கஷ்டப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படும்
நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
நாடெங்கும் பரவலாக காணப்படும் சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்களை பலப்படுத்தி கஷ்டப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், சகலருக்கும் தூய குடிநீர் என்னும் நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கும் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தை பலப்படுத்தி கஷ்டப் பிரதேசங்களில் அதன் சேவையை பரவலாக்கும் நோக்கில் உலக வங்கியின் உதவியுடன் அத்திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் வைபத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் வைபவத்தின் போது 25 மாவட்டங்களில் பணி புரியும் 50 அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்கள் இலவசமாக வழங்கப்பட்டன. ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களும் தலா 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியுடையவையாகும்.
அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், தேசிய நீர் வழங்கல் திணைக்களம் எமது அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் ஒரு நிறுவனமாகும். அதனை மேலும் வளப்படுத்தி சமூகத்திற்கு பரவலான சேவையை வழங்குவதற்கு வசதியாக மாவட்ட அலுவலகங்களை அபிவிருத்தி செய்து வருகிறோம். மேலும் இத் திணைக்களத்தின் மூலம் கிராம மட்டத்தில் செயற்படும் சமூக நீர் வழங்கல் அமைப்புகளை பலப்படுத்துவதற்காக தொடர்ந்தும் பலவித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாடு பூராகவும் சுமார் 6000 சமூக நீர் வழங்கல் திட்டங்கள் செயற்பட்டு வந்த போதிலும், கோடை காலங்களில் சில பகுதிகளில் நீர் மூலங்கள் நீர் பற்றாக்குறை காரணமாக செயலற்று போவதையும் அவதானிக்க முடிகின்றது. சகலருக்கும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் மிலேனியம் அபிவிருத்தி இலக்கை அடைவதற்கு இக்கருத்திட்டங்களை பலப்படுத்துவதன் மூலம் அதனைச் சாத்திய
மாக்கலாம் என நினைக்கின்றேன். மேலும், எமது பிராந்திய அலுவலகங்களுக்கு வாகன வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் திரைசேறியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.
மேலும், சமூக நீர் வழங்கல் கருத்திட்டங்களை வலுப்படுத்துவதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மூலம் தொழில்நுட்பம் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
பாரிய குடிநீர் விநியோக திட்டங்களுக்கு உட்படாத பிரதேசங்களை இனங்கண்டு கஷ்டப் பிரதேச மக்களின் அவலங்களை கவனத்திற்கொண்டு சமூக நீர் வழங்கல் அமைப்புகளை பலப்படுத்துவதன் மூலம் இந்நீர் வழங்கல் திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றோம் என்றார்.
இந் நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.தௌபீக், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன,அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல், உலக வங்கி கருத்திட்டத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் எம்.யூ.கே.ரணதுங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-Vidivelli