மாவனெல்ல சம்பவங்களில் பெரும்பான்மை முஸ்லிம்களின் தொடர்பு இல்லை. அடிப்படைவாத முஸ்லிம்கள், சில அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச உதவிகள் மூலமே இவ்வாறான செயல்களை முன்னெடுக்கின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் சிங்கள பௌத்தர்கள் குறிப்பாக பௌத்த இளைஞர்கள் மிகவும் புத்தியுடன் தங்களது கண்டனங்களை வெளியிட வேண்டும், செயற்படவேண்டும் என பொதுபலசேனா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவனெல்லையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளால் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நாம் ஆச்சரியப்படவில்லை. குழப்பங்களுக்குள்ளாகவில்லை. ஏனென்றால் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி நாம் நன்கு அறிந்து வைத்திருந்தோம். இந்த அடிப்படைவாதத்திற்கு எதிராக நாம் பொறுப்புடன், புத்திக் கூர்மையுடனே செயற்படவேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க 2001இல் பதவியேற்றதும் புத்தசாசனம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றினை நியமித்தார். அந்த ஆணைக்குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் 2002 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. 2009 ஆம் ஆண்டில் முன்னாள் ஆளுநர் அலவி மௌலானாவும் முஸ்லிம் அடிப்படைவாதம் பற்றி பகிரங்கமாக கருத்து வெளியிட்டிருந்தார். இதுபற்றி அப்போதைய அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமையினாலேயே பொதுபலசேனா இது பற்றி மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தது.
இந்த சம்பவங்களில் பெரும்பான்மை முஸ்லிம்களின் தொடர்பு இல்லை. அடிப்படைவாத முஸ்லிம்கள் சில அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச உதவிகள் மூலம் இந்த செயல்களை முன்னெடுக்கின்றனர். இந்தக் குழுவினர் அளுத்கம, பேருவளை, கிந்தோட்டை, திகன மற்றும் கம்பளை பகுதிகளில் வன்முறைகளை ஏற்படுத்தி அவற்றை பொதுபலசேனா மீது சுமத்தினார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் சிங்கள பௌத்தர்கள் குறிப்பாக பௌத்த இளைஞர்கள் மிகவும் புத்தியுடன் இதற்கு எதிராக தங்களது கண்டனங்களை வெளியிட வேண்டும். செயற்பட வேண்டும். மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை திடீரென நிகழ்ந்த சம்பவமல்ல. எமது ஆட்சியாளர்களின் அசிரத்தை மற்றும் மடமைத் தனம் காரணமாக உருவெடுத்த முஸ்லிம் அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட செயலாகும்.
முஸ்லிம் அடிப்படைவாதம் தற்போது அழிக்கப்பட முடியாத பாரிய விருட்சமாக வளர்ந்துள்ளது. இதனை ஆரம்பத்திலே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாதிருக்க 2002 ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளை உடன் அமுல்படுத்த வேண்டும். இந்தக்கோரிக்கை எதிர்வரும் தேர்தல் காலங்களில் மக்களால் முன்வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-Vidivelli