கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்பு சபையில் அதன் வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிபுணர் குழுவின் ஐந்து அறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பை வரைவது தொடர்பில் அடுத்து முன்னெடுக்கப்பட வேண்டிய செயன்முறைகளைத் தீர்மானிப்பது அரசியலமைப்பு சபையின் பொறுப்பு என்று குறிப்பிட்டார்.
தனது தலைமையிலான வழிநடத்தல்குழு அதன் பணியை பூர்த்திசெய்துவிட்டது என்று கூறிய அவர், நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களில் சகல கட்சிகளினாலும் இணக்கப்பாட்டுக்கு வரக்கூடிய விடயங்களைத் தெரிவுசெய்து கருத்தொருமிப்புக்கு வந்து அரசியலமைப்பு வரைவொன்றை அரசியலமைப்பு சபை தயாரிக்கலாமென்று விளக்கமளித்தார்.
2015 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பல்வேறு முரண்பாடுகள், தடங்கல்களுக்கு மத்தியில் கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகள் பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கைகளுடன் ஒரு தீர்க்கமான கட்டத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, அந்த செயன்முறைகளின் எதிர்கால முனனோக்கிய நகர்வுகள் சாத்தியமா என்ற கேள்வி தற்போதைய அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் தவிர்க்கமுடியாமல் எழுகிறது. முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக் ஷ அரசியலமைப்பு சபையில் வெள்ளியன்று உரையாற்றியபோது புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளுக்கு தனது அணி ஆதரவு தரப்போவதில்லை என்பதை தெட்டத் தெளிவாகக் கூறிவிட்டார்.
புதிய அரசியலமைப்பொன்றை வரையும் பணிகளை முன்னெடுப்பதற்குரிய நியாயபூர்வத்தன்மை இன்றைய அரசாங்கத்துக்கு இல்லை என்று அவர் கூறினார். புதிய தேர்தலொன்றில் நாட்டு மக்களின் ஆணையைப்பெற்ற பின்னரே அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளை ஆரம்பிக்க வேண்டும். பொதுத்தேர்தலின்போது இரு பிரதான அரசியல் அணிகளும் அவற்றின் அரசியலமைப்பு வரைவுகளை மக்கள் முன்வைத்து அவர்கள் எந்த வரைவை அங்கீகரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும் என்றும் ராஜபக் ஷ வலியுறுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.
அவரைப் பொறுத்தவரை, விக்கிரமசிங்க தலைமையிலான தற்போதைய நிருவாகத்தை சாத்தியமானளவு விரைவாக கவிழ்த்துவிட்டு புதிய பொதுத் தேர்தலுக்குப் போவதை நோக்காகக் கொண்டே வியூகங்களை வகுக்கிறார். பிரதமரும்கூட நிபுணர் குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தவுடன் பொறுப்பு இனிமேல் தன்கையில் என்ற தொனிப்படவே பேசியிருக்கிறார்.
புதிய அரசியலமைப்பொன்றை வரைவதற்காக 2016 மார்ச்சில் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றையடுத்து அரசியலமைப்பு சபை அமைக்கப்பட்டது. அதாவது, பாராளுமன்றம் அரசியலமைப்பு வரைவுச் செயன்முறைகளுக்காக அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் சகல 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த சபையில் இருந்தார்கள். அதன் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 5இல் இடம்பெற்றது. அதன் முதல் கூட்டத்திலேயே அரசியலமைப்புடன் தொடர்புடைய அடிப்படை விவகாரங்களைக் கையாள்வதற்கென்று 21 உறுப்பினர்களைக் கொண்ட வழிநடத்தல்குழு நியமிக்கப்பட்டது.
அடுத்து அடிப்படை உரிமைகள், நீதித்துறை, நிதித்துறை, அரசாங்க சேவை, சட்டம் ஒழுங்கு மற்றும் மத்திய அரசுக்கும் பிராந்திய நிருவாகங்களுக்கும் இடையிலான உறவுகள் என்று முக்கியமான விவகாரங்களைத் தனித்தனியாக ஆராய 6 உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுக்களின் அறிக்கைகளை பிரதமர் விக்கிரமசிங்க 2016 நவம்பர் 19 அரசியலமைப்பு சபையில் சமர்ப்பித்தார். பிறகு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை 2017 செப்டம்பர் 21 சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் 5 நாட்கள் அரசியலமைப்பு சபையில் விரிவான விவாதம் நடைபெற்றது. அரசியலமைப்பு சபை இறுதியாக 2017 நவம்பர் 8 கடைசியாகக் கூடியது. இப்போது ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலம் கடந்த நிலையில் பிரதமர் வழிநடத்தல் குழுவின், நிபுணர் குழுவின் அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார். இவற்றில் மாகாண முதலமைச்சர்கள் புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைத்த யோசனைகள் மீதான அறிக்கையும் அடங்கும்.
அடுத்துவரும் நாட்களில் நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பிலான விரிவான வாதப்பிரதிவாதங்கள் மூளவிருக்கும் நிலையில் அதிலுள்ள முக்கியமான அம்சங்களைக் கவனிப்போம்.
பௌத்தமதத்திற்கு அதிமுதன்மை இடம்வழங்கப்படவேண்டும்; பௌத்த மதத்தை பேணிப்பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று நிபுணர் குழு விதந்துரைத்திருக்கும் அதேவேளை, ஏனைய மதங்களையும் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் அரசாங்கம் நடத்தவேண்டும் என்று கூறியிருக்கிறது.
நாட்டின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா என்றும் அதன் தமிழ் வடிவம் ஸ்ரீலங்கா தாயே என்றும் அமையும்.
உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரிவில் மிகவும் குறிப்பாக அவதானிக்கக்கூடியதாக இருக்கும் அம்சம் காணாமல் போவதிலிருந்து மக்களைப் பாதுகாக்கின்ற உரிமையாகும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பாராளுமன்றத்தினாலும் அமைக்கப்படவிருக்கும் இரண்டாவது சபையினாலும் கூட்டாகத் தெரிவுசெய்யப்படவேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுபவர் அத்தெரிவுக்குப் பின்னர் எந்தவொரு கட்சியின் உறுப்பினராக இருக்கமுடியாது. அவர் அரசியலில் ஈடுபடுவதும் தடைசெய்யப்படுகிறது. தற்போதைய அரசியலமைப்பின் கீழ் அல்லது எந்தவொரு முன்னைய அரசியலமைப்பின் கீழும் இரு தடவைகள் ஜனாதிபதியாகப் பதவிவகித்திருக்கக்கூடியவர் மீண்டும் தெரிவு செய்யப்படுவதற்கான தகுதியைக் கொண்டிருக்கமாட்டார்.
பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையினாலும் உத்தேச இரண்டாவது சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினாலும் நிறைவேற்றப்படக்கூடிய நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலமாக ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்கமுடியும். பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவரை உள்ளடக்கிய குழு ஜனாதிபதியொருவர் பதவியை வகிக்கப் பொருத்தமில்லாதவர் என்று ஏகமனதாகத் தீர்மானித்தாலும் அவர் பதவியிலிருந்து இறங்கவேண்டும்.
பிரதமரின் ஆலோசனையின் பேரில் அமைச்சரவையை ஜனாதிபதி நியமிப்பார். அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை பிரதமர் தீர்மானிப்பார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் உறுப்பினர் ஒருவரை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார். அந்த நம்பிக்கை என்பது பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும். பிரதமராக நியமிக்கப்படுபவர் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். பிரதமர் ஒருவரின் பதவிக்காலம் முடிவடைவதறகு முன்னதாக அவரின் பதவி. வெற்றிடமானால் பிரதமரின் கடமைகளை மேற்பார்வை செய்வதற்கு அமைச்சரவை அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி நியமிக்கலாம்.
ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டு தடவைகளில் நிறைவேற்றப்படாவிட்டால் மாத்திரமே ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைக்கமுடியும். இல்லையானால் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டும்.
உத்தேச இரண்டாவது சபையில் முதலமைச்சர்களும் ஏனைய உறுப்பினர்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார்கள் என்பதால் அரசில் மாகாணசபைகள் பெருமளவு பாத்திரத்தை வகிக்கக்கூடியதாக இருக்கும்.
இரண்டாவது சபை 55 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாகாண சபையினாலும் 5 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். எஞ்சிய 10 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படுவர். அவ்வாறு பாராளுமன்றத்தினால் தெரிவுசெய்யப்படுபவர்கள் சமூகத்தின் முன்னணிப் பிரஜைகளாக இருக்கவேண்டும்.
கலப்பு தேர்தல் முறையின் மூலமாகத் தெரிவு செய்யப்படுகின்ற 233 உறுப்பினர்களைப் பாராளுமன்றம் கொண்டிருக்கும். 140 உறுப்பினர்கள் தொகுதி அடிப்படையிலான தேர்தல் மூலம் தெரிவாவர்.
உச்சநீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களுக்கு மேலதிகமாக அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்றும் அமைக்கப்படும் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க யோசனயாகும்.
அறிக்கையின் ஆங்கிலப் பிரதியில் “ஒரு வரைவு மாத்திரமே” என்ற நீர்க்குறி காணப்படுவது நிபுணர் குழுவைப் பற்றிய மற்றுமொரு முக்கியமான அம்சமாகும். ஆனால், அரசாங்கம் அது ஒரு வரைவே அல்ல என்று அழுத்திக்கூறியிருக்கிறது.
பேராசிரியர் சூரி.ரட்ணபால, ஒஸ்ரின் புள்ளே, நவரட்ண பண்டா, என்.செல்வகுமாரன், கமினா குணரட்ன, கபில பெரேரா, சுரேன் பெர்னாண்டோ, நிரான் அங்கரெல், அசோகா குணரட்ன மற்றும் ஷமிந்திரி சப்ரமாது ஆகியோரை உள்ளடக்கியதே இந்த நிபுணர் குழுவாகும்.
-Vidivelli