எஸ்.என்.எம்.சுஹைல்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்தின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக கடந்த திங்களன்று 5 பேர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். இதனையடுத்து, அனைத்து கட்சிகளின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் அடங்கலாக 225 பேருக்கான பாராளுமன்ற கதிரைகள் பூர்த்தியாகின. இதற்கமைய புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன தேசியப் பட்டியல் பிரதிநிதிகளை நியமித்த பிறகு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை 22 ஆக உயர்வடைந்தது.
இலங்கை சனத்தொகையில் முஸ்லிம்கள் 9.7 வீதம் (2012 சனத்தொகை மதிப்பீட்டின்படி) ஆகும். பத்தாவது பாராளுமன்றில் 22 உறுப்பினர்கள் தெரிவானதையடுத்து பாராளுமன்றில் முஸ்லிம் பிரதிநிதித்துவமும் 9.8 வீதமாகியுள்ளது. 12 வருடங்களுக்கு முந்தைய சனத்தொகை கணக்கெடுப்புக்கும் தற்போதுள்ள முஸ்லிம் சனத்தொகைக்கும் தசம அடிப்படையிலான வித்தியாசங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அத்தோடு, முஸ்லிம் வாக்காளர் தொகை, வாக்களித்த முஸ்லிம்களின் தொகை மற்றும் செல்லுபடியான வாக்குகள் என்பவற்றில் வித்தியசங்கள் இருக்க வாய்ப்புண்டு.
ஆளும் தேசிய மக்கள் சக்தி ஊடாகவே அதிகமான முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினர். கண்டி மாவட்டத்தில் இருவரும், கொழும்பு, கம்பஹா, குருநாகல், புத்தளம் மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து தலா ஒருவருமாக நேரடியாக முஸ்லிம் பிரதிநிதிகள் தே.ம.ச. ஊடாக வெற்றி பெற்றனர். எனினும், முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் ஆளும் கட்சிக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய முடியவில்லை. இந்நிலையில், அக்கட்சிக்கு கிடைக்கப்பட்ட 18 தேசியப் பட்டியலில் ஒரு முஸ்லிம் உள்ளீர்க்கப்பட்டுள்ளார். அதன்படி, தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆதம்பாவாவுக்கு மாத்திரம் தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட்டது. எது எவ்வாறாயினும், கடந்த 2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மூலம் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் கிடைக்காத நிலையில் இம்முறை அக்கட்சி பூச்சியத்திலிருந்து எட்டாக தனது முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உயர்த்தியிருக்கிறது.
அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் கூட்டணி ஊடாக 6 முஸ்லிம் பிரதிநிதித்துவம் தேர்தல் மூலம் நேரடியாக பெற முடிந்தது. அக்கூட்டணியின் தலைமைக் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நேரடியாக 4 பிரதிநிதித்துவத்தை பெற்றது. கொழும்பில் இருவரும், திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்கள் ஊடாக ஐ.ம.ச. நேரடி பிரதிநிதித்துவத்தை பெற்றது. எனினும், கடந்த 2020 பொதுத் தோர்தலில் 5 நேரடி பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்ட நிலையில் இம்முறை கண்டி மாவட்ட நேரடிப் பிரதிநிதித்துவத்தை ஐ.ம.ச. இழந்துள்ளது. கூட்டணி ஊடாக முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பனவும் வன்னியிலும் கண்டியிலும் தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தன. எனினும், கடந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்த கூட்டணி ஊடாக முஸ்லிம் கட்சிகள் பெற்றுக் கொண்ட பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, தேசியப் பட்டியல் ஊடாக ஐக்கிய மக்கள் கூட்டணி இரு பிரதிநிதித்துவத்தை முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கியிருக்கிறது. கூட்டணி கட்சிகளான மு.கா.வுக்கும், அ.இ.ம.கா.வுக்கும் தனக்கு கிடைக்கப்பெற்ற 5 தேசியப் பட்டியலில் இரண்டை பகிர்ந்தளித்தது. கடந்த 9 ஆவது பாராளுமன்றில் தமக்கு கிடைக்கப்பெற்ற 7 தேசியப் பட்டியலில் ஒன்றை முஸ்லிம்களுக்கு வழங்கியிருந்தது. எனினும், இம்முறை ஐந்தில் இரண்டு வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா ஒவ்வொரு பிரதிநிதித்துவங்கள் கிடைத்தன. அத்துடன், ஒரு தேசியப்பட்டியலும் ஒதுக்கப்பட்டன.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஒற்றை பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டது. அத்துடன், இலங்கை தொழில் கட்சி வன்னி மாவட்டத்தில் ஒரு பிரதிநித்துவம் (மஸ்தான்) பெற்றது.
சிலிண்டர் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி சார்பில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதியும் பாராளுமன்றுக்கு தெரிவாகாத நிலையில் அக்கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியலில் ஒன்றை முஸ்லிம் சமூகத்திற்கு அந்த கூட்டணி வழங்கியுள்ளது.
இவ்வாறு அனைத்துக் கட்சிகளிலும் மொத்தமாக நேரடியாக வாக்களிப்பு மூலம் 17 மக்கள் பிரதிநிதிகள் தெரிவாகினர். அத்தோடு, கட்சிகளுக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஊடாக அனைத்துக் கட்சிகளிலுமாக 5 பேர் தேசியப் பட்டியல் ஊடாக மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியில் 159 பிரதிநிதிகளில் 8 பேர் முஸ்லிம்களாவர். இது, அக்கட்சியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளில் நூற்றுக்கு 5.03 % முஸ்லிம் பிரதிநிதிகளாவர். நேரடியாக வாக்களிப்பு மூலம் தெரிவான 141 பேரில் 7 பேர் அதாவது, நூற்றுக்கு 4.96 % இனர் முஸ்லிம்கள். தேசியப்பட்டியல் ஊடாக 18 இல் ஒன்று முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது. பட்டியல் உறுப்பினர்களில் 5.55 வீதம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் 40 பாராளுமன்ற பிரதிநிதிகளில் 8 பேர் முஸ்லிம்களாவர், இது நூற்றுக்கு 20 வீதமாகும். அத்தோடு, நேரடியாக தெரிவான 35 பேரில் 6 பேர் முஸ்லிம்களாவர், இது 17.14 வீதமாகும். அக்கூட்டணிக்கு கிடைக்கப்பெற்ற ஐந்து தேசியப் பட்டியலில் இரண்டு, அதாவது நூற்றுக்கு 40 வீதத்தை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மு.கா.வுக்கு கிடைக்கப்பெற்ற 2 பிரதிநிதித்துவமும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அத்துடன் தேசியப் பட்டியலின் ஊடாகவும் முஸ்லிம் பிரதிநிதி பாராளுமன்று தெரிவாகினார். அதேபோல், அ.இ.ம.கா. மற்றும் இ.தொ.க. மூலம் ஒரு முஸ்லிம் பிரதிநிதி என அக்கட்சிகள் ஊடாக நேரடியாக தெரிவானவர்கள் 100 வீத முஸ்லிம் பிரதிநிதித்துவமாகும்.
எனினும், புதிய ஜனநாயக முன்னணி மூன்று ஆசனங்களை நேரடியாக பெற்றுக்கொண்டது. அவர்களுக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் நேரடியாக கிடைக்காதபோதிலும் அக்கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப் பட்டியலில் ஒன்றை முஸ்லிம்களுக்கு வழங்கியது. அக்கட்சி தமக்கு தேசியப் பட்டியலில் 50 வீதத்தை முஸ்லிம் சமூகத்திற்கு ஒதுக்கியுள்ளது.
அத்தோடு, மொத்தமாக நேரடியாக தெரிவான 196 உறுப்பினர்களில் 17 முஸ்லிம் பிரதிநிதிகள் என்பது 8.67 வீதமாகும். அதேபோல், தேசியப் பட்டியல் ஊடாக தெரிவான மொத்த முஸ்லிம் உறுப்பினர்கள் தொகை ஐந்து. இது, 29 மொத்த தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தில் ஐந்து வீதமாகும். இவ்வாறு தெரிவான 225 பேரில் 22 முஸ்லிம் பிரதிநிதித்துவம் மொத்த உறுப்பினர்களில் 9.78 வீதத்தை காட்டி நிற்கிறது. எனவே, தற்போதைய இலங்கை முஸ்லிம் சனத்தொகைக்கு ஏற்ப முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றுள்ளதை காண முடிகிறது. இதன்படி, இலங்கை முஸ்லிம்களுக்கு விகிதாசார தேர்தல் முறையே மிகவும் சாதகமானதாக அமையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.
கடந்த 2020, 2015 மற்றும் 2010 பொதுத் தேர்தல்களை பார்க்கிலும் இம்முறை பிரதிநிதித்துவம் அதிகரித்து முஸ்லிம்களின் சனத்தொகைக்கும் ஏற்ப அமைந்துள்ளது. எனினும், 2000, 2001, 2004 ஆம் ஆண்டுகளில் 10 வீதத்திற்கும் அதிகமான பிரதிநிதிகள் பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கின்றனர். குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி அதிகமான முஸ்லிம்களை தேசியப் பட்டியல் ஊடாக உள்ளீர்த்தமையும் முஸ்லிம் காங்கிரஸும் தேசியப் பட்டியலை பெற்றுக் கொண்டதையும் குறிப்பிடலாம். எனினும், விகிதாசார தேர்தல் முறை மூலம் முஸ்லிம் சமூகம் பிரதிநிதித்துவத்தை ஓரளவு உறுதி செய்திருக்கின்றமையை சுட்டிக்காட்டலாம்.- Vidivelli