1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதே நியாயமானது

0 819

பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்­வுக்­கான முத­லா­ளிமார் சம்­மே­ளனம் மற்றும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் தொழிற்­சங்­கங்­க­ளுக்­கி­டை­யி­லான கூட்டு ஒப்­பந்தம் நேற்று முன்­தினம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. நீண்­ட­கால இழு­ப­றியின் பின்பு பல்­வேறு போராட்­டங்­களின் மத்­தி­யிலே இந்தக் கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது.

கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் சந்­தர்ப்­பத்தில் கூட முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்தின் காரி­யா­லயம் முன்பாகவும்  நாட்டின் பல பகு­தி­களிலும் பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருந்­தார்கள்.

தோட்டத் தொழி­லா­ளர்கள் தங்­க­ளது அடிப்­படை நாள் சம்­ப­ளத்தை 1000 ரூபாவால் அதி­க­ரிக்கக் கோரியே போராட்­டங்­களை நடத்தி வந்­தனர். தொடர்ந்தும் போராட்­டங்கள் இடம்­பெ­று­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. இப்­போ­ராட்­டத்தில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் உட்­பட பல்­வேறு துறை­யினர் கலந்து கொண்­டார்கள்.

கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள புதிய கூட்டு ஒப்­பந்­தத்தின் படி பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் அடிப்­படைச் சம்­பளம் 500 ரூபா­வி­லி­ருந்து 700 ரூபா­வா­கவே அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சம்­பள அதி­க­ரிப்பை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்பதில் தொழி­லா­ளர்கள் உறு­தி­யாக இருக்­கி­றார்கள்.

உண்மையில் இந்தப் பிரச்­சினை விரைவில் தீர்க்­கப்­பட வேண்டும். இல்­லையேல் எமது நாட்­டுக்கு அந்­நிய செலா­வ­ணியை ஈட்­டித்­தரும் பெருந்­தோட்­டங்கள் வெகு­வாகப் பாதிக்­கப்­ப­டலாம்.

தோட்­டத்­தொ­ழி­லாளர்கள் முன்பு அடிப்­ப­டைச் ­சம்­ப­ள­மாக 500 ரூபாவும், தேயி­லைக்­கான விலைக்­கொ­டுப்­ப­ன­வாக 30 ரூபாவும், வர­வுக்­கொ­டுப்­ப­ன­வாக 60 ரூபாவும், உற்­பத்திக் ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வாக 140 ரூபாவும், ஆக மொத்­த­மாக 730 ரூபா பெற்று வந்­தனர்.

நேற்று முன்­தினம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள புதிய கூட்டு ஒப்­பந்­தத்தின் படி தொழி­லா­ளர்­களின் அடிப்­படைச் சம்­பளம் 700 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக தோட்டக் கைத்­தொழில் அமைச்சு தெரி­வித்­துள்­ளது. அத்­தோடு தேயி­லைக்­கான விலைக்­கொ­டுப்­பினை 30 ரூபா­வி­லி­ருந்து 50 ரூபா­வாக அதி­க­ரித்துள்­ள­தா­கவும் ஊழியர் சேம­லாப நிதி மற்றும் ஊழியர் நம்­பிக்கை நிதி­யாக 105 ரூபாவும் பெற்றுக் கொடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் மொத்­த­மாக தற்­போது நாள் சம்­பளம் 855 ரூபா­வாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­நி­லையில் தங்­க­ளுக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்டு வந்த வரவு கொடுப்­ப­னவும், உற்­பத்தி ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவும் புதிய கூட்டு ஒப்­பந்­தத்தில் இல்­லாமல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தொழி­லா­ளர்கள் தெரி­விக்­கி­றார்கள்.

அர­சாங்­கத்தின் திறந்த பொரு­ளா­தார கொள்­கை­யி­னை­ய­டுத்து நாட்டின் வரு­மா­னத்­திற்கு ஏனைய துறைகள் பங்­க­ளிப்பு செய்­தாலும் பெருந்­தோட்டத் துறையே தொடர்ந்தும் இதில் பெரும் பங்கு வகிக்­கி­றது. நாட்­டிற்கு தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தோட்­டத்­து­றைகள் மூலம் வரு­டாந்தம் சுமார் 300 பில்­லியன் ரூபா வரு­மானம் கிடைக்­கி­றது.

எமது நாட்­டிற்கு பெரும் வரு­மா­னத்தை ஈட்­டித்­த­ரு­வ­தற்குத் துணை­பு­ரியும் தோட்­டத்­துறை தொழி­லாளர் சமூகம் தொடர்ந்தும் வறு­மைக்­கோட்­டிலே தங்­கி­யி­ருக்­கி­றது. இவர்­களில் அநேகர் இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்­த­வர்கள். நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுடன் ஒப்­பி­டும்­போது தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கைத்­தரம், கல்வி, கலா­சாரம், வாழ்க்கை உட்­கட்­ட­மைப்பு வச­திகள் மிகவும் பின்­தங்­கிய நிலை­யிலே இருக்­கி­றது.

அவர்­க­ளுக்­கென்று சொந்த நிலம் இல்லை, சொந்த வீடுகள் இல்லை, பெரும்­பான்­மையோர் 10×10 அடி லயன் அறை­க­ளிலே சிறைப்­பட்டு இருக்­கி­றார்கள். குடும்­ப­மாக சிறிய அறையில் வாழ்வதால் பல சமூக சீரழிவுகளுக்கும் அது காரணமாய் அமைந்துள்ளது. அதனால் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும். முதற்படியாக அவர்களது அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும். இந்த மக்களின் நியாயமான இந்தக் கோரிக்கை உடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.