பங்களாதேஷ் பொதுத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஆளும் அவாமி லீக் கட்சி மற்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி (பி.என்.பி.) ஆதரவாளர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளில் நடைபெறும் தேர்தலில் 1,848 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
10.41 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 40,183 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கலவரங்கள் தீவிரமாக நடைபெறும் பகுதிகளில் இராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையே, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., பங்களாதேஷ் தேசிய கட்சி (பி.என்.பி.) தலைவர்களின் உதவியுடன் பொதுத் தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
பங்களாதேஷில் பொதுத்தேர்தல் நடைபெறுகின்ற இந்நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “பங்களாதேஷில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பொதுத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்“ என தெரிவித்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலை பங்களாதேஷ் தேசிய கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால், ஆளும் அவாமி லீக் கட்சி 150 இற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli