போர்க் குற்றவாளிகள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்து ஆணை: உலகளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்படும் இஸ்ரேலும் அமெரிக்காவும்..
எம்.எம். சுஹைர்
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி)
கடந்த நவம்பர் 21ஆம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானத்தின் படி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் இஸ்ரேலிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் களான்ட் (Yov Gallant) ஆகியோரை கைது செய்வதற்கான பிடிவிறாந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வை தொடர்ந்து இஸ்ரேலும் அதனைப் பின்புலத்தில் நின்று ஆதரிக்கும் அமெரிக்காவும் உலக அரங்கில் குறிப்பிடத்தக்க வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை ஐரோப்பாவின் சக்திமிக்க பல நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பானது மதித்து செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியம் தவிர பிரிட்டன் கனடா, பிரான்ஸ், போர்த்துக்கல், நெதர்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, சைப்ரஸ், அயர்லாந்து, பின்லாந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு எல்லையில் நெதன்யாஹு மற்றும் களான்ட் ஆகியோரில் யாரேனும் நுழைந்தால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று பகிரங்க அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்று கிட்டத்தட்ட 124 நாடுகள் கையெழுத்திட்டு ரோம் சாசனத்தின் படி உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அனைத்து பிடிவிறாந்து ஆணைகளையும் தங்கள் பிராந்தியங்களில் செயல்படுத்த இந்நாடுகள் கடமைப்பட்டுள்ளன. இச் சர்வதேச ரோம் சாசனத்தில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது தனது அறிக்கையில் “இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹூ மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த களாண்ட் ஆகியோர் மற்றவர்களுடன் இணைந்து குற்றச் செயல்களை செய்வதற்கு துணை புரிந்தார்கள் என்றும் கொலை, துன்புறுத்தல், அப்பாவி மக்களை பட்டினியால் வதைத்தல் மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றங்களை இழைத்ததன் மூலம் இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக போர்க் குற்றத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் “மற்றவர்கள்” என்று தெரிவிக்கப்படுவதானது, எனது பார்வையில் இஸ்ரேலிய அமைச்சரவை அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆளணியினர், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர், ஆயுதம் தாங்கிய படைப்பிரிவினர், மற்றும் குறிப்பாக இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் தங்கி இருப்பதாக நம்பப்படும் கொலை, துன்புறுத்தல், மற்றும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் சில நபர்கள் ஆகியோரையும் குறிக்கிறது.
மேலும் இதில் “மற்றவர்கள்” என்பதில் இக்குற்றவாளிகளுக்கு பின்னணியில் நின்று உதவும் ஐக்கிய அமெரிக்காவும் உள்ளடக்கப்பட வேண்டும். எனினும் அமெரிக்காவையோ அல்லது அதன் ஜனாதிபதி ஜோ பைடனையோ இதில் தொடர்புபடுத்துவது விவேகமற்றது என்று இன்னும் பலர் நம்புகிறார்கள்.
இதேவேளை, பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் படுகொலைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடிவிறாந்துகளையும் மீறி தினம் தினம் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
இலங்கையில் யூதர்கள் அல்லது இஸ்ரேலியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் வரவேற்கப்பட்டாலும் இலங்கையின் தேசிய நலன் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இஸ்ரேலின் ஆயுதப்படை சார்ந்த நபர்கள் இலங்கைக்குள் உள்நுழைவது தடுக்கப்பட வேண்டும். இலங்கையானது ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத போதிலும் சர்வதேச சட்டங்களை மதிக்கும் ஓர் அம்சமாக இதனை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டியது அவசியமாகும்.
2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி முதல் 2024 நவம்பர் 23ம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 44,056 பலஸ்தீன மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பெண்களினதும் சிறுவர்களினதும் எண்ணிக்கை அதிகமாகும். இதேவேளை இவ்வெண்ணிக்கையில் இஸ்ரேலின் குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்கள் உள்ளடக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி சராசரியாக ஒவ்வொரு நாளும் 108 படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது, தீர்ப்பினை பெறுவதற்கு ஆறு மாத காலங்களுக்கு மேற்பட்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தமை கவலைக்குரியது.
இந்தப் பிடியாணையானது “தெய்ப்” (Deif) என்று அறியப்படும் ஹமாசின் இராணுவ கட்டளை தளபதி இப்ராஹிம் அல் மஸ்றியின் (Ibrahim Al-Masri) மீதும் தனியான ஒரு தீர்ப்பாக விடுக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே இஸ்ரேலினால் கொல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்ட போதும் நீதிமன்றத்தினால் அது கருத்தில் கொள்ளப்படவில்லை.
சிலி நாட்டின் சர்வாதிகார தலைவராக இருந்து பல மனித உரிமை மீறல்களுக்கு துணை புரிந்ததாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு இப்படியான ஒரு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த ஜெனரல் அகஸ்டோ பினோசெட் (General Augusto Pinochet) ஒரு பயணமாக பிரித்தானியா சென்றிருந்தபோது 1998 ஆம் ஆண்டு அந்நாட்டின் லண்டன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார். அந்தக் காலப்பகுதியில் பிரித்தானியாவின் டெலிகிராப் பத்திரிகை, அவர் கைது செய்யப்படாதிருந்தால் பிரித்தானியாவின் குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் வேலை நிறுத்தம் செய்வதற்கு தயாராக இருந்தார்கள் என்று தெரிவித்திருந்தது.
தற்போது வெளியேறிச் செல்ல தயாராக இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் , சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இத் தீர்ப்பை “மூர்க்கத்தனமானது” என்று வர்ணித்திருக்கிறார். தினமும் சராசரியாக 108 பலஸ்தீனர்கள் கொல்லப்படும் நிகழ்வை அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது இதிலிருந்து வெளிப்படுகின்றது. ஏனெனில் எவ்விலை கொடுத்தாவது முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய மத்திய கிழக்கை தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதற்காக அமெரிக்கா இஸ்ரேலை ஒரு காலனித்துவ செயற்திட்டமாகவே இதுவரை பயன்படுத்தி வருகின்றது.
அதே நேரம், புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது அமெரிக்காவிற்கான புதிய இஸ்ரேலிய தூதுவராக மைக் ஹக்கபி (Mike Huckabee) யினை நியமிக்க உள்ளதாக யாஹூ (Yahoo) தகவல் தெரிவித்துள்ளது. இவர் பழமைவாத கிறிஸ்தவ போதகர்கள் மத்தியில் பிரபல்யமிக்க ஒரு நபராகவிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களில் பலர் பைபிளின் பழைய ஏற்பாட்டின் பிரகாரம், யூதர்களை கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்றும் இஸ்ரேல் அவர்களது உரிமைமிக்க தாயகம் என்றும் கூறப்படுவதை ஏற்றுக் கொள்பவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கு மதரீதியாக நாம் கவனிக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விடயம் உள்ளது . இஸ்ரேலியர்கள் தாம் நம்பிக்கை கொள்ளும் பைபிளின் பழைய ஏற்பாடு, ஆதியாகமம் 17 : 8 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வசனத்தை தவறான விளக்கவுரைக்கு உட்படுத்துகிறார்கள். அதாவது ஆபிரகாமுக்கு (நபி இப்ராஹிம் – அலை) இறைவனின் வாக்குறுதியாக வழங்கப்பட்ட ஒரு வசனமாகிய “நான் உனக்கும் (ஆபிரகாம் என்று பொருள்படும்) உனது சந்ததிக்கும் நீ தற்போது அந்நியப்படிருக்கும் கானான் (பலஸ்தீன்) முழுவதையும் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்கும் உரிமை உடைய நிலமாகக் கொடுப்பேன்” என்ற வசனத்தை தமக்கு மாத்திரம் வாக்களிக்கப்பட்ட நிலமாக பலஸ்தீன் இருப்பதாக அவர்கள் அர்த்தம் கொடுக்கின்றனர். ஆனால் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் இவ்வசனத்திற்கு மாற்றமாக உள்ள பல விடயங்களை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். பழைய ஏற்பாட்டின் ஆதியாகமம் 17:8 வசனத்தினை நாம் தனியாக எடுத்துக் கொண்டால் கூட அதில் தெளிவாக கூறப்பட்டுள்ளதாவது “ஆபிரகாம் மற்றும் அவருக்குப் பின் அவருடைய சந்ததி (அவரது பிள்ளைகள்)” என்று கூறப்படுகின்றது.
இன்னும் தெளிவாக கூறினால், இப்ராஹிம் நபியின் மகனாகிய இஸ்மாயில் நபியின் பிள்ளைகளில் அரேபியர்கள் அடங்குகிறார்கள். அவரின் பரம்பரையில் வந்த முஹம்மது நபி (அலை) அவர்கள் மூலமாக அரேபிய வழித் தோன்றல்களான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோரும் அடங்குகிறார்கள். இவ்விருசாராரையும் புறக்கணிப்பதற்காக சியோனிசவாதிகள் அவ் வசனங்களுக்கு தவறான விளக்கம் கற்பிக்கிறார்கள்.
1897ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சியோனிச கூட்டமைப்புக்கு சுமார் 108 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1917 ஆம் ஆண்டு பலஸ்தீனை ஆக்கிரமித்த பிரித்தானியாவின் காலனித்துவ சக்திகள் எழுதிய கடிதமொன்றில், பலஸ்தீனில் இஸ்ரேலை ஒரு தனி நாடாக உருவாக்க, பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று அறிவித்திருந்தது.
1917 ஆம் ஆண்டு வரை சுதந்திர பலஸ்தீனில், அரபு முஸ்லிம்கள் (81%), அரபுக் கிறிஸ்தவர்கள் (11%) மற்றும் யூதர்கள் (8%) என்ற விகிதத்தில் அனைவரும் அமைதியாகவே வாழ்ந்தனர். அதே சமயம் இஸ்ரேல் என்ற தேசம் உலக வரைபடத்திலேயே இருக்கவில்லை. ஆனால் இன்று பலஸ்தீன் ஐக்கிய நாடுகள் சபையில் “பார்வையாளர் அந்தஸ்து” மாத்திரம் பெற்ற நாடாக, அதுவும் 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஒரு வலி மிகுந்த மரணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. அதே நேரம் மேற்கின் காலனித்துவ சக்திகளால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது இனவாத தேசமாகிய இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு அதன் முழுமையான அங்கத்துவமும் பெற்று மத்திய கிழக்கிலேயே அணு ஆயுத சக்தியை கொண்டுள்ள ஒரே ஒரு நாடாக இன்று உலக அரங்கில் வீற்றிருக்கின்றது.- Vidivelli