ஐரோப்பிய கால்பந்து விளையாட்டின் மிகச் சிறந்து விளங் கும் கால்பந்து வீரருக்கான குளோப் கால்பந்து விருதை ஜுவண்டஸ் அணியின் முன்கள நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ச்சியாக 3 ஆவது தடவையாகவும் தன் வசமாக்கி வரலாற்றில் இடம்பிடித்தார்.
ஐரோப்பிய கழகங்களுக்கு இடையிலான கால்பந்து தொடர்களில் சிறந்து விளங்கும் கால்பந்து வீரர்களுக்கு வருடந்தோறும் மிக உயரிய குளோப் கால்பந்து விருது வழங்கப்படும். இதை ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் மற்றும் ஐரோப்பிய கால்பந்து வீரர்கள் சங்கம் ஆகியன இணைந்து வழங்குகின்றன.
இந்த நிலையில் 10 ஆவது குளோப் கால்பந்து விருது வழங்கும் விழா கடந்த 3ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றது. இம்முறை சிறந்த வீரருக்கான விருதுக்காக பிரான்ஸின் முன்கள வீரரும், அத்லெட்டிகா மெட்ரிட்டின் முன்கள வீரருமான அன்டோனியோ கிரீஸ்மன் , பிரான்ஸின் நட்சத்திரமும், பரிஸ் செயின்ட் ஜேர்மன் கழக வீரருமான கிலியன் எம்பாப்பே மற்றும் போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திரமும், ஜுவண்டஸ் கழகத்தின் முன்கள வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர்.
இதில் வருடத்தின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 33 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் சுவீகரித்து வரலாற்றில் இடம்பிடித்தார். அத்துடன் இந்த விருதை 5 ஆவது தடவையாகவும் தட்டிச் சென்ற அவர் இதற்கு முன் 2011, 2014, 2016 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் இவ்விருதைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனிடையே கால்பந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த வீரருக்கான விருதையும் ரொனால்டோ பெற்றுக் கொள்ள, அவருடைய முகாமையாளர் ஜோர்ஜ் மெண்டஸ் வருடத்தின் சிறந்த முகாமையாளருக்கான விருதையும் பெற்றுக் கொண்டார். மேலும் கடந்த பருவகாலத்தில் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் ஜுவண்டஸ் அணியுடனான போட்டியில் ரியல் மெட்ரிட் கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ அடித்த கோல் (Bicycle Kick) சிறந்த கோலுக்கான விருதுக்காகவும் தெரிவு செய்யப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.
-Vidivelli