பட்டலந்த படுகொலைகள்: “பிரதமரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டிருக்கும்”
வாசுவின் கருத்தால் சபையில் சர்ச்சை
பட்டலந்த படுகொலைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்தியிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டிருக்குமெனவும் ஆகவே, ரணில் நாட்டை விட்டு தப்பியோட வேண்டிய ஒரே வழிமுறை மட்டுமே உள்ளது என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்த கருத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் வாசுதேவ எம்.பிக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விசாரணைக்குழுக்கள் திருத்த சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே வாசுதேவ நாணயக்கார எம்.பி. பட்டலந்த விசாரணை ஆணைக்குழு குறித்து பேசினார். இதன்போது,
விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பில் இன்று இங்கு விவாதிக்கப்படுகின்றன. இதில் சாதாரண விசாரணை ஆணைக்குழு மற்றும் விசேட விசாரணை ஆணைக்குழு ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன. விசாரணை ஆணைக்குழுக்களை துரிதப்படுத்துவதன் மூலமாக விசாரணைகளை துரிதப்படுத்த முடியும் என்பதே இப்போது அரசாங்கம் முன்வைக்கும் தர்க்கமாகும். எனினும் இதுவரை விசாரணை ஆணைக்குழுவிற்கு எத்தனை முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன? ஏன் இத்தனை நாட்களாக முன்னெடுக்கவில்லை? இதன் பின்னணியில் பல காரணிகள் இருக்கலாம். அது என்ன என்பது குறித்து எமக்குத் தெரியாது. ஆனால் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவை எமக்கு உள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இதுவரை எத்தனை முறைப்பாடுகளை விசாரிக்காது வைத்துள்ளது? ஏன் அவ்வாறு செய்துள்ளது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது.
நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தேன். அதேபோல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்தேன். அது குறித்து வாக்குமூலம் பெற்றனர். ஆனால் இதுவரை அதுகுறித்து எந்த முன்னகர்வும் இல்லை. நான் பொய் சொல்லியிருந்தால் எனக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. அப்படியென்றால் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. அப்படியென்றால் அடுத்ததாக நீதிமன்றத்தை நாட வேண்டிய ஒன்றே உள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான பட்டலந்த விசாரணை அறிக்கை என்னவானது? விசாரணை ஆணைக்குழு பரிந்துரைகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை? என கேள்வி எழுப்பியபோது குறுக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் எந்த ஆணைக்குழுவையும் நிராகரிக்கவில்லை. அவர் சாட்சியமளித்துள்ளார். உங்களின் அரசாங்க காலத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கைகள் அமுல்படுத்தப்பட்டன. அத்துடன் பிரதமர் உள்ளிட்டவர்கள் கூட ஆணைக்குழுக்கள் முன்பாக சென்று வாக்குமூலமளித்துள்ளனர். மத்திய வங்கிபிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவின் முன்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட ஆஜராகி வாக்குமூலமளித்தார் என குறிப்பிட்டார்.
இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த வாசுதேவ எம்.பி., ஆணைக்குழு பரிந்துரைகளை ஏன் நிறைவேற்றவில்லை என கூறியபோது எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவிற்கும் பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவிற்கும் வித்தியாசம் தெரியாத நபர்களிடம் பேசி அர்த்தமில்லை என குறிப்பிட்டார்.
இதன்போது மீண்டும் கருத்து தெரிவித்த வாசுதேவ எம்.பி., நீங்கள் இவ்வாறு நழுவிக்கொண்டிருங்கள். உங்களுக்கு இப்போது நாட்டை விட்டு தப்பியோடும் ஒரே வழிமுறை மட்டுமே உள்ளது. இந்த அறிக்கை தகவல் வெளிவரும் போது அதற்கான சட்டம் செயற்படும் போது பிரதமரின் பிரஜாவுரிமை பறிக்கப்படும் நிலைமை உருவாகும். ஆகவே அவர் தப்பியோட வேண்டிவரும். விசாரணை ஆணைக்குழு பரிந்துரையில் பிரதமரின் பிரஜாவுரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற காரணியே கூறப்பட்டுள்ளது. ஆகவே அதனை நிறைவேற்ற நேரிடும். நீதிமன்றம் இதில் சம்பந்தம் இல்லை, ஆணைக்குழுவே சம்பந்தப்பட்டுள்ளது எனக் கூறிய போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி சபையில் கூச்சலிட்டு விவாதிக்க ஆரம்பித்தனர்.
இதன்போது கூச்சலின் மத்தியில் உரையாற்றிய வாசுதேவ எம்.பி., நீங்கள் இறுதியாக நீதிமன்றத்தை சாட்டி தப்பித்துக்கொள்ள வேண்டியுள்ளது. உங்களின் ஒரேயொரு முகாம் இப்போது நீதிமன்றம் மட்டுமே. மக்கள் மத்தியில் செல்ல முடியாதுள்ளது எனக் குறிப்பிட்டார்.
-Vidivelli