தேர்தல் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையாகும். எமது நாட்டில் இந்த உரிமை அரசியலமைப்பு ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக விழுமியங்களைப் பேணும் ஜனநாயக நாடான இலங்கையில் மக்களின் இந்த உரிமை உரியகாலத்தில் வழங்கப்படாது ஏன் இழுத்தடிக்கப்படுகிறது என்ற கேள்வி மக்கள் மத்தியில் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
இந்த வருடம் தேர்தல் வருடமாக அமையவுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். மாகாணசபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களை நாம் எதிர்நோக்கியுள்ளோம். எந்தத் தேர்தலை முதலில் நடத்த வேண்டும் என்பதில் கூட அரசியல் கட்சிகள் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டுள்ளன.
தேர்தலொன்று நடத்தப்பட வேண்டுமென்றால் முதலில் மாகாண சபைத் தேர்தலே நடத்தப்பட வேண்டும். ஏனென்றால் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் பூர்த்தியாகி இன்றைக்கு ஒருவருடம் 7 மாதங்கள் கடந்துவிட்டன. சப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் காலாவதியாகி அன்று முதல் அம்மாகாண சபைகள் ஆளுநரின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. இதேவேளை, மத்திய வடமேல் மற்றும் வடக்கு மாகாண சபைகளின் பதவிக்காலம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் காலாவதியாகி அவையும் ஆளுநர்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளன.
எஞ்சியிருப்பது மூன்று மாகாணசபைகளே. தெற்கு மற்றும் மேல் மாகாண சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பூர்த்தியாகவுள்ளது. அத்தோடு ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் பூர்த்தியாகவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படுகின்றமைக்கு எல்லை நிர்ணய அறிக்கையே காரணமாகக் கூறப்பட்டு வருகிறது. கலப்பு தேர்தல் முறைக்கு பாராளுமன்றத்தில் கையுயர்த்தியவர்கள் இன்று அந்தத் தேர்தல் முறையை எதிர்க்கிறார்கள். பழைய தேர்தல் முறையான விகிதாசார தேர்தல் முறையின் கீழே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.
கே. தவலிங்கம் தலைமையில் நியமிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழு தனது அறிக்கையை 4 மாதங்களுக்குள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளித்தது. அந்த அறிக்கை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு படுதோல்வியடைந்தது.
இதனையடுத்து அவ்அறிக்கையை மீளாய்வு செய்வதற்கு மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவும் தற்போது செயலிழந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாணசபைத் தேர்தல் எதிர்வரும் மே 31 ஆம் திகதிக்கு முன்பு நடத்தப்பட வேண்டுமெனவும் அனைத்து மாகாண சபைகளின் தேர்தல் ஒரே தினத்தில் நடத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சரவையில் பிரேரணையொன்றினை முன்வைத்துள்ளார். விகிதாசார முறையின் கீழே தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
இதேவேளை, மாகாண சபைகள், உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பூர்த்தியாவதால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குப் பின்பே மாகாண சபைகள் அனைத்தினதும் தேர்தல் ஒரே தினத்தில் விகிதாசர முறையின் கீழ் நடத்தப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது. விகிதாசார தேர்தல் முறையில் தேர்தல் நடத்துவதற்கு மாகாணசபைத் தேர்தல் சட்டம் திருத்தப்பட வேண்டும். 2/3 பெரும்பான்மை பெறப்படவேண்டும். இதற்கு கால அவகாசம் தேவை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இவ்வாறு பேசிப் பேசியே காலம் வீணடிக்கப்படுகின்றமை தவிர்க்கப்பட வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக செயலில் இறங்க வேண்டும். இதுவே ஜனநாயகத்தை மதிக்கும் அரசாங்கமொன்றின் பணியாகும்.
சிறுபான்மைச் சமூகத்தின் பிரதிநிதித்துவத்துக்கு சவாலாக உள்ள கலப்பு தேர்தல் முறையை நீக்கி விகிதாசார தேர்தல் முறைக்கான சட்டத் திருத்தங்கள் விரைவு படுத்தப்பட வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்ந்தும் காலதாமதப்படுத்தப்படக்கூடாது.
-Vidivelli