- ஏ.ஜே.எம். நிழாம்
அண்மையில் சர்வதேச சஞ்சிகையான Time (டைம்) கடந்த ஆண்டின் கதாநாயகர் என ஜமால் கஷோக்ஜியை பெயரிட்டிருக்கிறது. காரணம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலும் அச்சமின்றி உண்மையை எழுதி பலியானதற்கேயாகும். இவரோடு இன்னும் சில ஊடகவியலாளர்களின் பெயர்களும் அச்சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜமால் கஷோக்ஜியின் கொலை குறித்து சவூதி செய்யும் விசாரணை ஐ.நா. வுக்கு திருப்தியளிக்கவில்லை. அது மென்மேலும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணையையே கோரிக்கொண்டிருக்கிறது. இவரது படுகொலை துருக்கிக்குள் நிகழ்ந்திருப்பதால் சந்தேக நபர்கள் அனைவரையும் தம்மிடம் ஒப்படைக்குமாறு துருக்கிய அதிகாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றபோதும் சவூதி அரசு அதற்கு இணங்கும் நிலைப்பாட்டில் இல்லை என்றே தெரிகிறது.
எனினும் அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏ.யும், செனட் சபையும் இந்த படுகொலையில் சவூதி இளவரசர் சல்மான் தொடர்புபட்டுள்ளார் என்றே உறுதியாக நம்புகின்றன. ஆனால் சவூதிய அதிகாரிகள் ஆரம்பத்திலிருந்தே இவருக்கு இதில் தொடர்பில்லை என்றே கூறி வருகின்றார்கள். ஜமால் கஷோக்ஜியை மீண்டும் சவூதிக்குக் கொண்டு வருமாறே சந்தேக நபர்களிடம் உத்தரவிடப்பட்டிருந்தது என்கிறார்கள். எனினும் இதில் சம்பந்தப்பட்ட அக் குழுவின் உயர் அதிகாரிகள் வழங்கப்பட்ட அதிகாரத்தையும் மீறிச்சென்று இந்த படுகொலையைச் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள்.
இது திட்டமிட்ட படுகொலை. இதற்குப் பின்னால் குறிப்பிடத்தக்க முக்கிய நபர்கள் இருக்கிறார்கள் எனும் தகவல்கள் அப்போது பரவலாக வெளியாகின. அத்தகையோரில் ஒருவர் இளவரசர் சல்மானின் ஒரு நெருங்கிய தோழர். மற்றவர் ஜமால் கஷோக்ஜியின் சடலத்தை துண்டு துண்டாக வெட்ட உதவிய வைத்தியர். இதற்கென சவூதியிலிருந்து துருக்கிக்கு வந்த 15 பேரில் அவரும் சேர்க்கப்பட்டிருந்தார். சடலத்தை அரிவதற்காக அவர் விசேட கூரிய உபகரணத்தையும் கொண்டு வந்திருந்ததாக துருக்கியின் ஊடகங்கள் அப்போது குறிப்பிட்டிருந்தன. அத்தோடு சவூதி உளவுப் பிரிவின் உயர் அதிகாரியின் பெயரும் கூட இப்படுகொலையோடு சம்பந்தப்படுத்தப்பட்டு பரவலாகப் பேசப்படுவதைக் கேட்க முடிந்தது.
எனினும், வழக்குத் தொடரப்பட்டிருப்பது 11 பேருக்கு எதிராகவே என்கிறார்கள். இவர்களிலும் சிலர் இல்லை என்கிறார்கள். இதனால் சவூதி பொறுப்பேற்றுள்ள விசாரணை இப்போது சந்தேகத்துக்கு உட்பட்டிருக்கிறது. காரணம் எப்படி வழக்கு தொடரப்பட்டிருக்கிறது, யார் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி பெயர், ஊர் குறிப்பிடாதிருக்கிறார்கள். இதனால் பலருக்கு இத்தகைய விசாரணையில் அறவே நம்பிக்கை இல்லாதிருக்கிறது.
சில நாட்களுக்கு முன் ஆரம்ப விசாரணை மக்களுக்குத் தெரியாமலேயே நிகழ்ந்தது. பொறுப்புக்கூற வேண்டியவருக்குப் பதிலாக அவரது உத்தரவுக்குப் பணிய வேண்டிய கீழ் மட்டத்தைச் சேர்ந்த சிலரைப் பலிகொடுத்து முக்கியமானோரைத் தப்பவைக்கும் முறையே அதில் இருந்ததாகக் குற்றச்சாட்டும் எழுந்தது.
சவூதியின் உயர்மட்டத்தினர் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருக்கையில் அத்தகையோருக்கு சார்பாக அங்கு நீதித்துறை இருக்கையில் நீதிக்கான சுயாதீனம் எப்படி அமையும்? இது முன்பே அங்குள்ள நிலை எனவே இப்படுகொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணை நிகழும் என எதிர்பார்க்க முடியாது என்று பலதரப்பினரும் குறிப்பிடுகிறார்கள். எனினும் இம்மாத ஆரம்பத்தில் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் மறு விசாரணை எப்போது என்பதற்கான அறிவிப்பு எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஜமால் கஷோக்ஜி படுகொலை செய்யப்பட்ட விடயத்தில் பலரது சந்தேகத்துக்கும் இலக்கான முக்கிய நபர் இளவரசர் சல்மான் என்பதே இதற்குக்காரணமாகும். அவரது உத்தரவு எதுவுமின்றி சவூதி தூதுவராலயத்துக்குள் இத்தகைய படுகொலை எதுவும் நிகழ வழியில்லை என்பதே பலரதும் அபிப்பிராயமாகும். அதை நிரூபிப்பது போலவே மேற்படி விசாரணையில் இளவரசர் சல்மானைப் பற்றி எத்தகைய குறிப்புக்களும் இல்லை என்கிறார்கள். இதனால் பல தரப்பினரும் இதை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முடிவில் இதுபற்றி சல்மான் இளவரசருக்கு எதிராக சர்வதேச அழுத்தம் அதிகரித்ததால் இதற்கு ஏதேனும் செய்தாக வேண்டும் எனும் இக்கட்டான நிலைக்கு அவர் ஆளாகியிருக்கிறார். அதன்படி தான் 11 பேருக்கு எதிரான விசாரணையில் நீதிபதி 6 பேருக்கு விடுதலை வழங்கி 5 பேருக்கு மட்டுமே மரண தண்டனை விதித்திருக்கிறார். முதல் சுற்றில் 4 பேர் தவிர்க்கப்பட்டு, இரண்டாம் சுற்றில் விசாரணையின் பெயரால் மேலும் 6 பேர் தவிர்க்கப்பட்டு, ஈற்றில் 5 பேருக்கு மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆக 15 குற்றவாளிகளில் 10 பேர் தப்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகுக்கு எதையேனும் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் 5 பேரையும் எஞ்ச வைத்தார்களோ? மூன்றாவது சுற்றில் என்ன நிகழும்? காலப்போக்கில் உலகம் இதை மறந்ததும் இவர்களுக்கும் மன்னிப்புக்கான நன்னடத்தை எனும் பெயரால் குற்ற விலக்கு வழங்கி விடுதலை அளித்து விடுவார்களோ? எனப் பலரும் வினவுகிறார்கள்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அமெரிக்காவிலிருந்து ஜமால் கஷோக்ஜி தான் மணக்கவிருக்கும் துருக்கிய பெண்ணோடு துருக்கியிலுள்ள சவூதி கொன்சியூலர் காரியாலயத்துக்கு வருகை தந்து அந்த பெண்ணை வெளியே நிற்குமாறு சொல்லி விட்டு மறுமணத்துக்கான தஸ்தா வேஜுகளைப் பெற உள்ளே சென்றிருந்தார். எனினும் அவர் அதிக நேரமாக வெளியே வரவில்லை. உடனே அப்பெண் இது பற்றி துருக்கிய அரசிடம் அறிவித்ததும் துருக்கி உடனடி விசாரணையை ஆரம்பித்திருந்தது. அதன் பிறகே நாட்டுக்குள் 15 பேர் திருட்டுத் தனமாக நுழைந்துவிட்டுப் போனது தெரியவந்தது. நிகழ்ந்தவை யாவும் சிறிது சிறிதாக அம்பலத்துக்கு வந்தன.
நல்ல காலம் அந்தப் பெண் அந்த தூதுவராலயத்துக்குள் நுழையவில்லை. இல்லாவிட்டால் சாட்சியை மறைப்பதற்காக அந்த பெண்ணையும் கொன்றிருப்பார்கள். இன்னொரு வகையில் பார்த்தால் அந்த பெண் வெளியே நின்றதால்தான் விடயம் துருக்கிய அரசுக்குத் தெரியவந்தது.
இல்லாவிட்டால் விடயம் மூடி மறைக்கப்பட்டிருக்கும். தான் துண்டு துண்டாக அரியப்படும் அளவுக்கு ஜமால் கஷோக்ஜி யாருக்கு என்னதான் செய்தார். தந்தை வழியைத் துருக்கியாகக் கொண்ட இந்த சவூதி அரேபியர் சிறந்த எழுத்தாளர். சவூதி அரசைக் கடுமையாக எழுதி விமர்சித்ததற்காக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி அமெரிக்காவில் குடியேறினார். அங்கும் வாஷிங்டன் போஸ்ட் எனும் பத்திரிகையில் இவ்வாறு தொடர்ந்தும் எழுதி வந்ததாலேயே சவூதி அரேபியாவின் கோபத்துக்காளானார் என்பது இப்போது உறுதியாகிவிட்டது.
மாறாகப் பாதாளக் குழுவைப்போல் உலக ரீதியில் இயங்கி நிராயுத பாணியான ஒரு தனி நபரைக் குழுவாகச் சென்று படுகொலை செய்து துண்டு துண்டாக அரிந்திருப்பது மாபெரும் பாதகமாகும். உலக எழுத்தாளர்களினதும் ஊடகவியலாளர்களினதும் நெஞ்சங்களில் ஜமால் கஷோக்ஜி சதாகாலமும் நிறைந்திருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இவர் ஒரு ஷஹீதாவார்.
பின்வரும் கேள்விகளுக்கு இதுவரை பதில்களே இல்லை.
1) ஜமால் கஷோக்ஜியை சவூதிக்குக் கொண்டு வர உத்தரவிட்டது யார்?
2) ஏன் அவர் சவூதிக்குக் கொண்டு வரப்பட வேண் டும்?
3) அவர் துருக்கி வருவதைப் பற்றி முன்கூட்டியே உளவு கூறியது யார்?
4) இறைமையுள்ள ஒரு நாட்டுக்குள் முன்னறிவிப்பு இல்லாமல் அத்துமீறி நுழைந்ததும், வெளியேறியதும் சவூதியின் குற்றம் இல்லையா?
5) நிராயுதபாணியான ஒருவரைக் கொல்ல 15 பேர் அனுப்பப்பட்டது முக்கிய கொலையாளிகள் துருக்கிய அதிகாரிகளிடமிருந்து தாக்குதல் வந்தாலும் தப்பிச் செல்லவா?
6) சவூதிக்குள் இன்னொரு நாட்டினர் இப்படி வந்து படுகொலை செய்தால் அது என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?
7) இளவரசர் சல்மானின் நெருங்கிய தோழரும், ஜமால் கஷோக்ஜியின் சடலத்தைத் துண்டு துண்டாக வெட்டிய வைத்தியரும், உளவுப் பிரிவின் உயர் அதிகாரியும் சடலத்தை அரிந்த கூரிய கத்தியும் பகரும் தகவல்கள் என்னென்ன?
8) முதலில் அவ்விதம் நிகழவில்லை என மறுத்த சவூதி பிறகு ஒப்புக் கொண்டது ஏன்?
9) முதலில் பேச்சுவார்த்தை மட்டும் தான் நிகழ்ந்தது பிறகு கைகலப்பாக மாறி அவர் இறந்தார் என ஏன் கூறப்பட்டது? தனி நபர் 15 பேருடன் மோத ஜமால் கஷோக்ஜி குங்பூ, கராட்டி, ஜூடோ எல்லாம் பயின்றவரா?
10) உயிரோடு அரிந்தார்களா, கொன்ற பின் சடலத்தை அரிந்தார்களா?
11) முழுச்சடலமும் இருந்தால் விஷயம் அம்பலமாகிவிடும் என்பதால்தான் ஒவ்வொரு துண்டுகளையும் பொதிகளில் சுற்றி பல்வேறு இடங்களிலும் வீசினார்களா?
12) முகத்தைக் கொலையாளிகள் சிதைத்தது ஏன், ஆள் அடையாளம் தெரியாதிருப்பதற்கா?
13) அவசரமாக முடிக்க வேண்டிய காரியம் என்பதற்காகத்தான் தடயங்கள் எதுவும் இல்லாதிருக்க இவ்வாறெல்லாம் செய்தார்களா?
14) துருக்கி நிரூபித்ததன் பிறகுதான் சவூதி நிகழ்ந்ததை ஏற்றுக் கொண்டது. இது ஏன்?
15) தக்க விசாரணையின்றி இளவரசர் சல்மானுக்கு குற்றவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதே இது ஏன்?
16) துருக்கியிலுள்ள சவூதிய தூதுவராலயத்தில் ஜமால் கஷோக்ஜியும் கொலையாளிகளும் பேசிய உரையாடல்கள் என்னென்ன?
17) ஜமால் கஷோக்ஜியின் கைகள் ஏன் வெட்டப்பட்டன எழுதியதற்காகவா?
18) அவரது கால்கள் ஏன் வெட்டப்பட்டன? சவூதியை விட்டும் தப்பி ஓடியதற்காகவா?
19) மூளை ஏன் சிதைக்கப்பட்டது அறிவை அழித்தொழிப்பதற்காகவா?
20) அவரது இதயம் ஏன் சிதைக்கப்பட்டது? உயிரின் தடயத்தையே அழிப்பதற்காகவா?
உலக வரலாற்றில் பல எழுத்தாளர்கள் நஞ்சூட்டப்பட்டும், குண்டுகளுக்கு இலக்காகியும், துப்பாக்கி சூடுகளுக்கு இலக்காகியும், நீரில் மூழ்கடிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஜமால் கஷோக்ஜி துண்டு துண்டாக அரியப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அதனால்தான் உலகின் முதல்தர சஞ்சிகையான டைம் அவரைக் கடந்த ஆண்டின் அதிசிரேஷ்டர் என ஏற்றிப் போற்றிப் புகழ்ந்திருக்கிறது. உலகின் முதல்தர ஊடகம் உலகின் அதிசிறந்த எழுத்தாளரைப் புகழ்ந்திருப்பதில் வியப்பு இல்லை. மனித ரீதியில் இதை அது நோக்கியிருக்கிறது. மத, இன, மொழி, பிரதேச, நாடு எனும் விடயங்களிலான கணிப்பு எதுவுமின்றி இதை அது பார்த்திருக்கிறது. அமெரிக்காவிலிருந்து பிரசுரமாகும் TIME (டைம்) எனும் இந்த ஆங்கில சஞ்சிகை தினசரி இலட்சக்கணக்கில் அச்சாகி உலகெல்லாம் வியாபித்திருக்கிறது.
எனினும் அதைப் போன்ற விற்பனையும் பிரசுரத் தொகையும் கொண்ட வாஷிங்டன் போஸ்ட் எனும் சஞ்சிகைதான் இந்தக் கொடூரப் படுகொலையைப் பற்றி உலகெல்லாம் அறியச் செய்தது. அதன் பிறகு உலகின் எல்லா ஊடகங்களும் ஒன்றுக்கொன்று முந்திக் கொண்டு ஒரேநாளில் உலகெங்கும் அறியச் செய்தன. அந்த வகையில்தான் கடந்த ஆண்டு ஒரே நாளில் உலகெங்கும் அதிகமாகப் பேசப்பட்ட ஒரே நபர் ஜமால் கஷோக்ஜியே என்றாகிறார்.
இவர் சவூதி அரசையும் இளவரசர் சல்மானையும் பகிரங்கமாக விமர்சித்து வந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து கொண்டு தாறுமாறாக எழுதினாராம். இளவரசர் சல்மானை மேலைநாடுகளில் தனது எழுத்தாண்மை மூலம் இழிவுபடுத்தியது அரச துரோகமாம்.
கருத்தைக்கருத்தால் எதிர்கொள்ள முடியாதோரே கத்தியால் பதம் பார்த்திருக்கிறார்கள். அதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா? தற்போது இளவரசர் சல்மான் உலகத்தின் கடும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார். விமர்சனத்தில் இருவகை உண்டு. ஆக்க பூர்வ விமர்சனம், அழிவு பூர்வ விமர்சனம். இவற்றில் ஆக்க பூர்வ விமர்சனம் இன்றியமையாததாகும். இத்தகைய விமர்சனத்துக்கு பதிலளிக்க எவரும் தயங்கக் கூடாது. விமர்சனமே கூடாது என்போர்தான் இதை எதிர்ப்பார்கள். அழிவுபூர்வ விமர்சனம் அறவே கூடாது. காரணம் அது அடுத்தவனை பழி கூறும் வகையிலோ அவனது செய்கை நிந்திக்கும் வகையிலோதான் பெரும்பாலும் அமையும்.
எனினும் ஒருவனின் கொடூரமான செயற்பாடுகளை முன்னிறுத்தி ஆக்கபூர்வ விமர்சனத்தை முன்வைப்பது எப்படி எனும் கேள்வியும் எழவே செய்கிறது. அதனால் தான் இளவரசர் சல்மானின் தீர்மானங்களை எதிர்த்து ஜமால் கஷோக்ஜி அழிவு பூர்வமாக விமர்சித்திருக்கிறார் என நினைக்கிறேன். ஜமால் கஷோக்ஜியின் பெயர் சரித்திரத்தில் நிலைக்கின்ற வரை இளவரசர் சல்மானின் பெயரும் பேசப்படும்.
இப்போது உலகம் இதில் நேர்மையான தீர்ர்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அது எப்படிக் கிடைக்கும் அங்குள்ள அரசர் மூலம் கிடைக்குமா? இல்லை அவரால் மகன் காக்கப்படலாம் எனும் கருத்தையே அனைவரும் தொனிக்கிறார்கள். சட்டமா அதிபர் நீதித்துறை, காவல் துறை ஆகியவற்றின் நிலை என்ன? மன்னராட்சியில் மூச்சும் விட முடியாது. அப்படியானால் சாட்சிகளற்ற ஜமால் கஷோக்ஜியின் மர்மப் படுகொலைக்கு பொறுப்பு கூற வேண்டியோர் யார்?
இந்தக் குற்றத்தின் பின்னணியில் சவூதி இருப்பதாக துருக்கி சந்தேகிப்பதால் அதற்கு சவூதியின் விசாரணையில் நம்பிக்கையில்லை. அதனால்தான் அது சந்தேக நபர்களை விசாரணைக்கென தன்னிடம் ஒப்படைக்குமாறு சவூதியிடம் கோருகிறது. துருக்கிய பெண்ணைத்தான் ஜமால் கஷோக்ஜி மணக்கவிருந்ததால் அவரும் இதற்கு கடும் அழுத்தத்தை கொடுக்கிறார். அத்தோடு இப்படுகொலை துருக்கிக்குள் நிகழ்ந்திருப்பதால் இதை விசாரிக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் துருக்கி கருதுகிறது.
சந்தேக நபர்கள் துருக்கியிடம் கையளிக்கப்பட்டால் படுகொலை புரிந்ததற்கான குற்றத்தோடு முன்னறிவிப்போ அனுமதி கோரலோ இன்றி அத்துமீறி கும்பலாக வந்து போனதைப்பற்றியும், ஆயுதங்கள் கொண்டுவந்து போனதைப்பற்றியும் கூட துருக்கி விசாரிக்கவே செய்யும். ஒரு நாட்டின் பிரஜைகளை இன்னொரு நாட்டால் விசாரிக்க முடியாது என்றே சவூதி குறிப்பிடுகின்றது. அப்படியானால் அந்த நாட்டுக்குள் அத்துமீறி போய்ப்படுகொலை செய்து விட்டு வந்த பிரஜைகளை என்ன செய்வது? அரவணைப்பதா? குற்றவாளியே நீதிபதியாக முடியுமா?
-Vidivelli