ஆப்கானிஸ்தான் தொடர்பான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறும் சாத்தியமுள்ளது.
கடந்த வியாழக்கிழமை சவூதி அரேபிய மன்னர் சல்மான், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஆகியோருக்கிடையேயான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் வகிபாகம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுவது தொடர்பில் சவூதி அரேபியாவின் முன்னணி வகிபாகத்தினை கானி பாராட்டியதோடு, அடுத்த கூட்டம் சவூதியில் நடைபெறுவது நல்லதொரு நடவடிக்கையாகும். இதைத் தொடர்ந்துவரும் முன்னெடுப்புகளுக்கான சிறந்த ஆரம்பமுமாகும் எனவும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் தலைமையிலானதும், ஆப்கானிஸ்தானுக்கே உரியதுமான சமாதான முன்னெடுப்புக்களுக்கு சவூதியின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுவதற்கு தனது அதிகாரங்களை பயன்படுத்துவதாகவும் மன்னர் உறுதியளித்துள்ளார்.
கடந்த கோடை காலத்தில் ஆப்கானிஸ்தான் யுத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உலகளாவிய இஸ்லாமிய அறிஞர்கள் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியா செய்திருந்தது.
சபை அங்கத்தவர்களும் அரசாங்கத் தூதுக்குழுவினரும் எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட சமாதான சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் திகதி தொடர்பில் குழுவின் தலைவர்களிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தலிபான் பேச்சாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹிட் தெரிவித்தார்.
இரு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, சவூதி, பாகிஸ்தான் மற்றும் அமீரக அதிகாரிகள் ஆப்கான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழிவகைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக அபுதாபியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மேற்படி கூட்டத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறினால் மாத்திரம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியுமென தலிபான் அமைப்பு தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலுள்ள 14,000 அமெரிக்கப் படையினரை அரைவாசியாகக் குறைத்து 7,000 ஆக மாற்றவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் அறிவித்து ஆதரவு நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
அமெரிக்கப் படையினரை மீண்டும் தாயகத்திற்கு வரவழைக்க வேண்டும் என ட்ரம்ப் பிரசாரம் செய்துவரும் அமெரிக்காவின் நீண்டகால யுத்தமாக 17 ஆண்டுகால ஆப்கானிஸ்தான் யுத்தம் காணப்படுகின்றது. இது தவிர 2017 ஆம் ஆண்டு சமாதான முன்னெடுப்புக்களை துரிதப்படுத்துவதற்காக மேலும் நான்காயிரம் படையினரை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli