போதைப் பொருள் கடத்தல், பாவனையும் கொலைகளும் தொடர்தல் நாட்டுக்கு கெடுதி

0 955
  • ஏ.எல்.எம். சத்தார்

விடை­பெற்றுச் சென்ற 2018 ஆம் ஆண்டு இலங்­கையில் பெருந்­தொ­கை­யான போதைப் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்ட ஆண்­டாக வர­லாறு படைத்­துள்­ளது. அதே போன்றே படு­கொ­லைகள், தற்­கொ­லைகள் பெரு­ம­ளவில் இடம்­பெற்ற ஆண்­டா­கவும் பொலிஸ் பதி­வுகள் பறை­சாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றன.

சுமார் அரை நூற்­றாண்­டுக்கு முன்னர் இலங்­கையில் திடீர் மர­ணங்கள், விபத்து மர­ணங்கள் என்­பன மிகவும் அபூர்வ நிகழ்­வு­க­ளா­கவே நோக்­கப்­பட்டு வந்­தன. வயோ­திப மரணம், ஒரு சில நோய்­களால் ஏற்­படும் மரணம், விஷ ஜந்­துக்கள் தீண்­டலால் நிகழும் மரணம் அல்­லது நாய்க்­கடி மரணம் என்றே அன்­றைய கால­கட்­டங்­களில் திடீர் மர­ணங்கள் நிகழ்ந்­துள்­ளன.

இன்று பாதாள உலகக் குழுக்­க­ளுக்­கி­டை­யே­யான பரஸ்­பர படு­கொ­லைகள், வாகன மற்றும் விபத்து மர­ணங்கள், அர­சியல் பழி­வாங்­கல்கள், குடும்பத் தக­ராறு, அய­லக பிணக்­கு­களில் வஞ்சம் தீர்த்தல் என்று மனித உயிர்கள் மிகவும் மலி­வா­கவே விலைபோய்க் கொண்­டி­ருக்­கின்­றன.

இலங்­கையில் அவ்­வப்­போது தலை­தூக்­கிய இனக்­க­ல­வ­ரங்­களின் போது மிகவும் அற்ப, சொற்ப கொலை­களே நிகழ்ந்­துள்­ளன. இவற்றைத் தவிர 1951 ஆம் ஆண்டு பெரும் பரப்­ப­ரப்­பாகப் பேசப்­பட்டு வந்த ரெஜினா சதா­சிவம் படு­கொலை, கலத்­தாவை கொலை, கோத்­தா­பய கிரம்­ப­கந்த கொலை, திஸ்­மட கொலை, ஓர் உயிரைப் பலி­கொண்ட நான்கு இலட்சம் ரூபா கொள்­ளைக்­கான கொலை, ஹோகந்­தர கூட்டுப் படு­கொலை என்­ப­னவே அன்று நாடு கண்டு கொண்ட கொலை கலா­சா­ர­மாக விளங்­கி­ய­­ன­வாகும்.

நாட்டின் ஆட்­சியில் விரக்தி கொண்ட தென்­னி­லங்கை வாலி­பர்­களின் 1971 ஏப்ரல் கிளர்ச்சி, 1983 கறுப்பு ஜூலை கல­வரம், 1988 – 89 காலப்­ப­கு­தியில் மீண்டும் தலை தூக்­கிய இளைஞர் கிளர்ச்சி போன்­ற­ன­வற்றில் உயிர்ப்­ப­லிகள் சற்று உயர்­வ­டைந்­தன. இதே காலப்­ப­கு­தியில் விடு­தலைப் புலி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட போராட்­டத்தின் போதும் பல உயிர்கள் கொல்­லப்­பட்­டன. மேலும் புலி­களால் கிழக்­கி­லங்­கையில் முஸ்­லிம்­களை அடக்­கவும் அச்­சு­றுத்­தவும் பள்­ளி­வா­சல்கள், முஸ்லிம் கிரா­மங்­களில் நடந்­தேற்­றப்­பட்ட கொலைகள் என்று நாட்டில் மனித உயிர்கள் அன்று காவு கொல்­லப்­பட்­டன.

இன்று மனித உயிர்கள் பயங்­க­ர­மான முறையில் பந்­தா­டப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. 2018 ஜன­வரி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையில் 453 படு­கொலைச் சம்­ப­வங்கள் நாட்டில் அரங்­கே­றி­யுள்­ளன. இவற்றுள் 401 கொலைக்­குற்­றச்­செ­யல்­க­ளுக்­கான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு நீதி­மன்­றங்­களில் வழக்­குகள் தொட­ரப்­பட்டு வரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

இடம் பெற்­றுள்ள மனிதப் படு­கொ­லை­களில் அதி­க­மா­னவை மேல்­மா­கா­ணத்­தி­லேயே நிகழ்ந்­துள்­ளன. இதில் தென் மாகாணம் இரண்டாம் இடம் பிடித்­துள்­ளது. 2017 ஆம் ஆண்டு 412 கொலைகள் பதி­வா­கி­யுள்ள அதே நேரம் 2018 ஆம் ஆண்டு அது 453 ஆக உயர்வு கண்­டுள்­ளது. நாட்டில் கொலை கலா­சாரம் மேலோங்கி வரு­வ­தையே இத்­த­ர­வுகள் உணர்த்­து­கின்­றன. இக்­கொ­லை­களில் 47 துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வங்­க­ளாகும். இதர கொலைகள் கத்திக்குத்து, கூரிய ஆயு­தங்­களால் வெட்டுக் கொத்து மற்றும் தடி­யடி உள்­ளிட்ட தாக்­கு­தல்­களால் நிகழ்த்­தப்­பட்ட கொலை­க­ளாகும்.

இவற்­றுக்குப் புறம்­பாக இதர திடீர் மர­ணங்கள் என்ற வகையில், சமுத்­திரம், ஆறு, நீர்­நி­லை­களில் மூழ்கி மர­ண­மானோர் தொகையும் கடந்த வருடம் அதி­க­ரிப்புக் கண்­டுள்­ளது. அது 688 ஆகும். இதில் 565 ஆண்­களும் 123 பெண்­களும் பலி­யா­கி­யுள்­ளனர். தற்­கொலை மர­ணங்­களும் கடந்த வருடம் தன் கைவ­ரி­சையைக் காட்­டி­யுள்­ளது. மொத்­த­மாக 3070 தற்­கொலை மர­ணங்கள் சம்­ப­வித்­துள்­ளன. இவற்றில் ஆண்­களின் எண்­ணிக்­கையே மிகைத்­துள்­ளன. 2453 ஆண்­களும் 617 பெண்­களும் தம்மைத் தாமே தீர்த்துக் கட்­டிக்­கொண்­டுள்­ளனர். வாகன விபத்து மர­ணங்­களும் கடந்த வருடம் முன்­னைய ஆண்­டு­களை விடவும் அதி­க­ரித்துக் காணப்­பட்­டுள்­ளன பல்வேறு வீதி விபத்துக்களிலும் 3164 மனித உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன.யானைத் தாக்­கு­த­லுக்­கி­லக்­காகி உயி­ரி­ழந்தோர் தொகையும் முன்­னைய காலங்­களை விடவும் கடந்த வருடம் அதி­க­ரித்தே உள்­ளன. இயற்கை அனர்த்த அழிவு மரண வீதமும் உயர்ந்து கொண்டே வரு­கி­றது. ஆனால் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி நிகழ்ந்த சுனாமி பேர­லையால் ஏற்­பட்ட மர­ணங்கள் இதில் விதி­வி­லக்கு.

தர­வு­களை உற்று நோக்­கு­கையில் திடீர் மர­ணங்கள் அதி­க­ரித்த ஆண்­டாக 2018 ஆம் ஆண்டு விடை­பெற்­றுச்­சென்­றுள்­ளது. ஆனால் பிறந்­துள்ள 2019 ஆம் ஆண்டின் ஜன­வரி மூன்று வாரத்­திற்­குள்ளே துப்­பாக்கிச் சூடு, வாகன விபத்­துக்கள் என்று கொல்­லப்­ப­டுவோர் தொகையை எண்ணிப் பார்க்­கையில் இந்த வரு­டமும் அதி பயங்­கர ஆண்­டாகி விடுமோ என்ற அச்­சத்­தையே தரு­கி­றது.

மனி­த­வளம் அழி­வது நாட்டின் நலனில் விழும் பாரிய அடி­யா­கவே உள்­ளது. நாட்டின் விருத்தி, முன்­னேற்­றத்­திற்­காக உழைக்கும் கரங்கள், நாட்­டுக்கு இல்­லாமல் போவது நாட்­டுக்கு நட்­ட­மே­யன்றி வேறில்லை.

விபத்து, இயற்கை அனர்த்த மர­ணங்கள் எப்­ப­டிப்­போ­னாலும் கொலை, தற்­கொலை மர­ணங்­களை எந்த வகை­யிலும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. அநி­யா­ய­மாக இழக்­கப்­படும் இந்த மனித சக்­திகள் நாட்டின் உழைப்பில் பயன்­ப­டுத்­தப்­ப­டு­மானால் நாடு அபி­வி­ருத்திப் பய­ணத்தில் பல மைல்­கற்­களைத் தாண்­டி­யி­ருக்கும்.

கொலை­களில் ஈடு­பட மூல ஊற்­றாக அமை­வது போதைப்பொருள் பாவ­னை­யென்­பது பல­ரதும் ஏகோ­பித்த கருத்­தாகும். இப்­போ­தைப்­பா­வனை விற்­ப­னை­யிலும் கடந்த ஆண்டே முத­லிடம் பிடித்­துள்­ளது. மிகப் பெரு­ம­ள­வான 738 கிலோவும் 560 கிராம் எடை கொண்ட பல­த­ரப்­பட்ட போதைப்­பொ­ருட்கள் நாட்­டுக்­குள்­ளி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. இவற்­றுடன் தொடர்­பு­டைய குற்றச் செயல் சந்­தேக நபர்­க­ளாக 40870 பேர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள்.

கொலை­யுண்டோர், கொலை­யுண்­டு­பண்ணி தண்­டனை அனு­ப­விப்போர் ஆகிய இரு தரப்பு குடும்­பங்­களும் பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும் இலக்­கா­கின்­றன.

கொலை கலா­சா­ரத்தால் சம்­பந்­தப்­பட்­டோரும் நாடும் உறைந்து போகும் நிலையில் மற்றும் சில கொலைச் சம்­ப­வங்கள் மனி­தமே வெட்­கித்­தலை குனிய வைக்கும் நிகழ்­வு­க­ளா­க­வுள்­ளன. இரத்­தக்­க­றை­யோடு கறை படிந்த  வர­லாற்றைப் பதியச் செய்­துள்ள படு­பா­தக கொலைச் சம்­ப­வங்கள் பல கடந்த வரு­டமும் இடம் பெற்­றுள்­ளன.

கம்­பளைப் பகு­தியில் 67 வய­து­டைய தாய் தனது வலது குறைந்த மகளை தடியால் அடித்துக் கொலை­செய்­துள்ளார்.

இரத்­தி­ன­புரி ஸ்ரீ சம்­புத்­தா­ராம விகா­ரையில் தலை­ம­றை­வா­க­யி­ருந்த பிக்­குவைச் தேடிச் சென்ற பொலிஸ் சார்ஜன் சம்­பந்­தப்­பட்ட அதே பிக்­குவால் கழுத்து நெறித்துக் கொல்லப்­பட்­டுள்ளார்.

கடந்த மே மாதம் மாளி­கா­வத்­தையில் இரண்டு வய­து­டைய பாலகன் ஒருவன் வளர்ப்புப் பெற்­றோரால் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாகி மர­ண­மான பரி­தாபச் செயலும் இடம்­பெற்­றுள்­ளது.

மொன­ரா­க­லையில் காதலன் ஒரு­வனால் அவ­னது காதலி கழுத்து நெறித்துக் கொல்­லப்­பட்­டுள்ளார். மேலும் சிறுமி துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­படல், பாட­சாலை மாணவன் சக மாண­வனால் கத்­திக்­குத்­துக்­கி­லக்­காகி கொல்­லப்­படல், மற்­றொரு பாட­சா­லையில் மாணவர் இரு­வ­ருக்­கி­டையே நிகழ்ந்த கை கலப்பில் ஒரு மாணவன் மாடி­யி­லி­ருந்து விழுந்து மர­ண­மாதல் என்று பாட­சாலை மட்­டங்­க­ளிலும் கொலை சமாச்­சாரம் தலை­தூக்கி வரு­கி­றது.

கடந்த கிறிஸ்மஸ் தினத்­தன்று அதி­கா­லையில் தங்­கா­லையில் நிகழ்ந்த துப்­பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். பிர­பல சிங்­களப் பாடகி பாணந்­து­றையில் அவ­ரது கண­வனால் கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இவ்­வாறு கடந்த ஆண்டு பரி­தாபக் கொலைகள் பலவும் பதி­வா­கி­யுள்­ளன.

இற்­றைக்கு 1500 ஆண்­டு­க­ளுக்கு முன் உலகில் நில­விய அநா­சார, அநா­க­ரிக யுகத்­துக்கே உலகம் தள்­ளப்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தையே அவ­தா­னிக்க முடி­கி­றது. குறிப்­பாக முகம்­மது நபி (ஸல்) அவர்கள் பிறக்­கும்­போது அரே­பி­யாவில் இருந்த மடை­மைக்­கால நிலையே இன்றும் மறு உருவில் உரு­வெ­டுத்­துள்­ள­தென்றே கூற­வேண்­டி­யுள்­ளது. அதே பஞ்­ச­மா­பா­தகச் செயல்­கள்தான், ஆனால் அவற்றின் பாணி­யில்தான் வித்­தி­யாசம்.

கொலை – அன்று வாள் வெட்டு, இன்று துப்­பாக்கி வேட்டு.

கொள்ளை– – அன்று வழிப்­பறி, இன்று நவீன பாணி­யி­லான கொள்ளை, மோசடி.

சூதாட்டம், இன்று நவீன முறை­களில் நடந்­தே­று­கின்­றன.

அன்று குல, கோத்­திரச் சண்டை, இன்று இன, மத மோதல்கள்.

இவ்­வாறு பஞ்­ச­மா­பா­த­கங்­களில் அன்­றைய மடைமை யுகத்­துடன் இன்­றைய நவீன உலகும் போட்டி போட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. இது உல­குக்கு ஆரோக்­கி­ய­மான தொன்­றல்ல. நாசத்­தையும் அழி­வை­யுமே அளித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

வளர்ந்து வரும் சிறார்­க­ளுக்கு சிறு வய­தி­லி­ருந்தே ஆத்­மீக அறி­வூட்­டப்­பட வேண்டும். உரிய முறையில் இவர்கள் பயிற்­று­விக்­கப்­ப­டு­வார்­க­ளானால், பஞ்­ச­மா­பா­தகச் செயல்கள் இடம்­பெ­று­வதைக் கணி­ச­மா­ன­ளவு குறைத்­துக்­கொள்ள முடியும்.

துரதிஷ்டம் என்னவென்றால் பெரும்பாலான சமயப்பாடசாலைகளில், குறிப்பாக பௌத்த சமய பாடசாலைகளில் இதர மதங்கள் குறித்து வெறுப்புணர்வூட்டும் பாட போதனைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது. இத்தகைய நிலை இன, மத மோதல்களுக்கே வழிவகுத்து விடுகிறது. இந்நிலை கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

பாடசாலை கல்வித்திட்டத்தில் ஒழுக்கவியல் கட்டாய பாடமாகப் புகுத்தப்படுவதும் நல்லதொரு சமூகமொன்றை உருவாக்க வழிவகுக்கலாம். இது ஆரம்ப வகுப்பு முதல் உயர்தரம் வரையிலும் போதனையாகவும் செயல் முறைப்பயிற்சியினூடாகவும் புகட்டப்படும்போது, பரீட்சையில் சித்தி பெறுவதற்காக மாணவர்கள் ஒழுக்கத்தின்பால் தூண்டப்படுவது உறுதி.

இவ்வாறு மாற்றியமைக்கத் தவறும் பட்சத்தில் மனித அழிவு, நாசம் தொடரவே செய்யும். நாடு பாதாளத்தில் தள்ளப்படுவதும் தவிர்க்க முடியாததொன்றாகவே அமையும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.