எமது நாட்டுக்கு காலத்துக்கேற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற யோசனையொன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அது 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதற்கிணங்கவே பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப் படுத்தி அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டது. அதற்கான வழிநடத்தல் குழுவும் அமைக்கப்பட்டது. வழிநடத்தல் குழுவை அரசியலமைப்புச் சபையே நியமித்தது. ஆனால் இதுவரை புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகள் பூரணப்படுத்தப்படவில்லை.
கடந்த வெள்ளிக்கிழமை அரசியலமைப்புச் சபை பாராளுமன்றத்தில் கூடியவேளை வழிநடத்தல் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் வடக்கு கிழக்கு இணைப்போ, சமஷ்டியோ கிடையாது. மற்றும் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, ஒற்றையாட்சி போன்ற விடயங்களில் எந்த மாற்றங்களும் செய்யப்படமாட்டாது. புதிய அரசியலமைப்பை தயாரிக்க அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என பிரதமர் வேண்டிக் கொண்டார்.
இச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். “ஒரு இனம் இன்னுமொரு இனத்தை அடக்கி ஒடுக்கி ஆள முடியாது. இனமொன்றைப் பகைத்துக் கொண்டு ஒரு பிரிவினருக்கு மாத்திரம் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது. அவ்வாறு செய்தால் வைராக்கியமே உருவாகும்” என தெரிவித்துள்ளார்.
“தற்போதைய பாராளுமன்றத்தினால் புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியாது. தேர்தலுக்கு வாருங்கள். தேர்தலின் போது ஐக்கிய தேசிய கட்சியினால் புதிய அரசியலமைப்பு யோசனை முன்வைக்கப்படட்டும். நாங்களும் எங்கள் யோசனைகளை முன்வைக்கிறோம். மக்கள் ஆணையை இதன்போது பெற்றுக் கொள்வோம். நாட்டை பிளவுபடுத்துவதற்கா இன்றேல் பாதுகாப்பதற்கா மக்கள் ஆணை வழங்குகிறார்கள் என்று பார்ப்போம்” என சவால் விட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் கானல் நீராகவே மாறியுள்ளது. வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்படும் அரசியலமைப்பு வரைபு அரசிலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையேல் அரசியலமைப்பு சபை வழிநடத்தல் குழு மற்றும் அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாடுகள் முடிவடைந்துவிடும். 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். பின்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு மாகாண சபைகளின் கருத்துகளும் பெறப்பட்டதன் பின்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து 2/3 பெரும்பான்மை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டாலும் அதில் ஜனாதிபதி கையொப்பம் இட்டாலே அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்படும்.
இவ்வாறு பல படிகளைத் தாண்டி புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டியுள்ளது. முழு பாராளுமன்றமும் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. வழிநடத்தல் குழு 83 தடவைகள் கூடியுள்ளது. ஆனால் இதுவரை புதிய அரசியலமைப்புக்கான வரைபு தயாரிக்கப்படவில்லை.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தலைமையிலான அணியினர் இனவாத கருத்துக்களை கூறி வருகின்றனர். பிரதான பௌத்த மத பீடங்களும் இதனையே கூறியுள்ளன. இது நாட்டில் அசாதாரண நிலையினை உருவாக்கும் முயற்சியாகும். நல்லிணக்கத்தையும் இன நல்லுறவினையும் சிதைக்கும் சதியாகும்.
நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் உரிமைகளைப் பெற்று சுதந்திரமாக வாழுவதற்கான புதிய அரசியலமைப்பொன்றுக்கு அரசியல் மற்றும் இன, மத வேறபாடின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகிறோம்.
-Vidivelli