடுக்கப்பட வேண்டிய திய்யாவில் பத்தில் ஒரு பங்காகும்.
தகுதி வாய்ந்த மருத்துவர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் கரு தாயின் கருவறையில் இருப்பது தாய் – சேய் இருவருக்கும் ஆபத்து எனத் தெரிவிக்கப்படும் பட்சத்தில் கரு உருவான ஆரம்ப கட்டத்தில் அதனை கலைக்கலாம். இது போன்றதொரு சந்தர்ப்பத்தில் கருவுக்கு ரூஹ் கொடுக்கப்பட்ட பின்னரோ, முன்னரோ அதனை கலைப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டு.
எவ்வாறாயினும் ஏனைய சந்தர்ப்பங்களில் கருக்கலைப்பை மேற்கொள்ளுதல் தொடர்பாக பல்வேறு கருத்து முரண்பாடுகள் அறிஞர்களிடையே நிலவுகின்றன.
மேற்கத்தைய உலகில் சுமார் 45% குழந்தைகள் சட்டத்திற்கு முரணான முறையில் பிறந்த குழந்தைகள் ஆகும். ஒரு சில நாடுகளில் இந்தத் தொகை 70% வரை உயர்ந்து செல்கின்றது. அவ்வாறான நாடுகளில் கருக்கலைப்பு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போன்ற நாடுகளில் ஆண், பெண் சமநிலையை சீராக பேணவும் ஏனைய உணர்வு ரீதியான காரணங்களுக்காகவும் கருக்கலைப்பு சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. இதில் சமயத்தலைவர்களுடைய பங்களிப்பும் உள்ளடங்குகிறது.
எமது நாட்டையும் நாட்டு முஸ்லிம்களையும் எடுத்துக்கொண்டால் மேற்கத்தைய நாடுகளைப்போன்று விபசாரம் மற்றும் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு என்பன பரவலாக இல்லை. எனவே, கருக்கலைப்புகள் மருத்துவ அடிப்படையில் தாயினுடைய உயிரைக் காப்பதற்காகவே செய்யப்படுகின்றன.
மேற்கத்தைய நாடுகளின் தலைமையிலான பலதேசங்கள் இலங்கை சமூகத்தின் குடும்ப அமைப்பை சிதைப்பதற்காக இலங்கையிலும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றன. மேலும், முஸ்லிம் நாடுகளிலும் இது சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் முன்வைக்கப்படுகின்றன. முஸ்லிம்களின் குடும்பக்கட்டமைப்பை தகர்த்தெறிந்து முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் வெகுதூரமாக்க வேண்டுமென்ற முயற்சிகள் தொடர்ந்த வண்ணமுள்ளன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க முடியாது.
-Vidivelli