இஸ்ரேலின் சர்ச்சைக்குரிய இரகசிய நடவடிக்கை ஹமாஸ் அமைப்பின் தொடர்பாடல்களை ஒட்டுக் கேட்பதற்கான முயற்சியாகும் என அவ்வமைப்பின் இராணுவப் பிரிவு தெரிவித்துள்ளது.
புலனாய்வுத் தகவல்களைச் சேகரிக்கும் நடவடிக்கை என இஸ்ரேலினால் தெரிவிக்கப்படும் நவம்பர் 11 விசேட படை நடவடிக்கையுடன் தொடர்புபட்ட இரகசியப் படையினர் தென்பகுதி காஸா பள்ளத்தாக்கிலுள்ள கான் யூனிஸ் பகுதியில் அடையாளம் காணப்பட்டதையடுத்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக காஸாவினை ஆட்சி செய்துவரும் பலஸ்தீனக் குழுவான ஹமாஸ் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தது.
துப்பாக்கி மோதல்கள் காரணமாக இஸ்ரேலியப் படைவீரர் ஒருவரும், உள்ளூர் ஹமாஸ் இராணுவத் தளபதி உள்ளடங்கலாக ஏழு பலஸ்தீனர்களும் கொல்லப்பட்டனர்.
15 பேர் கொண்ட எலைட் இஸ்ரேல் இராணுவப் பிரிவுப் படையினர் எல்லை வேலிக்கு ஊடாக காஸாவினுள் ஊடுருவி உள்ளூர் தர்ம ஸ்தாபனம் ஒன்றின் வாகனங்களைப் போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் பயணித்துள்ளனர் என எஸ்ஸடீன் அல்-கஸ்ஸாம் படையணியின் பேச்சாளர் அபூ ஒபைதா தெரிவித்தார்.
காஸா பள்ளத்தாக்கில் இடம்பெறுகின்ற எதிர்ப்புணர்வு வலையமைப்பின் தொடர்பாடல்கள் தொடர்பான உளவுத் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான முறைமையொன்றை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக இருந்தது எனத் தெரிவித்த அபூ ஒபைதா, அப் படையினர் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் காணொலியையும் காட்சிப்படுத்தினார்.
அக் குழுவினரால் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் ஹமாஸ் அமைப்பினால் கைப்பற்றப்பட்டன. செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோர் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் அளிக்கப்படும் எனவும் அபூ ஒபைதா உறுதியளித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கான் யூனிஸ் சம்பவத்தினையடுத்து 45 பலஸ்தீன ஒத்துழைப்பாளர்களைக் கைது செய்ததாக ஹமாஸ் அறிவித்தது.
இந்தச் செயற்பாட்டுடன் தொடர்புபடுத்தி எட்டுப் பேரினதும், இரண்டு வாகனங்களினதும் புகைப்படங்களை ஏலவே ஹமாஸ் வெளியிட்டுள்ள நிலையில், இதனை மீள் பிரசுரம் செய்ய வேண்டாம் என இஸ்ரேலிய இராணுவப் பிரிவு பொதுமக்களிடமும் ஊடகங்களிடமும் இஸ்ரேல் கேட்டுக்கொண்டுள்ளது.
-Vidivelli