அக்குறணையில் இயங்கிவரும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான CSM பாடசாலையின் இயக்குநரும் ஓய்வு பெற்ற ஆசிரியருமான ஏ.எம்.எம்.தெளபீக், தமது பாடசாலையின் செயற்பாடுகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொடர்பான சமூகத்தின் கண்ணோட்டம் தொடர்பில் வழங்கிய செவ்வியை இங்கு தருகிறோம்.
- நேர்காணல் : எஸ்.எப்.எம். ரிஸ்வான்
Q இந்தப் பாடசாலையின் ஆரம்பம் பற்றிக் கூறுங்கள்?
இப்பாடசாலை 2003 ஆம் ஆண்டு அக்குறணை குருகொடை பிரதேசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. அப்பிரதேசத்தில் போதிய இடவசதிகள் இன்மையால் 2005ஆம் ஆண்டு தற்போது இயங்கும் அக்குறணை, குடுகல பகுதிக்கு மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் 5 பேர்ச் காணியிலேயே ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான காணியை எமது அமைப்பின் ஸ்தாபகர் ஏ. எஸ். எம். ஸுபைர் தனது சொந்த நிதியில் கொள்வனவு செய்து தந்தார். பின்னர் சில கொடையாளிகளின் நிதியைக் கொண்டு 20 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்டது. போதியளவு இடவசதியைக் கொண்ட கட்டிடத் தொகுதியொன்று அமைக்கப்பட்டு தற்போது இப்பாடசாலை செயற்பட்டு வருகின்றது.
Q இந்தப் பாடசாலையை நடத்திச் செல்வதற்கான மனித, பௌதீக வளங்கள் போதுமானளவு காணப்படுகின்றதா?
இங்கு 110 மாணவர்களும் அதிபர் உட்பட 13 ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். ஆசிரியர்கள் பயிற்றப்பட்டவர்கள். மாணவர்களின் இயலுமைக்கு ஏற்ப வகுப்பறைகள் காணப்படுகின்றன. விடேமாக ‘பிசியோதெரபி’ முறையும் காணப்படுகின்றது. மாணவர்கள் தூர இடங்களிலிருந்தும் நாளாந்தம் வந்து செல்கின்றனர். தற்போது குறையாக இருப்பது தூர இடங்களிலிருந்து வந்து செல்லும் மாணவர்களுக்கு தங்குமிட வசதியில்லை. அதனையும் எதிர்காலத்தில் செய்வதற்கான திட்டம் உண்டு.
நாங்கள் மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் அறவிடுவதில்லை. எந்த இனத்தைச் சேர்ந்த மாணவர்களும் இலவசமாக அனுமதியைப் பெறமுடியும். ஆசிரியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய நிருவாக செலவுகளுக்காக மாதம் ரூபா மூன்று இலட்சம் செலவேற்படுகின்றது. இத்தொகை கொடையாளிகளிடமிருந்தே பெறப்படுகின்றது. அவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் ஈருலகிலும் வெற்றியளிப்பான்.
Q இங்கு மாணவர்கள் எவ்வாறு அனுமதிக்கப்படுகிறார்கள்?
எந்த மாணவரும் இன, வயது, பால் பாகுபாடின்றி சேர்க்கப்படுகின்றனர். அவர்களின் ஆற்றல் வேறுபாடுகளுக்கமைய வகுப்புகளில் அனுமதிக்கப்படுவர். மாணவர்களின் ஆற்றல் ஆசிரியர்கள் மூலமே இனங்காணப்படும்.
மாணவர்கள் அவர்களது வயது, பால், ஆளுமை என்பவற்றிற்கேற்ப தரம் பிரிக்கப்படுவர். பொதுவாக வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10-–15 இற்கு வரையறுக்கப்பட்டிருக்கும். சில வகுப்புகள் 02 ஆசிரியர்களைக் கொண்டு நடாத்தப்படும்.
Q இப் பாடசாலைக்கென தனியான பாடப்புத்தகம், சீருடை, என்பன உள்ளனவா?
பாடசாலை காலை 8.00 தொடக்கம் நண்பகல் 12.00 வரை நடக்கிறது. திங்கள் தொடக்கம் வியாழன் வரை இவர்களுக்கும் சம உரிமை உண்டு என்பதை நினைவுபடுத்த அரசாங்க பாடசாலை போன்று சீருடை, பாடசாலைச் சின்னம் என்பன வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக உள ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் பெற்றோருக்கு கூட இது ஓர் ஆறுதலாக அமைய வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தோம். போதிக்கப்படும் பாடங்கள் பொதுவாக உடலியல் ரீதியாகவே கூடுதலாக உண்டு. சில திறமையான மாணவர்களுக்கு அரசாங்கப் பாடப் புத்தகத்தினாலும் கற்பிக்கப்படுகின்றது.
Q பொதுவாக எப்பிரதேச மாணவர்கள் இங்கு கற்கிறார்கள்?
அக்குறணையைச் சேர்ந்த அதிக மாணவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடன் கல்ஹின்னை, குருநாகல், நீர்கொழும்பு போன்ற தூரப்பிரதேச மாணவர்களும் இங்கு கல்வி கற்கிறார்கள்.
Q இங்கு கடமையாற்றும் ஆசிரியர்கள் விசேட தேவையுடைய மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்கான பயிற்சிகளைப் பெற்றிருக்கிறார்களா?
குறிப்பாக ஆசிரியைகள் இளம்பெண்கள். இவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். தாமாகவே முன்வந்து பயிற்சிகளைப் பெற்று, வீட்டில் பிள்ளைக்கு பெற்றோர் செய்ய வேண்டிய பணிகளை இங்கே சிறப்பாக செய்கிறார்கள். எப்போதாவது கடின வார்த்தைகளை இப்பிள்ளைகளுக்கு பாவித்த வரலாறு இல்லை. இங்குள்ள அகராதியில் நீ, போ, வா என்ற வார்த்தைப் பிரயோகங்கள் இல்லை.
பாடசாலை வெள்ளிக் கிழமை விடுமுறையாக இருந்தபோதும் இப்பிள்ளைகளின் வீடுகளுக்கு குறித்த ஆசிரியைகள் சென்று பிள்ளைகளின் வீட்டு நடவடிக்கைகளை அவதானிப்பர். பெற்றோருக்குத் தேவையான ஆலோசனைகளையும், ஆறுதல்களையும் வழங்குவார்கள். சில வேளைகளில் வெளிநாடுகிளிலிருந்து குறிப்பாக இங்கிலாந்து, ஜப்பான், ஓமான் போன்ற நாடுகளிலிருந்தும் இப்பாடசாலைக்கு விசேட பயிற்சி பெற்ற நிபுணர்கள் எமது ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பார்கள். இளவயதிலேயே இத்துறையில் ஈடுபட்டிருக்கும் இவர்களைப் பாராட்டுவார்கள். ஏனைய உலக நாடுகளில் இத்தொழிலுக்கு வருபவர்கள் இளைப்பாறியவர்களாக இவர்களைக் கண்டு மெச்சுவார்கள்.
Q இப்பாடசாலைக்கு ஏதாவது அரச உதவிகள் கிடைக்கின்றனவா?
இப்பாடசாலை பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும் எந்தவொரு அரசாங்க உதவியும் கிடைப்பதில்லை. அதனை நாம் எதிர்பார்ப்பதுமில்லை. ஏற்கனவே சிலரின் உதவியோடு ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் நிதியுதவி செய்யும் சிலர் தமது பெயரைக் கூட குறிப்பிடுவதுமில்லை. அவர்களது முகம் கூட எமக்குத் தெரியாது.
Q இவ்வாறான பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் எந்தளவு தூரம் ஆர்வம் காட்டுகிறார்கள்?
இவ்வாறான பிள்ளைகளை சமூகத்திற்கு காட்டக்கூடாது என்ற பிழையான அபிப்பிராயத்தில் இன்னும் சில பெற்றோர் இருக்கிறார்கள். இது இறைவனின் தண்டனை இல்லை. அவ்வாறு எண்ணுவது தவறு. ஆனால் அந்தப் பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய அன்புத் தேவை நிச்சயமாக கிடைக்க வேண்டும். அதற்காக அப்பிள்ளைகள் ஏங்குகிறார்கள். பெற்றோரும் வீணாக நொந்துகொள்ளக் கூடாது. உங்களது இதயச் சுமையை கூட்டாக பகிர்ந்து கொள்வோம். சந்தர்ப்பத்தை பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Q இவ்வாறான பிள்ளைகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
இல்லை. இலங்கையில் குறிப்பாக எமது சமூகத்தில் அவ்வாறில்லை. இன்னும் இவ்வாறான மாற்றுத் திறமை கொண்ட பிள்ளைகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் உரிய வீதத்தில் வழங்கப்படுவதில்லை. ஆனால் வளர்ச்சியடைந்த நாடுகளில் இவர்கள் மதிக்கப்படுகிறார்கள். உரிய தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. எமது இப்பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்த ஒரு மாணவன் தனது பொற்றோருடன் ஜப்பான் நாட்டுக்கு சென்று அங்கு தொடர்ந்து கல்வி கற்று தற்போது ஒரு நிறுவனத்தில் தொழில் செய்கிறார். அண்மையில் விடுமுறையில் வந்து எங்களைச் சந்தித்தபோது அவருடைய பெற்றோர் இவ்விடயத்தைக் கூறினர். எம்நாட்டிலும் இந்நிலை உருவாக வேண்டும்.
Q இலங்கையில் இதுபோன்று இயங்கும் ஏனைய பாடசாலைகளோடு ஏதாவது தொடர்பு உண்டா?
இலங்கையில் இதுபோன்ற பதிவு செய்யப்பட்ட 11 பாடசாலைகள் இருப்பதாக அறிகிறோம். அவற்றுள் மாவனெல்லை, காத்தான்குடி பகுதிகளிலுள்ள பாடசாலைகளோடு தொடர்புண்டு. அவர்கள் இங்குள்ள பல விடயங்களை பாராட்டி தாமும் பின்பற்ற ஆலோசனை கேட்பார்கள். வெளிநாட்டுப் பாடசாலைகளின் விடயங்களை சமூக வலைதளங்களின் மூலம் அறிவோம்.
Q நீங்கள் அறிந்தவரை இவ்வாறான பிள்ளைகளின் பிறப்பிற்கான ஏதாவது மருத்துவ ரீதியான காரணங்கள் உள்ளனவா?
நான் அறிந்தவரை நெருங்கிய குடும்ப உறவுக்குள் திருமணம் செய்தல், இளவயது, வயது முதிர்ந்த அதாவது 18 வயதுக்கு முன் 35 வயதுக்குப் பின்னரான கருத்தரிப்பு மற்றும் கருத்தரிப்பு காலத்தில் முறையான சுகாதார, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படாமை என்பவற்றை காரணங்களாக அறிகிறேன். இதில் முக்கியமாக கருத்தரித்த காலத்தில் பெற்றோரின் கவனமின்மை முக்கிய காரணியாகும்.
Q இவ்வாறான பிள்ளை பிறப்பு தொடர்பாக ஏதாவது சமூக விழிப்புணர்வுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றதா?
நிச்சயமாக செய்யப்பட வேண்டிய விடயமே இது. எமது பிரதேசத்தில் சமூக சேவையில் தம்மை ஈடுபடுத்தி இருக்கும் பல வைத்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களின் உதவியைக் கொண்டு திருமணம் செய்யவிருக்கும் இளைஞர், யுவதிகள் மற்றும் புதிதாக திருமணம் முடித்தவர்களுக்கும் இவ்வாறான விழிப்புணர்வுத் திட்டங்களை தொடராக மேற்கொள்ள இருக்கிறோம்.
Q இப்பாடசாலையை தொடர்ந்து நடாத்துவதில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் எவை?
பொதுவாக தூர இடங்களிலிருந்து வரும் மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி வசதியில்லை. அது உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் தொடர்ந்து நடாத்திச் செல்ல தேவையான நிதி வசதி. இவ்வாறான பிள்ளைகள் கற்கும் இப்பாடசாலைக்கு சிலர் பெயர், முகவரி கூட அறிவிக்காமல் நிதியுதவி செய்து வருகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஈருலகிலும் அருள்புரிய வேண்டும். தொடர்ந்தும் இப்பாடசாலையைப் பற்றி அறியும் ஒவ்வொருவரும் இப்பிள்ளைகளுக்காக உதவ முன்வர வேண்டும் என அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
Q உங்களுடைய சேவைக் காலத்தில் இப்பாடசாலையில் உங்கள் இதயத்தைத் தொட்ட நிகழ்வொன்றை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
இங்கு அப்துல்லாஹ் என்றொரு மாற்றுத்திறனாளி மாணவர் இருந்தார். பொதுவாக எல்லோருடனும் சகஜமாகப் பழகக் கூடியவர். ஏந்நேரமும் கலகலப்பாக இருப்பார். திடீரென அவருக்கு ஏற்பட்டிருந்த நோயின் நிலை கூடியதால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஓரிரு தினங்களில் மௌத்தாகி விட்டார். எங்களுக்கு செய்தி கிடைத்ததும் ஏனைய மாணவர்களையும் அழைத்துக்கொண்டு செல்வதற்கு ஆயத்தமானோம். காலை நேரம் என்பதால் ஏனைய மாணவர்களுக்கு காலை உணவை வழங்கி சாப்பிட்ட பிறகு அழைத்துச் செல்வதென முடிவு செய்தோம். சிறிது நேரம் சென்ற பிறகு மாணவர்கள் சாப்பிடத் தயாரா? என ஆசிரியர்கள் கேட்டபோது, “இல்லை” என பதிலளித்தார்கள். காரணம் கேட்டபோது, “அப்துல்லாஹ் மௌத்து; சாப்பிட முடியாது” என அனைவரும் அடம் பிடிக்க, சிலர் அழுதுவிட்டனர். இந்நிகழ்வை என்னால் இன்றுவரை மறக்க முடியாது.
Q இப்பாடசாலையினூடாக சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?
இவ்வாறான பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனக்கவலையில் நாங்களும் சிறிதாவது பங்கு கொள்வோம். மாணவர்கள் இப்பாடசாலையில் தங்கியிருக்கும் குறுகிய நேரத்திற்காவது மன ஆறுதல் கொள்ளட்டும். அந்த நோக்கத்திற்காகத்தான் இப்பாடசாலை அமைக்கப்பட்டது. இதில் இவ்வூர் மக்களும் பங்குகொள்ள வேண்டும்.
குறிப்பாக இவ்வாறான பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் தயக்கமின்றி தங்களுடைய பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.
-Vidivelli