நிதிப் பற்றாக்குறை காரணமாக உலக உணவுத் திட்டம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை மற்றும் காஸா பள்ளத்தாக்கிலுள்ள அதன் சில பயனாளிகளுக்கான உதவியினை இடை நிறுத்தியுள்ளது அல்லது குறைத்துள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தினூடான உதவி சுமார் 27,000 பலஸ்தீனர்களுக்குக் கிடைக்காது என அமைப்பின் பலஸ்தீன ஆள்புலப் பிரதேசத்திற்கான பணிப்பாளர் ஸ்டீபன் கோர்னி தெரிவித்தார்.
காஸாவிலுள்ள 110,000 பேர் உள்ளடங்கலாக மேலும் 165 பேர் வழக்கமான தொகையில் 80 வீத உதவியினைப் பெறுவார்கள் என கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவர் தெரிவித்தார்.
கடந்த நான்காண்டுகளாகப் படிப்படியாகக் குறைவடைந்துவந்த நன்கொடைத் தொகை காரணமாகவே இந்த குறைப்புக்கள் தீர்மானிக்கப்பட்டன. அமெரிக்காவின் உதவி நிறுத்தம் இதில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
2018 ஆம் ஆண்டு காஸா மற்றும் மேற்குக்கரையினைச் சேர்ந்த 250,000 மக்களுக்கு உலக உணவுத் திட்டம் உதவியளித்திருந்தது.
தேவையான அத்தியாவசியப் பொருட்களில் சிலவற்றையே கொள்வனவு செய்வதாக மேற்குக் கரையின் தென்பகுதியிலுள்ள ஹெப்ரோனுக்கு அருகில் அமைந்துள்ள யட்டா கிராமத்தைச் சேர்ந்த மஹா அல்-நவாஜா தெரிவித்தார்.
12 பேர் கொண்ட தன் கூட்டுக் குடும்பத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குத் தனக்கு உதவும் உலக உணவுத்திட்ட அட்டை பற்றிக் குறிப்பிட்ட 52 வயது தாயான அவர், ‘கடந்த டிசம்பர் மாதம் எனது அட்டையினை அவர்கள் புதுப்பிக்கவில்லை’ எனத் தெரிவித்தார்.
அத்தாயின் குடும்ப உறுப்பினர்கள் தொழிலின்றி இருக்கின்றனர்.
எனது மகன்களுக்கு இஸ்ரேலினுள் செல்வதற்கு அனுமதியில்லை, அவ்வப்போது எனது கணவருக்கு அனுமதி கிடைக்கின்றது. அந்த சந்தர்ப்பங்களில் நாம் சிறிது பணத்தினை உழைக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேற்குக்கரையில் வேலையற்றோர் வீதம் 18 ஆகும். சில பலஸ்தீனர்கள் உயர் சம்பளத்திற்காக இஸ்ரேலில் பணியாற்ற விரும்புகின்றனர். எனினும், அதற்கு இஸ்ரேலின் அனுமதி பெறப்பட வேண்டும்.
-Vidivelli